மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!

கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. கோயில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களில் வெளிப்படைதன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கோயில் சொத்துகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவிக்க ‘கோரிக்கைகளைப் பதிவிடுக’ எனும் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(ஜூன் 8)வெளியிட்டுள்ள அறிக்கையில, “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ”தமிழ் நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் தற்போது முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் ’அ’ பதிவேடு / நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியன பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இத்துறையின் இணையதளத்தில் நாளை (ஜூன் 9) வெளியிடப்படுகிறது.

இது மொத்தமுள்ள நிலங்களில் 72% ஆகும். பொதுமக்கள் இத்துறை இணையதளத்தில் ”திருக்கோயில்கள் நிலங்கள்” என்ற தலைப்பை தேர்வு செய்து, அதன்பின்னர் பட்டியலிடப்பட்டுள்ள கோயிலைத் தேர்வு செய்தவுடன் கோயிலுக்கு சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும். அந்நிலங்களின் ’அ’ பதிவேடு / நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

இது மட்டுமின்றி, பகுதியாக ஒத்துப்போகும் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத்துறை ஆவணங்களோடு ஒத்தாய்வு செய்யப்பட்டு, உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். கோயில்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களின் உரிமை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோயில்களின் பெயரிலேயே இருக்கும் வகையிலான அனைத்து தொடர் நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக எடுக்கப்படும்.

இதுகுறித்து ஏதேனும் கருத்துக்களை அல்லது கோரிக்கைகளைப் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் ”கோரிக்கைகளைப் பதிவிடுக” திட்டத்தின் கீழ் பதிவிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 8 ஜுன் 2021