[எல்லோரும் தடுப்பூசி பெற வேண்டும்!

politics

மு.இராமனாதன்

18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வழங்கும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். பல மாநில அரசுகளும், அறிவாளர்களும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிய அரசின் முடிவை வரவேற்றிருக்கிறார்கள். இப்போதும் 25 சதவிகிதம் தடுப்பூசிகளைத் தனியாரின் பொறுப்பில் விட்டிருக்கிறது அரசு. இதையும் மறுபரிசீலனை செய்து எல்லோருக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். இத்துடன் எல்லோருக்கும் தடுப்பூசி எனும் இலக்கை எட்டுவதற்கு இன்னொரு தடையும் இருக்கிறது. மருந்து நிறுவனங்கள். அவை ஒரு சமனற்ற நிலையை உலகெங்கிலும் உருவாக்கி வைத்திருக்கிறது.

இதற்கு முன் வரலாற்றில் எந்தப் பெருந்தொற்றுக்கும் எதிராக இத்தனை தடுப்பூசிகள், அதுவும் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டதில்லை. ஆனால், கைக்கு எட்டிய மருந்தை உடலுக்குள் செலுத்த முடியாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவர்கள் வியாபாரிகள். அவர்கள் காப்புரிமை எனும் ஆயுதம் தாங்கி, தடுப்பூசிகளுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

கோவிட்டின் வீச்சும் வீரியமும் தெரிந்தவுடனேயே அறிவியலாளர்கள் உலகெங்கிலும் ஒற்றைக்கட்டாக எழுந்து நின்றனர். பைசர், மர்டோனா, ஜான்சன் முதலான தடுப்பூசிகளை உருவாக்கியது அமெரிக்கா. கோவிஷீல்டு பிரிட்டனிலும், ஸ்புட்னிக் ரஷ்யாவிலும், சினோபார்ம், சினோவாக் முதலானவை சீனாவிலும் தயாராயின. இந்தியாவும் பின்தங்கிவிடவில்லை. கோவாக்சினை உருவாக்கியது. ஆனால் இன்னும் தடுப்பூசிகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடையவில்லை.

**ஏற்றமும் தாழ்வும்**

இதிலும் வளர்ந்த நாடுகள் முன்னணியிலும் வளரும் நாடுகள் பின்னாலும் நிற்கின்றன. இப்போதைய (5.6.21) நிலவரப்படி இஸ்ரேலில் ஓர் ஊசி மட்டும் போட்டவர்கள் 60 சதவிகிதம், இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் 56 சதவிகிதம். பிரிட்டனில் இது 61 சதவிகிதம் / 42 சதவிகிதம், அமெரிக்காவில் 52 சதவிகிதம் / 42 சதவிகிதம், பிரான்சில் 44 சதவிகிதம் / 22 சதவிகிதம். இந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் கீழே இருக்கிறது. 13.8 சதவிகிதம் / 3.4 சதவிகிதம். பல ஆப்பிரிக்க நாடுகள் 0.1 சதவிகிதம் என்கிற இடத்திலேயே நிற்கிறது.

மனிதகுலம் முழுமைக்கும் ஏன் இந்தத் தடுப்பூசிகளால் சென்றடைய முடியவில்லை? தடையாய் நிற்கின்றன காப்புரிமைச் சட்டங்கள்.

**காப்புரிமையா, முற்றுரிமையா?**

ஒரு தனி நபரின் அல்லது ஒரு கூட்டமைப்பின் உழைப்பில் உருவான கண்டுபிடிப்போ, நூலோ, மருந்தோ அவர்களது சம்மதமின்றி மற்றவர்கள் பயன்கொள்வதைத் தடுப்பதுதான் காப்புரிமைச் சட்டங்களின் நோக்கம். ஆனால், மருந்துகளைப் பொறுத்தமட்டில் இது பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமை பெறுவதற்கும், உயிர் காக்கும் மருந்துகள் வறிய மக்களுக்குக் கட்டுபடியாகாத விலையில் விற்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. இதை நேரிடுவதற்காக இந்தியா தனது காப்புரிமைச் சட்டத்தை 1970இல் திருத்தியது. இதன்படி ஒரு மருந்தின் செய்முறைக்குக் காப்புரிமை உண்டு. அதன் மூலப்பொருட்களுக்குக் காப்புரிமை அவசியமில்லை. இதனால் இந்திய மருந்து நிறுவனங்கள் பல வெளிநாட்டு மருந்துக் கலவைகளைப் பின்னோக்கி நுணுகி ஆராய்ந்து, அதன் மூலப் பொருட்களைக் கண்டறிந்து, அதைப் புதிய செய்முறையில் உருவாக்குவது சாத்தியமாகியது. இந்த மருந்துகளுக்குப் புதிய பெயரில் இந்தியாவில் காப்புரிமை பெற முடிந்தது. இவற்றின் விலை மிகக் குறைவாகவும் இருந்தது. இந்திய மக்கள் பயனடைந்தனர். மருந்து உற்பத்தி இந்தியாவில் ஒரு பெரிய தொழிலாகவும் வளர்ந்தது.

இந்த நிலை 1995இல் மாறியது. அந்த ஆண்டில் உலக வணிக அமைப்பு அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பாக புதிய சட்டங்களை நிறைவேற்றியது. இதற்கு டிரிப்ஸ் (Agreement on Trade – Related Aspects of Intellectual Property Rights – TRIPS) என்று பெயர். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்படப் பல நாடுகளும் இணைந்தன. இதன்படி புதிய மருந்துகளின் மூலப்பொருட்கள், செய்முறை இரண்டும் காப்புரிமை வளையத்துக்குள் வந்தன. இதனால் இந்திய மருந்து நிறுவனங்களால் அயல்நாடுகளில் உருவாக்கப்பட்ட மருந்துகளை பின்னோக்கி ஆராய்ந்து மீட்டுருவாக்குவதைத் தொடர முடியவில்லை. ஆனால் 1970இல் தொடங்கி அடுத்த கால் நூற்றாண்டுக் காலத்தில் இந்திய மருந்துத்துறை நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதனால் இந்திய நிறுவனங்களால் புதிய மருந்துகளின் ஆராய்ச்சியில் ஈடுபடவும் அவற்றை உருவாக்கவும் முடிந்தது. மேலும் டிரிப்ஸ் வழங்கும் காப்புரிமை 20 ஆண்டுகளில் காலாவதியாகும். அப்படியான மருந்துகளை இந்தியச் சந்தையில் குறைந்த விலையில் தயாரிக்கவும் ஏற்றுமதி செய்யவும் முடிந்தது.

இந்தச் சூழலில்தான் கோவிட் வந்தது. கடந்த ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளன்று இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வணிக அமைப்பில் ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்தன. கோவிட் தடுப்பூசிகளுக்கு டிரிப்ஸ் சட்டங்களின் காப்புரிமைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். அதாவது தடுப்பூசிகளின் மூலக்கூறுகளையும் செய்முறைகளையும் மருந்து நிறுவனங்கள் வளரும் நாடுகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்படியான தளர்வுகளை ‘விதிவிலக்கான சூழல்’களில் டிரிப்ஸ் அனுமதிக்கிறது. இந்த கொரோனா காலத்தைவிட விதிவிலக்கான சூழல் வேறெதுவும் இருந்துவிட முடியுமா? இந்த அடிப்படையிலேயே இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தத் தளர்வுகளைக் கோரின. 60க்கும் மேற்பட்ட வளரும் நாடுகள் இந்தக் கோரிக்கையை ஆதரித்தன. ஆனால், மேற்குலக நாடுகளும் அவற்றின் மருந்து நிறுவனங்களும் இந்தத் தளர்வை ஏற்கவில்லை. இந்த நிலையில் இப்போது மாற்றம் வந்திருக்கிறது. அமெரிக்கா இப்போது இதற்கு இணங்கியிருக்கிறது. மே 9 அன்று கூடிய ஐரோப்பிய ஒன்றியமும் இதைக் குறித்து ஆலோசித்தது. கனடா, பிரிட்டன் முதலான நாடுகளும் தங்களது எதிர்ப்பை விலக்கிக்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக வணிக அமைப்பு பெரும்பான்மை சித்தாந்தத்தில் இயங்கவில்லை.

ஒவ்வோர் உறுப்பு நாடும் இந்தத் தளர்வை அங்கீகரிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் இணங்கினாலும் அடுத்த நாளே வளரும் நாடுகள் தடுப்பூசித் தயாரிப்பைத் தொடங்கிவிட முடியாது. குறிப்பிட்ட மருந்து நிறுவனம் மூலப் பொருட்களையும் செய்முறையையும் வளரும் நாடுகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். வளரும் நாடுகளில் அதற்கான உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். நல்வாய்ப்பாக இந்தியாவின் மருந்துத் துறை அதற்கேற்ற வகையில் வளர்ந்திருக்கிறது. அப்படி வளர்ச்சியடையாத நாடுகளுக்கு இந்தத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிற அனுமதியையும் உலக வணிக அமைப்பு வழங்க வேண்டும். போக வேண்டிய தூரம் அதிகம். எனினும் இதைச் செய்தே தீர வேண்டும்.

**இந்திய முன்மாதிரி**

சர்வதேச அளவில் உயிர் காக்கும் தடுப்பூசிக்கான காப்புரிமைத் தடையை நீக்கி உலக மக்கள் அனைவரும் பயன்பெறுவதில் இந்தியா முன்கை எடுத்துப் பணியாற்றி வருகிறது. அதேவேளையில் இந்தியா அதை உள்நாட்டிலும் செய்ய வேண்டும்.

இந்தியாவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) பங்களிப்பில் உருவானது. அதை பாரத் பயோடெக் எனும் ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. அதன் காப்புரிமையை நமது நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களுடனும் தனியார் நிறுவனங்களுடனும் அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் விரைந்து தயாரிக்க எல்லா நல்கைகளையும் வழங்க வேண்டும். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு முன்மாதிரியாக மாறும். உள்நாட்டில் தடுப்பூசிகளின் உற்பத்தியும் உயரும்.

**மு.இராமனாதன்**, எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [Mu.Ramanathan@gmail.com](mailto:Mu.Ramanathan@gmail.com)

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *