மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

கொரோனா மளிகை பொருள் டெண்டர்: ஊழல் கிருமி நுழைந்துவிட்டதா?

கொரோனா மளிகை பொருள் டெண்டர்:  ஊழல் கிருமி நுழைந்துவிட்டதா?

மே 7ஆம் தேதி தொடங்கி, இந்த முப்பது நாள் ஆட்சியில் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த வகையில்தான் கொரோனா கால ஊரடங்கால் அடித்தட்டு ஏழை மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக தமிழகத்தின் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 14பொருட்கள் அடங்கிய தமிழக அரசின் இலவச மளிகைத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே முடிவெடுத்தார். மே 10 ஆம் தேதிவாக்கிலேயே இதுகுறித்த தகவல்கள் வெளிவந்தன. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி இந்த மளிகைப் பொருள் தொகுப்பை வழங்கிடத் திட்டமிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 3 ஆம்தேதி கலைஞர் பிறந்தநாளன்று அடையாளத்துக்காக இத்திட்டத்தைத் துவக்கியும் வைத்தார் முதல்வர்.

கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, ரவா ஒரு கிலோ, சீனி அரை கிலோ, உளுத்தம்பருப்பு அரை கிலோ, புளி கால் கிலோ, கடலைப் பருப்பு கால் கிலோ, கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் பொடி 100 கிராம், மிளகாய் பொடி 100 கிராம், டீ தூள் 200 கிராம், குளியல் சோப் 1, சலவை சோப் 1 என மொத்தம் 14 பொருட்கள் அடங்கிய இந்தத் தொகுப்பைபை தமிழக மக்களின் அவசர தேவைக்காக அறிவித்திருக்கிறார் முதல்வர்.

ஜூன் 3 ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டபோதும் ஜூன் 5ஆம் தேதி தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்,

“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களின் தேவையை சமாளிக்கும் பொருட்டு, 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் ஆணையிட்டு, கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இதனால், முதல் மாதக் கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் வரையில் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான வழக்குகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களின் வழக்கமான விநியோகம் ஒரு வார காலம் தாமதமாகத் தொடங்கிட நேரிட்டு, ஜூன் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

எனவே, 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் 11-6-2021 முதல் 14-6-2021 வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இந்த டோக்கன்களின் அடிப்படையில், 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15-6-2021 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் காலை 8-00 மணி முதல் நண்பகல் 12-00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்”என்று அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி.

ஆனால் கோட்டை வட்டாரத்திலோ பொருட்கள் விநியோகம் தாமதம் தொடர்பாக வேறு சில காரணங்களைக் கூறுகிறார்கள்.

”தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்காக மே 20 ஆம் தேதி டெண்டர் நடத்தப்பட்டது.

இந்த டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்களில் எல். 1 ( மிகக் குறைந்த விலையில் இந்த பொருட்களை வழங்குவது) அருணாசலா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரு பேக்கின் விலை ரூ 445 ரூபாய் என்று வழங்க முன் வந்தது. இந்த நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 20 லட்சம் கிட்டுகள் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

தலைமைச் செயலாளர் இறையன்பு ஆரம்பத்திலேயே உணவுத்துறை அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘இந்த டெண்டர்ல எந்த சர்ச்சையும் வராம பாத்துக்கங்க. ஏழை மக்களுக்காக அரசாங்கம் கொடுக்குற மளிகை பொருட்களை தரமா கொடுக்கணும். அதேநேரம் கம்பெனிகள் விலையும் குறைவா கொடுக்கணும். அதுமாதிரி பாத்துக்கங்க...” என்று வேண்டுகோளுடன் அட்வைஸ் செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் எல்.1. நிறுவனமான அருணாசலா நிறுவனத்துடன் மே 22, 24,25 தேதிகளில் அரசுத் தரப்பு அதிகாரிகள் மீண்டும் பேசுகிறார்கள். ‘நீங்கள் யாருக்கும் எதுவும் செய்ய வேண்டாம். எனவே விலையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்’என்று கேட்கிறார்கள். அவர்களும் அதையடுத்து 419 ரூபாய்க்கு குறைக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் மீண்டும் குறைக்குமாறு கேட்க, ஒருவழியாக கடைசியில் எல். 1 நிறுவனம் ஒரு கிட் 405 ரூபாய் (ஜிஎஸ்டி, பேக்கிங், சப்ளை உட்பட) என்ற விலைக்கு சம்மதிக்கிறது.

ஒட்டுமொத்த ஆர்டரையும் பொதுவாக ஒரே நிறுவனத்துக்கு அரசு டெண்டர்களில் வழங்க மாட்டார்கள். அப்படி வழங்கினால் சப்ளையில் தாமதம் ஆகும் என்பதால் எல்.1 அருணாசலா நிறுவனத்துக்கு ஒரு கோடியே 20 லட்சம் மளிகைப் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் வழங்குகிறது அரசு.

இதில் பாதியை அதாவது 60 லட்சம் மளிகை கிட்களை ஜூன் 2 ஆம் தேதிக்கு முன்னதாகக் கொடுக்க வேண்டும், மீதியை ஜூன் 14 ஆம் தேதிக்கு முன்னதாகக் கொடுக்க வேண்டும் என்று அரசு அந்த நிறுவனத்தை மே 25 ஆம் தேதி கேட்டுக் கொண்டது.

இது ஒருபக்கம் என்றால் அடுத்து எல் 2 ஆக ஐ.எஸ்.பி.என்ற நிறுவனத்திடம் 91 லட்சம் மளிகை கிட்டுகள் தயாரிக்க டெண்டர் அளிக்கப்பட்டது. ஆக மொத்தம் இரண்டு கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைகளுக்கான மளிகை பொருட்கள் வழங்க இந்த இரு நிறுவனங்களிடம் டெண்டர் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

அந்த நிறுவனங்களும் இது தொடர்பான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்க திடீரென, அந்த நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து ஒரு தகவல் செல்கிறது. “மக்களுக்கான இந்த பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் இரு நிறுவனங்களுக்கும் இந்த டெண்டரை பகிர்ந்து அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் எல். 1. அருணாசலா இம்பெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 40 லட்சம் மளிகை கிட்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. எல்.2 ஐஎஸ்பி நிறுவனத்திடம் இருந்து 20 லட்சம் மளிகை கிட்டுகளை குறைக்கப்பட்டுள்ளது’என்பதுதான் அந்தத் தகவல்.

டெண்டரின் ஆரம்பத்தில் எல் 1, எல் 2 போன்ற நிறுவனங்களிடம் பேசி விலையை குறைத்தபோது பிராப்பராக நடந்தது போல தெரிந்தது. ஆனால், எல் 3 எல் 4 போன்றவர்களுக்கு டெண்டர் பிரித்துக்கொடுக்கப்பட்ட முறைதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

டெண்டர் பிராசஸ் ஆர்டரே தாமதமாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். ஜூன் 3 ஆம் தேதி முதல்வர் மளிகைப் பொருள் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார் என்று திட்டமிட்ட நிலையில், 30 ஆம் தேதிதான் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டரே கொடுக்கிறார்கள். ஆனால் அந்த ஆர்டரில் முன் தேதியிட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆவணத்தில் அப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதை கொடுத்தது 30 ஆம் தேதிதான். ஆனால் 2ஆம் தேதிக்குள் இத்தனை லட்சம் மளிகை கிட்டுகள் வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்.

முறையாக டெண்டர் நடத்தி எல் 1, எல் 2 நிறுவனங்களை தேர்வு செய்து, அந்த நிறுவனங்களுக்கு குறுகிய கால அவகாசமே கொடுத்து அவர்களின் அழுத்தத்தை அதிகரிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான கால அவகாசத்துக்குள் கொடுக்க முடியவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, அந்த ஆர்டர்களின் எண்ணிக்கையைக் குறைத்து எல் 3, எல் 4 நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள். வெளிப்படையாக பார்த்தால் இது நிர்வாக ரீதியான நடவடிக்கை மாதிரியே தெரியும்.

ஆனால் எல் 3, எல் 4 நிறுவனங்களுக்கு ஆர்டர்களைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே எல் 1, எல் 2 நிறுவனங்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதை காரணமாகவே வைத்து எல் 3, எல் 4 நிறுவனங்களுக்கு ஆர்டர் பிரித்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் எல் 3 என்பது நாஃபெட். அதாவது National Agricultural Cooperative Marketing Federation என்ற ஒரு அரசு நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஒப்பந்தங்களை எல்லாம் எடுத்துச் செய்வது திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிறுவனம். தேர்தலுக்கு முன் திருப்பூரில் அதிரடி ரெய்டுக்கு உள்ளான இந்த நிறுவனம் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளரான சந்திரசேகருடையது. நாஃபெட்டின் ஒப்பந்தங்களை இவர்தான் எடுத்துச் செய்கிறார்.

அடுத்து எல் 4 நிறுவனம் எதுவென்று பார்த்தால் கடந்த ஆட்சியில் ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டு முறைகேடுகள் செய்ததாக புகார்களுக்கு உள்ளான கிறிஸ்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சொர்ணபூமி. இந்த நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்ட முறையும், சூழலும் சந்தேகத்தை அதிகமாக்கியிருக்கிறது.

தங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் ஆர்டர்கள் கிடைத்தாலும் பரவாயில்லை, அரசின் அடுத்தடுத்த டெண்டர்களில் கடந்த ஆட்சியைப் போலவே கோலோச்ச வேண்டும் என்று கிறிஸ்டி நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்ததன் விளைவுதான் இது. இந்த டெண்டர் குழப்பங்களால்தான், 3 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட வேண்டிய மளிகை பொருட்கள், ஜூன் 15 ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. ஆட்சியின் நிறம் மாறியிருக்கிறதே தவிர மற்ற ‘உள் விஷயங்கள்’ மாறவில்லை என்பதற்கு இந்த கொரோனா மளிகை டெண்டர் ஒரு உதாரணமாகியிருக்கிறது” என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் விளக்கம் அறிவதற்காக அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். அவரது உதவியாளர் செல்லுக்கும் தொடர்புகொண்டோம். ரிங் போய்க்கொண்டே இருக்கிறது.

கொரோனா காலத்தில் பெரும்பாலானோருக்கு வேலையில்லை. வேலை இருப்பவர்களுக்கு கூட முழுமையான ஊதியம் இல்லை. இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில்தான் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரேஷன் கடை பக்கமாக சென்று, மளிகை பொருள் வந்துடுச்சா என்று பார்த்துவிட்டு வருகிற கோடிக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்தோ வந்துடும்மா...இந்தோ வந்துடும்மா என்று ரேஷன் கடை ஊழியர்களும் அவர்களிடம் சொல்லிக் கொண்டேஇருக்கிறார்கள். ஏழை குடும்பங்களின் பசியாற்றக் கூடிய இந்த மளிகைப் பொருட்கள் தரமாக இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை முதல்வரும், உணவுத்துறை அமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா நிவாரண மளிகை பொருள் வழங்குவதற்கான டெண்டரில் கொரோனாவை விட கொடூரமான ஊழல் கிருமி உள் நுழைந்துவிடக் கூடாது என்பது இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரின் நிலைப்பாடு. ஆனால் அதன்படி நடந்திருக்கிறதா என்பதுதான் கோட்டை வட்டாரத்தில் இப்போது கொழுந்துவிட்டு எரியும் கேள்வி.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 11 ஜுன் 2021