மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

மாநில அரசின் நிலம்... மத்திய அரசின் பணம்..! மாட்டப்போகும் அதிமுக விஐபிக்கள் யார் யார்?

மாநில அரசின் நிலம்... மத்திய அரசின் பணம்..! மாட்டப்போகும் அதிமுக விஐபிக்கள் யார் யார்?

பத்தாண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தையும் அதனால் கிடைத்த எல்லா சுக, துக்கங்களையும் ஆண்டு அனுபவித்த அதிமுக, இப்போது ஆட்டம் காணத் துவங்கியுள்ளது. உரலுக்கு ஒரு பக்கம், மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுகவுக்கு நடப்பது முக்கோணத் தாக்குதல். ஒருபுறம் கட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் சசிகலா, மறுபுறம் சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறைகளை வைத்து இன்னும் மிரட்டிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா அரசு, ஒவ்வொரு துறையின் ஊழலையும் தோண்டிக்கொண்டிருக்கும் திமுக அரசு....இதனால் என்றைக்கு எந்தப் புற்றிலிருந்து எந்தப் பாம்பு கிளம்புமோ என்று ஆடிப்போயிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள் பலரும். அதற்கேற்ப அவர்கள் அச்சமின்றி செய்து புதைக்கப்பட்ட தவறுகளும் இப்போது மீண்டெழுந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகள், தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிபிஐ அமலாக்கத்துறை வழக்குகள் என்று டாக்டர் விஜயபாஸ்கருக்குக் கேட்கவே வேண்டாம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குமிடம், உணவை முறைப்படுத்தியதில் ஒரு நாளுக்கு 30 லட்ச ரூபாய் சேமிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் சொன்னது, அந்தத் துறையில் நடந்துள்ள பல்வேறு ஊழல்களையும் தோண்டுவதற்கான டிரைலர் ஆக பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்காக மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள ஊழல்கள் பற்றியும் ரகசிய விசாரணை துவங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் துறையின் விவகாரங்களை அறிந்தவர்கள் சிலர். இந்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் அச்சிடுவதற்குத் தரப்பட்ட ஒப்பந்தம், புதிய அரசால் ஆராயப்படும் சூழலில், இதற்கான கமிஷனாக 25 கோடி ரூபாயை கடந்த ஜனவரியிலேயே வாங்கப்பட்டு விட்டது என்று இன்னொரு புகார் பூதம் கிளம்பியிருக்கிறது. உள்ளாட்சித் துறையில் நடந்துள்ள ஊழல்களை யாருமே ஆராயவே தேவையில்லை என்கிற அளவிற்கு, லட்டு லட்டாக மேட்டர் கிடைப்பதாக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்த ஊழல்கள் ஒரு புறமிருக்க, ஒன்றிய அரசையும், மாநில அரசையும் ஒரு சேர மோசடி செய்து, அரசின் சொத்தையும், நிதியையும் அபகரித்ததாக அதிமுக விஐபிக்கள் சிலர் மீது கிளம்பியுள்ள புகார், அந்தக் கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்து விடுமென்று தோன்றுகிறது.

சென்னை மற்றும் சுற்றிலுமுள்ள பகுதிகளில், ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு எவ்வளவு என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். இதனால் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் என்பதும் சென்னைவாசிகளுக்கும் நன்றாகவே தெரியும். சமீபத்தில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிரடியாக மீட்கப்பட்டன. ஆனால் அவற்றை ஆக்கிரமித்திருந்த அதிமுக பிரமுகரான டி.நகர் முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. அதற்குக் காரணம், அவை ஆக்கிரமிப்பு மட்டுமே செய்யப்பட்டிருந்தன. ஆவணங்கள் எதுவும் மாற்றப்படவில்லை.

ஆனால் சென்னை புறநகரில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், பல ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலத்தையும், அரசு புறம் போக்கு நிலங்களையும் போலி ஆவணங்கள் தயாரித்து, பட்டா போட்டு, மாநில அரசின் நிலத்துக்கு மத்திய அரசிடம் இழப்பீடு வாங்கி விட்டார்கள் என்ற புகார்தான், கோட்டை வட்டாரத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் பீமன்தாங்கல் கிராமத்தில் 82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், போலி ஆவணங்களால் பட்டா போட்டு, அதற்கு மத்திய அரசிடம் இழப்பீடு வாங்கி விட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் இது நடந்த காலம், பட்டா மாற்றப்பட்ட அரசு நிலங்களின் பரப்பு, அதில் தொடர்புடையவர்கள் என்பதில்தான் பலவிதமான முரணான தகவல்கள் உலா வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுாரில் தற்போதுள்ள தாசில்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார்தான் இதற்கு அடிப்படை. அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர், முன்னாள் தாசில்தார், நிலத்தை விற்றவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

ஆனால் அதற்குப் பின்னும், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்குமாறு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியிருப்பதுதான், இதில் தொடர்புடையவர்கள் அரசு அதிகாரிகள் மட்டுமில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா, விஜயலட்சுமி என்று பலர் மீதும் விசாரணை துவங்கியுள்ளது. இதையெல்லாம் தாண்டி, இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்த அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதால்தான் இதை சிபிஐ விசாரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்று கோட்டை வட்டாரத்தில் தகவல் பரவியிருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் துவக்கியுள்ள விசாரணையால், அதிமுக வட்டாரமே பரபரப்பாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வில்லங்கமான இந்த விவகாரம் பற்றி விவரமறிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், பல நூறு ஏக்கர் நிலம், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்டது. நான்கு வழிச்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றுகிறார்கள் என்று தெரிந்தவுடன், அப்பகுதியிலுள்ள அரசு நிலங்களை தனியார் பெயருக்கு பட்டாவாக மாற்றி, மத்திய அரசிடம் இழப்பீடு வாங்குவதற்கு ஒரு கும்பல் களம் இறங்கியிருக்கிறது.

பஞ்சமி நிலம், அரசு புறம்போக்கு நிலம் என அரசுக்குச் சொந்தமான பல வகைப்பாடுள்ள நிலங்களுக்கும் போலி ஆவணங்களைத் தயார் செய்திருக்கிறார்கள். இதற்கு அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர், நிலம் கையகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் துவங்கி, கீழ் மட்ட அலுவலர்கள் வரை பலரும் உதவியிருக்கின்றனர். இதற்காக இவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத தொகை லஞ்சமாகத் தரப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே, இவர்கள் பெயரில் பட்டா இருந்தது போலவும் போலி ஆவணங்களைத் தயார் செய்திருக்கிறார்கள். இவ்வாறு பட்டா மாற்றப்பட்ட நிலங்களை, தங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கே பெயரளவுக்கு இரண்டு மூன்று முறை கிரயம் செய்திருக்கிறார்கள். இப்படியாக மொத்தம் 270 ஏக்கர் அரசு நிலங்களைத் தனியார் பெயருக்கு பட்டா மாற்றியிருக்கிறார்கள். அதற்குப் பின்பு, இந்த நிலங்களை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக ஒப்படைத்து, அதற்காக ஒன்றிய அரசிடமிருந்து 251 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றிருக்கிறார்கள். இது மிகப்பெரிய மோசடியாகும்.

மாநில அரசின் நிலத்தில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு தனி நபர்கள் பலரும் இழப்பீடு பெற்றிருக்கிறார்கள். ஆட்சி மேலிடத்திலிருந்து ஆதரவு இல்லாமல், இவ்வளவு பெரிய மோசடியை, அரசு அலுவலர்களால் மட்டும் நிச்சயம் செய்திருக்க முடியாது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று, நேர்மையான அதிகாரிகள் பரிந்துரைத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தை சிபிஐ ரகசியமாக விசாரிக்கத் துவங்கி விட்டது. முதற்கட்ட விசாரணையைத் துவக்கியதுமே, அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

பட்டா வழங்க வேண்டிய பொறுப்பு, வருவாய்த்துறையுடையது. மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் பொறுப்பு, நகர ஊரமைப்புத்துறைக்கு உரியது. இந்தத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், ஆர்.பி.உதயகுமாரும், பன்னீர் செல்வமும். கடந்த 2016–2021 அதிமுக ஆட்சியில்தான் இந்த மோசடி நடந்து இருப்பதால் இவர்களில் இருவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கத் துவங்கியுள்ளனர். இந்த விசாரணையில் இவர்களின் பெயர்கள் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் பெயரும் அடிபடுகிறது. இந்த மோசடி வேலைகளைச் செய்ததில், முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக சிபிஐக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் அவரை விசாரிக்கலாம் என்று, கடந்த வாரத்தில் சிபிஐ அதிகாரிகள் அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் வந்தபோது, வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகப் பதில் கிடைத்திருக்கிறது. அதற்குப் பின்னும் அவர்கள் விடாமல் வந்து கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர் கொரோனாவில் உயிரிழந்து தகனம் செய்யப்பட்டு விட்டதாக அவருடைய குடும்பத்தினர் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள். இதனால் அவருடைய மரணமே, மர்மத்துக்குரிய ஒன்றாக சிபிஐ அதிகாரிகளால் பார்க்கப்படுகிறது. குரோம்பேட்டையில் அவர் சிகிச்சை எடுத்த தனியார் மருத்துவமனையில் மின்விசிறியில் வேஷ்டியை வைத்து தூக்குப் போட்டுக்கொண்டு இறந்து விட்டதாகவும், அதை மறைத்து கொரோனாவில் இறந்ததாகக் கூறிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவியிருக்கிறது. இதுவும் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏராளமான அரசு நிலங்களை தனியார் பெயருக்கு பட்டா போட்டு, லே–அவுட் போட்டு பல நுாறு கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதிலும் தஞ்சை மாவட்டத்தின் அதிமுக முக்கிய பிரமுகரின் பெயரும், வரதராஜன் என்பவரின் பெயரும் அடிபடுகிறது. இந்த விவகாரங்களை தமிழக அரசும் இப்போது துருவ ஆரம்பித்திருக்கிறது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் நேரடியாக சிக்குவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் மோசடி செய்து மத்திய அரசிடம் இழப்பீடு பெற்றவர்கள், அவர்களுக்கு உதவிய அதிகாரிகளை விசாரிக்கும் விதத்தில் சிபிஐ விசாரித்தால் எல்லாத் தொடர்புகளும் வெளியே வந்து விடும். அப்படி வெளியே வந்தால், அதிமுகவுக்குள் பெரும் பிரளயமே வெடிக்கலாம். ஒரு வேளை இந்த விவகாரங்களை எல்லாம் சிபிஐயை வைத்து ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்துக் கொண்டு, அதிமுக தலைமையை மிரட்டுவதற்கும் கூட நாளை பயன்படுத்தப்படலாம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் தொடர்பான விவகாரம் என்பதால், ஒரு அரசு விட்டாலும் மற்றொரு அரசு உண்மைகளைத் தோண்டி எடுத்து விட முடியும். அதனால் இந்த மோசடிகளைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எளிதில் தப்பிவிட முடியாது!’’ என்றார்கள்.

ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டுமே, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. நிலைமை சீரானால் இது போன்ற விவகாரங்கள் கிளறப்படலாம். அதற்குள் இதை மொத்தமாக மூடி மறைத்து விட முயற்சிகள் நடக்கலாம். விசாரணை அதிகாரிகள் விலை போகலாம். அல்லது அரசியல் அழுத்தங்களால் அமைதியாகி விடலாம்.

ஆனால் அத்தனையையும் உடைத்துக்கொண்டு ஒன்று வெளிவரும்... அதுதான் உண்மை!

–பாலசிங்கம்

.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 13 ஜுன் 2021