மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

ஏழ்மையிலும் கொடையுள்ளம்: சேலம் மாணவிக்கு உறுதியளித்த முதல்வர்!

ஏழ்மையிலும் கொடையுள்ளம்:  சேலம் மாணவிக்கு உறுதியளித்த முதல்வர்!

கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்க செயினை வழங்கிய சேலம் மாணவிக்கு அவரது தகுதிக்கு ஏற்ற வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறப்பதற்காக நேற்று முன்தினம் (ஜூன் 12) சேலம் சென்றார். அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அதில் சௌமியா என்ற பட்டதாரி பெண் ஒருவர் கொடுத்த மனு முதல்வரை நெகிழ வைத்துள்ளது.

அதில்,

இரா.சௌமியா ஆகிய நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் ஓய்வுபெற்ற பணியாளர். என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர். இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை பணியிலிருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களைப் படிக்க வைக்கவும் சகோதரிகளுக்குத் திருமணம் செய்யவும் செலவு செய்துவிட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள். ஆனால், வேலை கிடைக்கவில்லை.

எனது தந்தை பணி ஓய்வு பெற்றுவந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 12.03.2020 அன்று இறந்துவிட்டார். எனது தந்தை பணி ஓய்வுபெற்ற சேமிப்பு அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காகச் செலவு செய்துவிட்டார்.

அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை, மருத்துவச் செலவு சுமார் ரூ.13 லட்சம் ஆகிவிட்டது. எங்களுக்குச் சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்தபிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளோம். எங்கள் ஆதார், விலாசம் எல்லாமே மேட்டூரில் உள்ள முகவரியில் தான் உள்ளது.

எனது தந்தைக்குப் பணி ஓய்வுத் தொகையாக ரூபாய் 7000 மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூபாய் 3000 போக ரூ. 4000 வைத்துக் குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகளுக்கு எங்களுக்கு உதவி செய்கின்ற அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.

எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் கூட போதும் என்பதைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை நிதியாகக் கொடுக்க விரும்புகிறேன்'' என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

அதுபோன்று தனது தங்க செயினை கடிதத்தோடு இணைத்துக் கொடுத்துள்ளார்.

இந்த கடிதத்தை படித்துப் பார்த்து நெகிழ்ந்துபோன முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர்க் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 13 ஜுன் 2021