மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

டாஸ்மாக் திறப்பு: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

டாஸ்மாக்  திறப்பு: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடை திறப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ட்விட்டரில், “நாளை முதல் 27 மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசு வருவாயைவிட மனித உயிர் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்த அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைப் பார்க்கும்போது, நேரத்துக்குத் தகுந்தாற்போல் ஒரு நிலைப்பாட்டினை திமுக எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் மேலோங்கி நிற்கிறது.

2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 3,000மும், உயிரிழப்புகள் 30மும் என்றிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில் 7-05-2020 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து,ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000க்கும் குறைவாகவும், உயிரிழப்பு சராசரியாக தினசரி 100 முதல் 120 என்றிருந்தபோது, சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 18-08-2020 முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

தற்போது திமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்தான் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர். ஜூன் 11ஆம் தேதி நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,759 என்றிருக்கின்ற சூழ்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 378 என்றிருக்கின்ற சூழ்நிலையில், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், மூன்று மடங்குக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் இருக்கின்ற சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவு முறைதானா என்பதை முதல்வர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசு வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில், ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவினை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 13 ஜுன் 2021