மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

இனிசெட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவு!

இனிசெட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவு!

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூர் நிம்ஹான்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்டி, எம்எஸ், டிஎம், எம்டிஎஸ் உள்ளிட்ட மேற்படிப்புக்காக நடத்தப்படுவது இனி (INI-CET) செட் நுழைவுத் தேர்வு. இந்த தேர்வு இந்த ஆண்டு 897 இடங்களுக்காக 129 நகரங்களில் நடத்தப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது.

ஜூன் 16ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 23 மருத்துவர்கள் கொண்ட குழுவால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வரும் வேளையில் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாது. எனவே எய்ம்ஸ் நிர்வாகத்தால் நடத்தப்படும் இனி செட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். தேர்வு மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் அல்லது மருத்துவர்கள் பணி புரியும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது என்பதால், தொற்று நோய்களுக்கு மத்தியில் இந்த தேர்வை எதிர்கொள்வது பட்டதாரி மருத்துவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். கொரோனா சிகிச்சை பணியில் உள்ளதால் இந்த தேர்வை தற்போதைய சூழலில் எழுத முடியாது. தற்போது தேர்வு நடத்தப்பட்டால் பல்லாயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி விடும். எனவே தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதுபோன்று முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தட்டர், "இந்த தேர்வு தற்போது நடத்தப்பட்டால், அது மருத்துவர்களின் வாழ்க்கை மற்றும் தொழில் உரிமையைப் பாதிக்கும்" என்று அறிக்கை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து எம்பிபிஎஸ் மருத்துவர்களிடம் கோவிட் பணிகளில் ஈடுபடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதையும், நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததையும், அதனால் நீட் தேர்வு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டிய அவர், ஏன் இனிசெட் தேர்வை ஒத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து எய்ம்ஸ் சார்பில், ஒரு வருடத்தில் இரண்டு முறை இனி செட் தேர்வு நடத்தப்படும். தற்போது நடத்தப்படும் தேர்வை எதிர்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மருத்துவர்கள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட அடுத்த தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 32 மாநிலங்களில் இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்றும், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு, ஜூன் 16ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபட்டு இருப்பதையும், அவர்கள் தேர்வு மையங்களிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றுவதையும் கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்காவது தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 11 ஜுன் 2021