மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது : செயலாளர் ராதாகிருஷ்ணன்

நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது : செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(ஜூன் 13) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 15,000 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாக இருந்தாலும் பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் மக்களும் ஆர்வமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 13 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. மேலும் இந்தாண்டு இறுதிக்குள் 4 அல்லது 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யபட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 25,555 ஆக்சிஜன் படுக்கைகள், 24,305 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள், 2,539 ஐசியூ படுக்கைகள் என மொத்தம் 49,000 படுக்கைகள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மூன்றாவது கொரோனா அலையை எதிர்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 1,448 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பரவும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. அது உண்மையல்ல. கொரோன இல்லாத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 13 ஜுன் 2021