மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

ஊழல் சமூகத்தை நாசமாக்கிவிடும்: நீதிமன்றம்!

ஊழல் சமூகத்தை நாசமாக்கிவிடும்: நீதிமன்றம்!

புற்றுநோயைப் போன்ற ஊழலைத் தடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அது மெல்ல மெல்லப் பரவி சமூகத்தை நாசமாக்கிவிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை துறைமுகத்தில் துணை தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் பிரபாகர். இவர் மீதான லஞ்சம் புகார் தொடர்பாக 2013ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து அவர் தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இதற்குத் துறைமுக நிர்வாகம் பிரபாகர், தன் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

எனவே விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் பிரபாகர் மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப் பட்டதாகவும் விசாரணை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார்.

இதை ஏற்க மறுத்த ஒழுங்கு நடவடிக்கை குழு மூன்று குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரபாகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்தும், 2014 ஆம் ஆண்டு துறைமுக சபை நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்தும் பிரபாகர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இந்த நோட்டீசை ரத்து செய்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தை வரன்முறை செய்து அதன் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ் வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று (ஜூன் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது துறைமுக சபை சார்பில் மூத்த வழக்கறிஞர் காஜா முகைதீன் கிஸ்தி ஆஜரானார். "சென்னை துறைமுக பணியாளர்கள் விதிகளின்படி விசாரணை அதிகாரியின் இறுதி அறிக்கையை அப்படியே ஏற்க வேண்டும் என்பது அல்ல. போதுமான காரணங்கள் இருக்கும் போது விசாரணை அதிகாரியின் அறிக்கையை ஏற்க மறுப்பதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உரிமை உள்ளது. குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதற்காக துறைரீதியான விசாரணையிலிருந்து சம்பந்தப்பட்ட நபரை விடுவிக்க வேண்டும் என்பது அல்ல. இதை உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மனுதாரர் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என்று வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதி, குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் துறை ரீதியான விசாரணையை மேற்கொள்வதில் எந்தவித தடையும் இல்லை.

குற்ற வழக்கு நிலுவையிலிருந்தாலும் துறை ரீதியான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள நீதிமன்றங்கள் அனுமதிக்க வேண்டும். குற்ற வழக்குகள், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் முடியாதபட்சத்தில் துறைரீதியான விசாரணையை முடித்து அதன் முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் வைக்கப்பட வேண்டும்.

ஒருவேளை துறை ரீதியான விசாரணை முடிவடைவதற்குள் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழக்க நேரிட்டால், துறை ரீதியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய பணப்பலன்கள் சம்பந்தப்பட்டவரின் வாரிசுகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஊழல் புற்று நோயைப் போன்றது அதைத் தடுக்காவிட்டால் மெல்ல மெல்லப் பரவி இந்த சமூகத்தை நாசமாக்கிவிடும்” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், மனுதாரரைப் பொருத்தவரை வருகிற 30ஆம் தேதியுடன் அவர் ஓய்வு வயதை அடைகிறார் என்பதால் 10 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத பட்சத்தில் துறைமுக சபை நிர்வாகம் தனது வசம் உள்ள ஆவணங்கள் மூலம் இறுதி உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்று கூறி மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 9 ஜுன் 2021