மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

அதிமுக தலைமைக் கழகம்: சசிகலாவின் அடுத்த பிளான்!

அதிமுக தலைமைக் கழகம்: சசிகலாவின் அடுத்த பிளான்!

ஆடியோ ரிலீஸை அடுத்து அதிமுகவை மீட்பதற்கான அடுத்தடுத்த வழிகளில் தீவிரமாக பயணிக்கத் தொடங்கியுள்ளார் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரான சசிகலா.

தொண்டர்களுடன் சசிகலா பேசும் அலை பேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஓரிரு வாரங்களாக வெளியாகி வருகின்றன. அதில் சசிகலா பேசுவது அதிமுக தொண்டர்களுடன் அல்ல, அமமுக தொண்டர்களுடன் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேட்டியளித்தார். இதையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தார்.

இதையடுத்து சசிகலாவின் அலைபேசி உரையாடலில் தான் உரையாடும் நபர் அதிமுகவில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பதை அவர் மூலமே சொல்ல வைத்து, தன்னிடம் பேசுவது அதிமுகவின் தொண்டர்கள்தான் என்பதை மட்டுமல்ல, அவர்கள் அதிமுகவில் தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளும் கூட என்பதை சுட்டிக் காட்டினார். ஆனால் அவர்கள் மீது இப்போதுவரை அதிமுக தலைமை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி தனியாக வந்து அதிமுக தலைமைக் கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமல் சென்னை சுற்றுப்புற மாசெக்களுடன் ஆலோசனை நடத்தியதிலும் சசிகலா விவகாரமே பேசப்பட்டிருக்கிறது. இதன் பிறகுதான் ஜெயகுமார், சி.வி. சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் சசிகலாவுக்கு எதிரான பேட்டிகளை அளிக்க ஆரம்பித்துள்ளனர்

ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்கு முன்பிருந்தே, ‘அமமுக சசிகலா ஆகியோரை அதிமுகவுடன் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அவர் அதையே வற்புறுத்துகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதற்கு உடன்படவில்லை.

“சசிகலா அவரது ஆதரவாளர்கள் இல்லாமல் நாம் இரு பொதுத் தேர்தல்களை சந்தித்துவிட்டோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல். இந்த நிலையில் சசிகலாவை கட்சிக்குள் விட்டால் அவர் பொதுச் செயலாளராகத்தான் வருவேன் என்கிறார். ‘நான் உமி கொண்டுவர்றேன். நீ அரிசி கொண்டுவா ஊதி ஊதி திங்கலாம்’என்ற பழமொழி மாதிரிதான் இது உள்ளது. எனவே சசிகலாவின் தயவு இனி அதிமுகவுக்கு தேவையில்லை. வெற்றியோ தோல்வியோ கட்சியை சசிகலா இல்லாமல் நடத்த முடியும் என்பது நமக்கு புரிந்துவிட்டது.மீண்டும் சசிகலா வந்தால் என்ன நடக்குமென்பது உங்கள் எல்லாருக்குமே தெரியும். நான் நீங்கள் உட்பட யாருமே சுதந்திரமாக செயல்பட முடியாது. எனவே அந்த சிந்தனையே வேண்டாம்’ என்று அதிமுக பிரமுகர்களிடம் பேசி அவர்களை சசிகலாவுக்கு எதிராக பேட்டிகள் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதேநேரம் சசிகலா தரப்பில் இருந்து பன்னீர், எடப்பாடி ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு செய்தியை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

“சசிகலா இல்லாமல் நீங்கள் சந்தித்த இரு தேர்தல்களிலும் படு தோல்வி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் திமுகவை வெல்ல வேண்டுமானால் அதிமுக சசிகலா தலைமைக்கு வந்தாக வேண்டும். இரட்டைத் தலைமைகள் என்று சொல்லி தினம் தோறும் குழப்பங்களும் குளறுபடிகளும் செய்தால் கட்சிக்கு நல்லதல்ல. அதனால்தான் எல்லாரையும் அரவணைத்து செல்ல விரும்புகிறார் சசிகலா. எடப்பாடியுடன் கூட அவர் இணக்கமாக போவதையே விரும்புகிறார்.

அதை தடுத்தால் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அவர் அதிமுக தலைமைக் கழகத்துக்குச் செல்வார். அவருடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள். எடப்பாடி எதிர்த்தால் பிரச்சினை ஆகும். ஆளும் திமுக இதை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருதி அதிமுக தலைமை கழகத்தை மூடி சீல் வைக்க முயலும். அதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டுமா? அப்படி நடந்தால் கோர்ட்டில்தான் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதற்குத் தயாரா என்று எடப்பாடிக்கு சசிகலா தரப்பில் இருந்து தகவல் சொல்லி அனுப்பப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

அதிமுகவுக்கு அடுத்தடுத்த மாதங்கள் அக்னிப் பரிட்சைதான்.

-வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

சனி 12 ஜுன் 2021