மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ்  கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தமிழகத்தில், சென்னை, தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களிலும்  போராட்டம் நடைபெறுகிறது.

சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.  இன்றைய நிலவரப்படி, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர்  மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மும்பையில்  பெட்ரோல் லிட்டர் ரூ.102.04க்கு விற்பனையாகிறது.  மெட்ரோ நகரங்களிலேயே மும்பையில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. மும்பையில்  டீசல் லிட்டருக்கு ரூ.94.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர்  ரூ.97.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து  ரூ.91.42ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

கடலூரில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ எட்டியுள்ளது. அம்மாவட்டத்தில்  பெட்ரோல் லிட்டர் ரூ.99.51க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு நாள் தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், விலை ஏற்றத்தைக் குறைக்க வலியுறுத்தி ஜூன் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ்  கட்சி அறிவித்தது.

அதுபோன்று இன்று காலை முதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  பெட்ரோல் பங்க்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம்

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் , பாரத் பெட்ரோல் பங்க் முன்பு  போராட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ’பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றி  நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்’ என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பொதுமக்களிடம் வழிபறி செய்வது போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக மத்திய அரசு  மீது  குற்றம்சாட்டிய கே.எஸ்.அழகிரி, ‘கிழக்கிந்திய கம்பெனியை விட கொடுமையான ஆட்சியை நடத்தி வருகிறது பாஜக’ என்றும்  விமர்சித்தார். இந்த போராட்டத்தில் விஜயவசந்த் எம்.பி.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  சென்னையில் மட்டும் 140க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார், இருசக்கர வாகனத்தைப் பாடையில் வைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்று வேலூர், சேலம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி என பல்வேறு மாவட்ட நகரங்களிலும் பெட்ரோல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக் காவலில் காங்கிரஸ் தலைவர்கள்

நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தரா மையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதுபோன்று பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அல்லு பிரசாத்தும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.டி.வேணுகோபால், டெல்லியில் நடைபெற்ற போராட்ட களத்துக்குக் குதிரை வண்டியில் வந்தார். பெட்ரோல் ,டீசல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் வகையில் குதிரை வண்டியில் வந்த அவர்,  “யுபிஏ ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரூ .9.20 ஆக இருந்தது. இப்போது அது ரூ .32 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். எரிபொருளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுபோன்று பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 11 ஜுன் 2021