மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

தேர்தல் ஆணையராக யோகியின் நண்பர்: மோடி முக்கியத்துவம் குறைகிறதா?

தேர்தல் ஆணையராக யோகியின் நண்பர்: மோடி முக்கியத்துவம் குறைகிறதா?

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஏஸ் அதிகாரியான அனுப் சந்திர பாண்டே இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக நேற்று (ஜூன் 8) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று இரவு குடியரசுத் தலைவரின் உத்தரவாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் தலைமை தேர்தல் ஆணையரான சுனில் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இருக்கிறார். அவரோடு ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையராக இருக்கிறார். இந்த இரு ஆணையர்களோடு அனுப் சந்திர பாண்டே மூன்றாவது தேர்தல் ஆணையராக செயல்படுவார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனுப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

1984 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அனுப் சந்திர பாண்டே உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்தவர். அங்கே மாவட்ட கலெக்டர், நொய்டா சிறப்பு அதிகாரி மற்றும் மாநிலக் கல்வித்துறை, சுகாதாரத்துறைகளில் பல பதவிகளை வகித்து ஒன்றிய அரசிலும் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர், தொழிலாளர் நலத்துறையில் இணைச் செயலாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தவர். 2018 ஜூன் மாதம் முதல் 2019 ஆகஸ்ட் 31 வரை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தவர் அனுப் சந்திர பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கலெக்டர் முதல் தலைமைச் செயலாளர் வரை பல பொறுப்புகளை வகித்த ஓய்வுபெற்ற அதிகாரி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

“2019 பிப்ரவரியில் ஓய்வுபெற்ற உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் அனுப் சந்திர பாண்டேவுக்கு 6 மாத பணி நீட்டிப்பு கொடுத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாண்டே ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமைச் செயலாளரை நியமிக்கும் எண்ணமில்லாமல் பாண்டேவுக்கு ஆறு மாதக் கால பணி நீட்டிப்பு கேட்டு ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்தார் முதல்வர் ஆதித்யநாத். டெல்லியும் அதை ஏற்றுக்கொண்டது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நம்பகமான அதிகாரிகளில் ஒருவராக அனுப் சந்திரா இருந்தார். கிசான் கர்ஜ்வாஜி யோஜனா மற்றும் உபி முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் பாண்டே முக்கிய பங்கு வகித்தார்.

சீனியாரிட்டியில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளைத் தாண்டி யோகி ஆதித்யநாத்தால் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனுப் சந்திர பாண்டே. பதவி நீட்டிப்பும் பெற்றவர். இந்த அளவுக்கு யோகியோடு நெருக்கமான பாண்டேதான், உத்தரப்பிரதேசத்துக்குச் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடக்கும்போது இந்திய தேர்தல் ஆணையராக இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநில தேர்தலுக்கு மட்டுமல்ல... 2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலின்போதும் அனுப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையத்தின் முக்கியஸ்தராக இருப்பார். எனவே உபி தேர்தல், மக்களவைத் தேர்தல் என இரு தேர்தல்களுக்கும் பாஜக தயாராகும் முறைகளில் அலுவலக ரீதியாக பாஜக தயாராகிவிட்டது. மேலும் இப்படிப்பட்ட முக்கியமான இடத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு நெருக்கமான அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது வரும் மக்களவைத் தேர்தல் மோடியிடம் இருந்து யோகியை மையப்படுத்தி இருக்குமோ என்ற விவாதத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே யோகி ஆதித்யநாத்துக்கும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பனிப்போர் நிலவி வருவதாக பாஜகவுக்குள் பேச்சு இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி - அமித் ஷா கூட்டணியில் உத்தரப்பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் குஜராத் மயமாகவே இருக்கிறது என்று பாஜகவுக்குள்ளேயே புகைச்சல் இருக்கிறது. 2019 தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் தனக்கான இரண்டாம் இடத்தை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் போராடித்தான் பெற்றார்.

இந்தப் பின்னணியில் யோகி ஆதித்யநாத்துக்கு நெருக்கமான அதிகாரி தேர்தல் ஆணையத்தில் இடம்பெற்றிருப்பது பாஜகவுக்குள் நடக்கும் உள் அரசியல் பற்றிய யூகங்களையும் அதிகமாக்கியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு மோடியைவிட யோகிக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மோடியை முன்னிறுத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படுமென்பதால் யோகியை முன்னிறுத்துவதற்கான சமிக்ஞையாகவும் இந்த நியமனத்தைப் பார்க்க முடிகிறது" என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 9 ஜுன் 2021