�குறுவை சாகுபடியை அதிகரிப்பதே இலக்கு: மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்!

politics

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 12) தண்ணீர் திறந்துவைத்தார்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தடையின்றி சென்று சேரும் வகையில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ரூ.65.10 கோடி மதிப்பில் 4,061.44 கிலோ மீட்டர் தூரத்துக்கு 647 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளைக் கண்காணிக்க 9 மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சீரமைப்பு பணிகளை முதல்வர் நேற்று (ஜூன் 11) ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் வட்டம் வல்லம் வடக்கு கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முதலை முத்துவாரி வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வெண்ணாற்றில் மண்திட்டுக்களை சமன்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் கிராமத்தில் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்காகச் சேலம் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார்.

இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தார். கால்வாயில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.இதுவரை மேட்டூர் அணையிலிருந்து 88 முறை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி 18 முறையும், ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பு 10 முறையும், ஜூன் 12ஆம் தேதிக்கு பிறகு 60 முறையும் டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர்கள் மேட்டூர் அணையைத் திறந்து வைத்து வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். இந்நிலையில் இரண்டாவது முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 96.8 அடியாக உள்ளது. நீர் இருப்பு 60.784 டிஎம்சி-யாக உள்ளது. தொடர்ச்சியாக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் ,அரியலூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையைத் திறப்பதன் மூலம் சரியான காலத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்கிறது. எனவே ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி பரப்பை ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் இலக்கு. பத்தாண்டுகளுக்குள் நீர் மேலாண்மையில் தன்னிறைவு என்பதற்காக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தைத் தொடும் என்றார்கள். ஆனால் அது 36 ஆயிரத்திலேயே தடுக்கப்பட்டுக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழல் உள்ளது” என்றார்.

மேலும் அவர், “கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் டாஸ்மாக் கடைகள் திறப்பும்” என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *