மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

இணைய வசதி இல்லாதவர்களுக்கும் வாழ உரிமை உண்டு: ராகுல் காந்தி

இணைய வசதி இல்லாதவர்களுக்கும் வாழ உரிமை உண்டு: ராகுல் காந்தி

தடுப்பூசிக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்வது மட்டும் போதாது. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ஒன்றிய அரசு கொரோனாவைக் கையாளும் விதம் மற்றும் பின்பற்றி வரும் தடுப்பூசி கொள்கை குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசும் நிலையான முடிவு எடுக்காமல் பல்வேறு விதமான நிலைகளைக் கொண்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கிய ஒன்றிய அரசு 18 - 44 வயதுடையவர்களுக்கு மாநில அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவித்தது. 18 - 44 வயதுடையவர்களுக்கு மத்திய அரசே ஏன் இலவசமாகத் தடுப்பூசி வழங்கக் கூடாது என மாநில அரசுகளும், உச்ச நீதிமன்றமும் கேள்வி கேட்ட பிறகு, ஜூன் 21ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

தடுப்பூசியின் இருப்பு விவரத்தை வெளியிடக் கூடாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. தடுப்பூசி முன்பதிவைக் கட்டாயமாக்கிய அரசு, அதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

24 மணி நேரத்தில் கோவின் இணையதளத்தில் தடுப்பூசி பதிவு செய்ய ஆயிரம் முறைக்கு மேல் தேடுவோர், 50 முறைக்கு மேல் ஓடிபியைப் பெறுவோரின் கணக்கு ஒரு நாளுக்கு முடக்கப்படும். கோவின் இணையதளத்துக்குள் இருக்கும் 15 நிமிடங்களுக்குள் 20 முறைக்கு மேல் தேடுவோர் தானாகவே தளத்திலிருந்து வெளியேற்றப்படுவார் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. இணைய வசதி இல்லாத கிராமங்களில் முன்பதிவு செய்வது கடினமான ஒன்றாக இருக்கும்போது, இதுபோன்ற கட்டுப்பாடுகள் முன்பதிவு செய்வதை மேலும் கடினமாக்கும்.

இந்த நிலையில் தடுப்பூசி முன்பதிவு குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "தடுப்பூசிக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்வது மட்டும் போதாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யாமல், தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். முன்பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 11 ஜுன் 2021