மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

ஓபிஎஸ்-இபிஎஸ்: சமரசம் பேசும் விஜயபாஸ்கர்

ஓபிஎஸ்-இபிஎஸ்: சமரசம் பேசும் விஜயபாஸ்கர்

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் 14 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே கடந்த மே 10 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கும்,ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடைபெற்ற காரசார மோதலுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எரிச்சலான ஓ.பன்னீர் செல்வம் அக்கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தக் கூட்டத்திலேயே கே.பி.,முனுசாமி உள்ளிட்டோர் வேண்டுகோள் வைத்தபோது அதை ஏற்றுக் கொள்ள மறுத்து வெளியே சென்றார் ஓபிஎஸ். அன்று மாலையே பன்னீரின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து பெற்ற எடப்பாடி, அப்போதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை நீங்கள்தான் ஏற்க வேண்டும் என்று பன்னீரிடம் வற்புறுத்தினார். ஆனால் இன்றுவரை அதற்கு பன்னீர் எந்த பாசிடிவ் ஆன பதிலையும் சொல்லவில்லை.

இந்த நிலையில்தான் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதை ஒட்டி கட்சிக்கு சட்டமன்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் 14 ஆம் தேதி சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

அண்ணன் எப்போது நகர்வார்... திண்ணை எப்போது காலியாகும் என்பது கிராமத்து பழமொழி, அதேபோல ஒருவேளை ஓபிஎஸ் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர் பதவியை ஒரேயடியாக நிராகரித்துவிட்டால் அப்பதவிக்கு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது சரியாக இருக்குமென்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் பெயரும், அதற்கு அடுத்தபடியாக கே.பி. முனுசாமி பெயரும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையில் கொறடா பதவியை முக்குலத்தோர் பதவிக்கு வழங்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் ஆகியோரது பெயர்கள் விவாதத்தில் இருக்கின்றன. இதே நேரம் தனக்கு கொறடா அல்லது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என ஏதோ ஒரு பதவி கிடைக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக இருக்கிறார்.

இதற்காக இவர் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறார். எதிர்வரும் 14ஆம் தேதிய கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேசி வரும் நிலையில், இதுகுறித்து ஓபிஎஸ் சிடமும் எடப்பாடியிடமும் ஒரு சமரச தூதர் போல தொடர்ந்து பேசி வருகிறார் விஜயபாஸ்கர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டு சில முடிவுகளை எடுக்கிறார். அங்கே பன்னீர் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. இந்த சங்கடத்தைத் தவிர்க்க ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் கூட்டத்துக்கே வராமல் இருந்தால் அந்த கூட்டத்தின் முடிவுகளே செல்லாததாகிவிடும் என்று அவரிடம் ஒரு கணக்கைச் சொல்லியிருக்கிறார்கள் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்கள்.

இதை அறிந்துகொண்ட விஜயபாஸ்கர் இதுகுறித்து ஓபிஎஸ்சிடம் பேசியிருக்கிறார். “அண்ணே...நீங்க கூட்டத்துக்கு அவசியம் வரணும்.விவாதிப்போம்.விவாதித்து முடிவெடுப்போம். உங்களை யாரும் குறைச்சு மதிப்பிடலை. அதனால நீங்க கண்டிப்பா வரணும்”என்று வற்புறுத்தியிருக்கிறார்.

இவ்வாறு எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு தன் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

-வணங்காமுடி,வேந்தன்

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

சனி 12 ஜுன் 2021