மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜக போராடுமா?

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜக போராடுமா?

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜகவினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராடுவார்களா? என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. டாஸ்மாக் கடை திறப்பு குறித்து பாஜகவுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 13) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி,” தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சீரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து, தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை உருவாக்கி கொடுத்து கொரோனா தொற்றின் தாக்கம் சராசரியாக குறைக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எது மக்களுக்கு நன்மை தருகிறது என்பதை கவனத்தில் வைத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ”டாஸ்மாக் கடை திறப்பு குறித்து சிலருடைய கருத்துகளுக்கு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளைதான் அரசு செய்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஒருநாள் கூட டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்தபோது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது இந்த கடைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக சிலரால் சித்தரிக்கப்படுகிறது. இதனுடன் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு,நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். தற்போது கொரோனா குறைந்த காரணத்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை கொரோனா தாக்கம் குறையாமல் இருந்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டிருக்க மாட்டார்.

27 மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மதுபானம் வாங்க வருவோர், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இருந்து, தொற்று குறையாமல் உள்ள 11 மாவட்டங்களில் மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று மதுபானங்களை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி கொண்டுவரப்படுவதை தடுக்கவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறினார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பாஜக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், பாஜக அரசியலுக்காகவும் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்த போராட்டத்தை நடத்துவதாக கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்கும்போது கேள்வி எழுப்பாத பாஜகவினர் இங்கு ஏன் கேள்வி எழுப்புகின்றனர்.? என கேள்வி கேட்டவர், அவர்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா? மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று விமர்சித்துள்ளார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 13 ஜுன் 2021