மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

சங்கர மடத்தின் போன்: நிர்வாகியை நீக்கிய ஸ்டாலின்

சங்கர மடத்தின்  போன்: நிர்வாகியை நீக்கிய ஸ்டாலின்

சென்னை தென் மேற்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஆர்.பாலு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஜூன் 7 ஆம் தேதி முரசொலியில் அறிவிப்பு வெளியிட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாலு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமானவர் என்பதால் இதுபற்றிய பரபரப்பு தமிழகம் முழுக்க திமுக நிர்வாகிகளிடமும் தொற்றிக் கொண்டது.

இதுபற்றி சென்னை திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“மாவட்ட பிரதிநிதியாக இருக்கும் பாலு அவ்வப்போது திமுக தலைவரின் வீட்டுக்குச் செல்வார். உதயநிதி ஸ்டாலின் பின்னாலேயே நிற்பார். அவருக்கு அணிவிக்கப்படும் சால்வைகளை எடுத்துச் சென்று வைப்பார். இப்படி கட்சியினரிடத்தில் தான் தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்வார். உதயநிதி, அருள் நிதி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தென் மேற்கு மாவட்டச் செயலாளரும், மயிலை சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலு கட்சியின் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில், ‘ மயிலாப்பூரில் இருபது வருடங்களுக்குப் பின் ஜெயித்திருக்கிறோம். கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாட்டோடும் பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் நம்மைப் பற்றி புகார்கள் எழாத அளவுக்கு நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும். எவ்வித அத்துமீறல்களிலும் ஈடுபடக்கூடாது’என்று எச்சரித்திருந்தார்.

இந்த சூழலில்தான், மயிலாப்பூர் வள்ளீஸ்வரன் தோட்டம் பகுதியில் காமராஜ் சாலையில் சங்கரமடத்துக்கு சொந்தமான இடத்தில் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்துக்கு பக்கத்தில்தான் பாலுவின் அலுவலகம் இருக்கிறது. இதற்கிடையே சங்கர மட முக்கியஸ்தரிடமிருந்து செனடாப் சாலை முதல்வர் வீட்டுக்கு ஜூன் 5 ஆம் தேதி ஒரு போன் போயிருக்கிறது. ‘எங்க ஆஸ்பத்திரி கட்டுற இடத்துக்கு திமுகவை சேர்ந்த மாவட்டப் பிரதிநிதி பாலுங்குறவர் வந்து கமிஷன் கேட்குறார். கொடுக்கலைன்னா கார்ப்பரேஷன், மெட்ரோ வாட்டர்லேர்ந்து தொந்தரவு வரும்னு மிரட்டுறார். கொஞ்சம் என்னனு பாருங்கோ’ என்று அந்த போனில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். உளவுத்துறை மூலம் உடனே தகவல் சேகரிப்பட்டு, அடுத்த நாள் ஜூன் 6 ஆம் தேதி மாவட்டச் செயலாளரும் மயிலை சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலுவுக்கு அறிவாலயத்தில் இருந்து போன் போயிருக்கிறது. விவரத்தைச் சொல்லி, பாலுவை கட்சியில் இருந்து நீக்கப் போகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவரும் தானே கூட்டம் போட்டு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்று எச்சரித்த தகவலை தெரிவித்து, தலைமை என்ன முடிவெடுத்தாலும் சரி என்று சொல்லியிருக்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில் ஜூன் 6 ஆம் தேதி மதியம் கலைஞர் தொலைக்காட்சியில் பாலு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் ஒளிபரப்பானது. உடனடியாக சங்கர மடத் தரப்பினருக்கும் இத்தகவல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த நாள்தான் முரசொலியில் அறிவிப்பே வந்தது”என்கிறார்கள்.

லோக்கல் பிசினஸ் பிரமுகர்கள் சிலரை கொரோனா தடுப்புப் பணிகளுக்கான முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுப்பதற்காக உதயநிதியிடமும் அழைத்துச் சென்றிருக்கிறார் பாலு. அந்த வகையில் ஒரு தொழிலதிபர் உதயநிதியிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அளிக்கும்போது கூடவே இருந்து போஸ் கொடுத்தார் பாலு. அந்த போட்டோ ஜூன் 5 ஆம் தேதி முரசொலியில் வந்தது. ஜூன் 7ஆம் தேதி அவர் நீக்கப்பட்ட அறிவிப்பும் அதே முரசொலியில் வந்துவிட்டது. ஸ்டாலினின் இந்த உடனடி, அதிரடி நடவடிக்கையால் சென்னை திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் அலர்ட் ஆகியிருக்கிறார்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 8 ஜுன் 2021