மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

அதிமுக யாருக்கு? சி.வி.சண்முகத்துக்கு சசிகலா வழக்கறிஞர் பதில்!

அதிமுக யாருக்கு? சி.வி.சண்முகத்துக்கு சசிகலா வழக்கறிஞர் பதில்!

அதிமுகவுக்கு உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு பற்றி தவறான தகவல்களை முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பரப்பி வருவதாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

நேற்று (ஜூன் 7) செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம்,

“நான் தான் உண்மையான அதிமுக என்று சொல்லி உரிமை கோரி சசிகலா, தினகரன் இங்கே வழக்கு தொடர்ந்தார். பிறகுதேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். சென்னை சிவில் கோர்ட்டில் என்ன பரிகாரம் கோரினாரோ அதேதான் தேர்தல் ஆணையத்திலும் வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம், ‘எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் கூட்டிய பொதுக்குழு செல்லும். அந்தப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளர் நீக்கப்பட்டது செல்லும் என்றும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டது. எனவே அதிமுகவுக்கு சசிகலா சொந்தம் கொண்டாட முடியாது” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,

“முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், திருமதி சசிகலா தொடுத்துள்ள வழக்குகள் பற்றி சில தவறான தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, அதிமுகவில் மேலும் சிலரும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்.

சசிகலாவை பொறுத்தவரை, ’ 12-9-17அன்று நடந்த பொதுக்குழு சட்ட விரோதமானது, பொதுக்குழுவை கூட்டக் கூடிய அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. எனக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் முடிவு செய்யக் கூடிய கட்சியல்ல, தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய கட்சி என்று வரையறுத்திருக்கிறார்’என்று சொல்லி வழக்குத் தொடுத்திருக்கிறார். அது இன்றுவரை நிலுவையில் இருக்கிறது.

சி.வி.சண்முகம் கூறிய விஷயங்கள் எல்லாமே ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வழக்கு பற்றியது. அந்த வழக்கு 2017 மார்ச் மாதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்தபோது கட்சியின் பெயரை, யார் பயன்படுத்த வேண்டும், யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. அந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் ஆர்.கே. நகர் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது யாருக்கு அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்பட்ட வழக்கு. ஆனால் தற்போது சசிகலா தொடுத்து நிலுவையில் இருக்கும் வழக்குதான், 12-9-2017 நடந்தது பொதுக்குழுவே கிடையாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் எல்லாம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கே ஒத்துவராத விஷயங்கள் என்பதை உறுதி செய்யும் வழக்காக இருக்கும்”என்று பதிலளித்துள்ளார் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 8 ஜுன் 2021