மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

டாஸ்மாக் கடைகள் திறப்பு: வலுக்கும் எதிர்ப்பு!

டாஸ்மாக் கடைகள் திறப்பு: வலுக்கும் எதிர்ப்பு!

கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வரும் ஜூன் 14ஆம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீக்கப்படுவதாக நேற்று மாலை முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதில் நோய்த்தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர, மற்ற 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

அதன்படி சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பியூட்டி பார்லர்கள், சலூன்கள், பூங்காக்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஜூன் 15ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் கடை திறப்பு தொடர்பாக மின்னம்பலத்தில் விரைவில் டாஸ்மாக் திறப்பு: மது விலை உயர்வு! செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி, நேற்று மாலை வெளியான அறிவிப்பில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்த அறிவிப்பும் வெளியானது.

அரசின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படிப் போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்துகொள்வதும் மிக மோசமான செயல்பாடாகும்.

ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும்.

எனவே, கொரோனா நோய்த்தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 12 ஜுன் 2021