மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

அரசின் நடவடிக்கையால் கோவையில் பாதிப்பு குறைகிறது : அமைச்சர் கே.என்.நேரு

அரசின் நடவடிக்கையால் கோவையில் பாதிப்பு குறைகிறது : அமைச்சர் கே.என்.நேரு

முதலமைச்சர் ஸ்டாலின் இரு முறை கோவைக்கு வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ததின் பலனாக கோவையில் 60 சதவீதம் வரை தொற்று பரவல் குறைந்துள்ளது என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து, 100 தற்காலிக செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

பின்பு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ” சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக பரப்பளவிலும், மக்கள் நெருக்கத்திலும் கோவை பெரிய மாநகராட்சியாக உள்ளது. அதனால் தொற்று பாதிப்பும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், கண்காணிக்கவும், அமைச்சர்களையும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் தமிழ்நாடு முதல்வர் நியமித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரு முறை கோவைக்கு வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ததின் பலனாக, தற்போது கோவையில் 60 சதவீதம் வரை தொற்று பரவல் குறைந்துள்ளது.

கருப்புபூஞ்சை நோய்க்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் மருத்துவமனைகள் அதிகக்கட்டணம் வசூல் செய்வதை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தற்போது அதிக கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுகுறித்து தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனிமைப்படுத்துதல் முகாம்களில் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகரில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

தமிழ்நாட்டிற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது.தடுப்பூசி வந்தவுடன் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெறும். கோவையில் 38 மாநகராட்சி பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2.01 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களாக முதல்வரும், மற்ற அமைச்சர்களும் கொரோனா தடுப்பு பணிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய அரசு முதன்மைச் செயலர் சிவ்தாஸ் மீனா “கோவையில் 10 நாட்களுக்கு முன்பு வரை 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 25 பேருக்கு தொற்று இருந்தது. தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களை கண்காணித்து சிகிச்சையளிக்கும் வகையில் மாநகராட்சிப்பகுதிகளில் வீடுகள் தோறும் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றிலிருந்து மீண்டவர்கள், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. அடுத்த 15 நாட்களில் கொரோனா தொற்று எதிர்பார்த்த அளவில் குறையும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 8 ஜுன் 2021