மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

கட்சித் தாவும் மாசெக்கள்: விஜயகாந்த் அறிக்கை பின்னணி!

கட்சித் தாவும் மாசெக்கள்: விஜயகாந்த் அறிக்கை பின்னணி!

தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த் நேற்று (ஜூன் 10) அவசரமாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும்,கொரோனா பரவல் காரணமாகவும், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்,

இதில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாசெக்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கும் விஜயகாந்த் மேலும்,

“இதுபோன்று நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்” என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த்,

ஜூன் 2ஆம் தேதி மின்னம்பலத்தில், திமுகவுக்குச் செல்லும் தேமுதிக மாசெக்கள் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

தேர்தலுக்கு முன் மாவட்டச் செயலாளர்களில் கணிசமானோர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால், கடைசி கட்டத்தில் அதிமுக கூட்டணியும் இல்லாமல் திமுக கூட்டணியும் இல்லாமல் வேறு வழியின்றி அமமுக கூட்டணியில் நின்றது தேமுதிக. விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா கூட டெபாசிட்டை இழந்தார்.

இந்தச் சூழலில், தேமுதிகவில் இருந்தால் தங்கள் எதிர்காலம் சரியாக இருக்காது எனக் கருதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் திமுகவுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக அந்தந்த திமுக மாவட்டச் செயலாளர்களிடமும், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகின்றனர். முதற்கட்டமாகச் சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் இரண்டு பேர் திமுகவில் இணைய அப்பாயின்ட்மெண்ட் கேட்டுள்ளனர்.

இந்தத் தகவல்கள் கிடைத்த நிலையில்தான் மாவட்டச் செயலாளர்களுக்குக் கண்டிப்பான உத்தரவு போட முடியாத நிலையில், அவர்களிடம் கிட்டத்தட்ட கெஞ்சி வேண்டுகோள் வைப்பது போன்ற ஓர் அறிக்கையை தேமுதிக பொதுச் செயலாளர் வெளியிட்டிருக்கிறார்.

திமுகவுக்குச் செல்வதாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களைக் கட்சி மாறாமல் தடுக்க பிரேமலதாவே சிலரிடம் பேசி வருவதாகவும் சொல்கிறார்கள்.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 11 ஜுன் 2021