மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுமா?

ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தற்போதுள்ள நடைமுறை படி ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மக்கள் வெளியே சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, “தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரைத்ததாகவும் , அதுபோன்று, கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அமல்படுத்த முடிவுவெடுக்கப்பட்டதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் விதம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விமர்சனம் தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறை காரணமாக வெளியிடப்பட்ட பொறுப்பான கருத்துகளாகும். அவை வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாட்டில் ஊரடங்கு என்ற ஒன்று நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்குச் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் இரு சக்கர ஊர்திகளிலும், மகிழுந்துகளிலும் சாலைகளில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. இதே வினாவைத் தான் உயர் நீதிமன்றமும் எழுப்பியிருக்கிறது. சாலைகளில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி நடமாடுவதைக் கட்டுப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆணையிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10ஆம் தேதியில் தொடங்கி இப்போது வரை ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஊரடங்கு நடைமுறையிலிருந்தாலும் கூட, ஒரு நாள் கூட அது முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதைத் தமிழக முதல்வரால் கூட மறுக்க முடியாது. ஊரடங்கு என்றால் தவிர்க்க முடியாத தருணத்தைத் தவிர வேறு எதற்காகவும் வெளியில் செல்லக்கூடாது. ஆனால், சென்னையில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அனைத்து சாலைகளிலும் சிக்னல்கள் இயக்கப்படுகின்றன என்றால், அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நம்ப முடிகிறதா? சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் செல்வதற்காக இ - பதிவு செய்ய ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் அந்த வலைத்தளமே முடங்கி விட்டது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் ஊரடங்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பதை அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் மே மாதத்தில் ஊரடங்கு அறிமுகம் செய்யப்பட்ட போது மளிகை மற்றும் காய்கறி கடைகள் 4 மணி நேரம் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இப்போது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பெரும்பாலான கடைகள் 11 மணி நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.

இவை ஒருபுறமிருக்க தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நடமாடும் கடைகளும் செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது சாலைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் நடமாடுவதையும், பயணிப்பதையும் எப்படி தடுக்க முடியும்?

டெல்லியில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 300 என்ற அளவில் குறைந்து விட்டது. கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டை விட குறைவாகத் தான் உள்ளன. ஆனால், அந்த மாநிலங்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாட்டிலும் அதே போன்ற கட்டுப்பாடுகள் இன்னும் சில வாரங்களுக்கு கடுமையாகச் செயல்படுத்தப்பட்டால் தான் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், இதை அரசும் உணரவில்லை. பொதுமக்களும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை.

இனி வரும் நாட்களிலும் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது.

தமிழக மக்களில் 70 சதவிகிதத்துக்கும் கூடுதலானோருக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு தான் கொரோனா ஆபத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். அதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகலாம். அதுவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இல்லா விட்டாலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை சென்னையில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் கூட, சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை இருந்ததை நாம் மறந்து விடக்கூடாது. ஊரடங்கைத் தமிழக அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாததும், மக்கள் கடைப்பிடிக்காததும் கொரோனாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கைக் கடுமையாகச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

வியாழன் 10 ஜுன் 2021