மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார் : அமைச்சர் செந்தில் பாலாஜி

மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார் : அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை உருவானால், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டன. அதனை இன்று(ஜூன் 10) அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சேலம் உருக்காலை வளாகத்தில் இன்று திறக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்துடன் சேர்த்து மாவட்டத்தில் 12,658 படுக்கைகள் வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. அதில், 7065 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்.

சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 9,404 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 957 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 தினங்களுக்குள் கொரோனா தொற்று பரவல் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கொரோனா அறிகுறி தென்பட்டு, நான்கைந்து நாட்கள் கழித்து அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்கு வருவதால், ஒருசில உயிரிழப்புகளை தவிர்க்க முடியவில்லை. இதற்காக காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தவுள்ளோம். இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கில் செயல்படுகிறோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது அலையை எதிர்கொள்கிற அளவிற்கு மருத்துவ உள்கட்டமைப்பை முதல்வர் உருவாக்கியுள்ளார். மூன்றாம் அலை வரக்கூடாது. அப்படியே வந்தாலும், அதை எதிர்கொள்ள தேவையான கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதனால் மூன்றாம் அலை வந்தாலும், அதையும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, தற்போது மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு. தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி போடப்படவில்லை.

ஊரடங்கு காரணமாக மின் கட்டணத்தை செலுத்துவதில் பொதுமக்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாத கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது கடந்த மாத கட்டணத் தொகையைச் செலுத்தலாம் அல்லது மின்சார மீட்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி அதனடிப்படையில் கட்டணம் செலுத்தலாம். இதனால் கட்டணம் அதிகம் என்ற நிலை யாருக்கும் வராது. பொதுமக்கள் விரும்பும் முறையில் கட்டணத்தை செலுத்தலாம்.

நாளை இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார். ஜூன் 12 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, நாளை முதல்வர் வருகையையொட்டி, மேட்டூர் அணையில் விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

-வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 10 ஜுன் 2021