மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

ஏன் இந்த பாகுபாடு?: ஆட்டோ டிரைவர் கேள்வி!

ஏன் இந்த பாகுபாடு?: ஆட்டோ டிரைவர் கேள்வி!

சென்னையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் வழக்கறிஞர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. அதே சமயத்தில் பெண் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசியமின்றி வெளியே வருபவர்களைக் கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் (ஜூன் 6) சேத்துப்பட்டு சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு காரில் வந்த பெண் ஒருவர் போக்குவரத்து போலீசாரை, சாலை நடுவில் நின்று கடுமையான வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

‘நான் அட்வகேட்.... உன் யூனிபார்மை கழட்ட வைத்து விடுவேன்...’ என்று ஒருமையில் திட்டினார். மேலும் அவர், ’முக கவசம் அணிய முடியாது. அபராதமும் கட்ட முடியாது’ என்றும் கூறினார்.

இந்நிலையில் அப்பெண் மீது போக்குவரத்து போலீசார் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் செல்லப்பா, அந்த பெண் வழக்கறிஞர் மீது, கொலை மிரட்டல், தரைகுறைவாக திட்டுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண், வழக்கறிஞராகப் பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்ததும், அவரது பெயர் தனுஜா என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் போக்குவரத்து போலீஸாருடன் சண்டை போட்ட பெண் வழக்கறிஞர் தனுஜாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதுபோன்று, ஆட்டோ டிரைவர் ஒருவர் பெண் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை முத்தியால்பேட்டை அருகே பெண் காவல் ஆய்வாளர் கிருத்திகா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் வரும் ஆட்டோக்களை நிறுத்தி இப்பதிவு உள்ளதா என ஆய்வாளர் கிருத்திகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பெரம்பூர் வீனஸ் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலியின்(39) ஆட்டோவை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர், ஆட்டோவில் உடல் ஊனமுற்றோரை அழைத்து வந்ததாகவும் பின்னர் சமூக சேவை செய்வதாகவும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். தொடர்ந்து இ-பதிவு இருப்பதாகவும் கூறினார். இ-பதிவு ஆவணத்தை போலீசார் கேட்டதும் அதைக் காண்பிக்க மறுத்தார்.

எனவே, ஆட்டோவை பறிமுதல் செய்து, சாவியைக் காவல் ஆய்வாளர் கிருத்திகா எடுத்துக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், 'ஆட்டோவை விட முடியுமா முடியாதா என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார். இதனால் பெண் எஸ்ஐ வண்டி சாவியைக் கொடுக்க முடியாது வண்டி மீது வழக்குப் போடுகிறோம். கோர்ட்டில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர், பெண் எஸ்ஐ-யிடம் கையை நீட்டி, ‘நாசமா போயிடுவ’ என்று சபித்தார். இந்த வீடியோவும் இணையதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அந்த ஆட்டோ டிரைவர் மீது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆபாசமாக பேசுதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்

பெண் வன்கொடுமை சட்டம் என 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரை திட்டிய வழக்கறிஞருக்குச் சம்மன் மட்டும் தான் அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏன் இந்த பாகுபாடு என்று ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ராமச்சந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், “ஊரடங்கு காரணமாக ஆட்டோ கூட ஓட்ட முடியாமல் மிகவும் வறுமையில் தான் இருக்கிறோம். எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. வட்டிக்குக் கூட யாரும் பணம் தருவதில்லை.

பெண் வழக்கறிஞர் ஆண் போலீசாரை திட்டியதும் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் ஆட்டோ டிரைவர் பெண் ஆய்வாளரைத் திட்டியதும் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர் வக்கீல் என்பதால் அவர் மீது உடனடி நடவடிக்கை இல்லை. ஆனால் நாங்கள் ஆட்டோ தொழிலாளி என்பதால் எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது என்ன சட்டம்... என்ன நீதி” என புலம்புகிறார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 8 ஜுன் 2021