மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

பொலிவு பெறுமா பொருநை ஆறு..?

பொலிவு பெறுமா பொருநை ஆறு..?

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்.

பெருந்தொற்று கால பொதுமுடக்கத்தில் உலகம் முழுக்க நீர் நிலைகளின் சூழல் மேம்பட்டு வருவதை கடந்த இரு ஆண்டுகளாக செய்திகளில் அறிந்து வருகிறோம். கடந்தாண்டு கொரோனா பொதுமுடக்கத்தில் தாமிரபரணியின் சூழல் மீண்டது பற்றியும் செய்திகள் வந்தன. ஆனால், சில ஆண்டுகள் கூட அந்நிலை நீடிக்கவில்லை.

”குளிர்நீர்ப் பொருநை

சுழி பலவாய்”

என்று சடகோபர் அந்தாதியும்,

”தண் பொருநைப் புனல் நாடு”

என்று சேக்கிழாரும்,

”பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி”

என்று கம்பரும் பாட, பெருமைமிகு பொருநை ஆற்றினைப் பண்டைய இலக்கியங்கள் போற்றுகின்றன. சங்க காலத்திற்குப் பிந்தைய புராணங்கள் பொருநையை தாமிரபரணி என்று குறிப்பிடுகின்றன. தாமிரவருணி என்கிறார்கள் புனைவு எழுத்தாளர்கள். பெயர் எதுவாக இருந்தாலும் பெருமைக்குரிய, போற்றுதலுக்குரிய, பாதுகாக்கவேண்டியது பொருநை ஆறு என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. அதன் பழமையும், பெருமையும் நாகரீக வளர்ச்சியும் இன்றளவும் சிறப்பு வாய்ந்ததாகவே உள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அங்கமான பொதிகை மலையில் உற்பத்தியாகி 128 கிலோ மீட்டர் தூரங்களைக் கடந்து, வேளாண் நிலங்களைச் செழிக்கச் செய்து, மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது பொருநை ஆறு. முண்டன்துறை வனத்தில் இருந்து உருவாகி வரும் காரையாறு, சேர்வலாறு, மாஞ்சோலை வனத்தில் உருவாகி வரும் மணிமுத்தாறு, பொதிகையெனும் அகத்தியர்மலை வனத்தில் தோன்றும் கடனாநதி, ரமணா நதி, களக்காடு வனத்தில் உருவாகும் பச்சையாறு, குற்றாலத்தில் உருவாகி வரும் சிற்றாறு அத்தனையும் இணைந்த ஆறுதான் பொருநை எனும் தாமிரபரணி.

கோடைமேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்தமல்லி, மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டுகள் பொருநை ஆற்றின் வேளாண்மைக்காக பயன்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் தாகம் தீர்ப்பதோடு விருதுநகர் குடிநீர் திட்டங்களின் ஆதாரமாகவும் பொருநை ஆறு விளங்குகிறது. தனி மனிதரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் அனைத்திற்கும் தூய காற்று, சுவையான குடிநீர், வேளாண்மையின் வழியே துணை நிற்கிறது பொருநை. பண்டைய ஆற்றங்கரையோர நாகரீகத்தின் ஆதாரமாகவும், நிகழ்கால வாழ்வியலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமின்றி பூச்சி, புழுக்கள், பறவைகள், விலங்குகள், செடி, கொடி, மரங்கள், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் அத்தனைக்கும் வாழ்விடமாக, வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது பொருநை ஆறு.

பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு, திருவிடைமருதூர், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், மேலசெவல், பத்தமடை, நாராணம்மாள்புரம், திருநெல்வேலி மாநகராட்சி, சீவலப்பேரி, முறப்பநாடு, திருவைகுண்டம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொருநை ஆற்றில் இருந்து நேரடியாக குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இத்தனை பெருமைக்குரிய பொருநை ஆறு பாழ்பட்டுப் போவதாக, கழிவுகள் கலப்பதாக அவ்வப்போது புகார்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன. அது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பொருநை ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலையின் உச்சியில் இருந்தே கழிவுகள் கலக்கத்தொடங்கி விடுகின்றன. கழிவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கலக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், வேளாண் கழிவுகள், நகராட்சி, ஊராட்சி கழிவுகள் எனப் பலவகையிலும் கழிவுகள் கலந்தாலும், மனிதர்களால் உண்டாகும் நகராட்சி, ஊராட்சி கழிவுகள்தான் அதிகம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள்.

குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் மட்டுமின்றி, முக்கூடல், திருநெல்வேலி, முறப்பநாடு, ஏரல் உள்ளிட்ட இடங்களில் துணிக்கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன. பிற கழிவுகளும் ஆற்றோடு கலந்து விடுகிறது.

கழிவுகள், மாசு வெளியேற்றும் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆபத்தான சிகப்பு பிரிவில் 248 தொழிற்சாலைகளும், ஓரளவு ஆபத்தான ஆரஞ்சு பிரிவில் 527 தொழிற்சாலைகளும், குறைந்தளவு ஆபத்தான பச்சைப் பிரிவில் 132 தொழிற்சாலைகளும் என்று மொத்தம் 907 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில் 314 தொழிற்சாலைகள் பொருநை ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிகப்பு பிரிவில் 173, ஆரஞ்சு பிரிவில் 610, பச்சை பிரிவில் 159 என்று மொத்தம் 942 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில் 145 தொழிற்சாலைகள் பொருநை ஆற்றின் கரையில் உள்ளன. இவற்றில் செங்கல் சூளைகளும், அரிசி ஆலைகளும் உள்ளடங்கும்.

பாபநாசம் பகுதியில் இருந்து பாய்ந்தோடி வரும் பொருநை ஆற்றின் கரையோரம், ஆலடியூர் பகுதியில் மதுரா கோட்ஸ் ஆலையும், வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் சன் பேப்பர் மில்ஸ் ஆலையும் இயங்கி வருகின்றன.

சேசாயி பேப்பர் மில், அர்ஜூன் பேப்பர் மில், இந்தியா சிமெண்ட்ஸ், பெப்சிகோலா, கங்கைகொண்டான் சிப்காட், தூத்துக்குடி மீளவிட்டான் சிப்காட், ஸ்பிக், தாரங்கதாரா, ஸ்டெர்லைட், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட ஆலைகளுக்கு பொருநை ஆற்றில் இருந்துதான் நீர் வழங்கப்படுகிறது.

விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், மேலசெவல், பத்தமடை, மேலப்பாளையம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகநேரி, ஆத்தூர், புன்னைக்காயல் பகுதியிலுள்ள நகராட்சி, பேரூராட்சி கழிவுகள் நேரடியாகவும், துணைக் கால்வாய்கள் மூலமும் பொருநை ஆற்றில் கலக்கின்றன. இத்துடன் வெள்ளகோவில், சீவலப்பேரி, கருங்குளம், நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்குராயன்குறிச்சி, முறப்பநாடு, ஆதிச்சநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி, சேர்ந்தமங்கலம், ஆதிநாதபுரம், திருக்கழூர், கடையனோடை, குரங்கனி, ராஜபதி, சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளின் கழிவுகளும் ஆற்றங்கரையோரம், கால்வாய் ஓரங்களில் நேரடியாகக் கலக்கின்றன.

திருநெல்வேலி மாநகரில் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் அத்தனை கழிவுகளும் பொருநை ஆற்றில்தான் நேரடியாக கலக்கின்றன. குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், கொக்கிரகுளம், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக கழிவுகள் கலப்பது அதிகளவில் உள்ளது.

பொதுவாக பொருநை ஆற்றில் 700 cusecs முதல் 1600 cusecs வரை நீர்வரத்து இருக்கிறது. அதேவேளை மழைக்காலங்களில் வெள்ளநீர் கலந்தால் 926 Cusecs முதல் 11596 Cusecs வரை ஆற்றில் நீரோடி வரும். ஆறுகள் தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும் (Self purification) தன்மை உடையது. பொருநை ஆற்றிலும் கரையோரம் உள்ள தாவரங்கள், மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள், ஆற்று மணல் என சுத்திகரிக்கும் அமைப்புகள் இருந்தன/இருக்கின்றன.

அதிகளவு மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, நீர்வாழ் உயிரினங்களின் இடம்பெயர்வு அல்லது குறைவு காரணமாக பொருநை ஆறு தனது தன்னைத்தானே சுத்திகரிக்கும் தன்மையை இழந்து வருகிறது. மேலும் மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம் காரணமாகக் கழிவுகள் கலப்பது அதிகரித்து விட்டது. அதனால் ஆற்று நீரின் தூய்மை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆற்றில் நேரடியாகக் கழிவுகள் கலக்கும் (Point source pollution) பகுதிகள் மட்டுமின்றி, மறைமுகமாக கழிவுகள் கலக்கும் (Non point source pollution) பகுதிகளும் உள்ளன. அதாவது மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்பகுதிகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், வேதியியல் பொருட்களின் கழிவுகள் மணிமுத்தாறு ஆற்றில் கலந்து வருகின்றது. சமவெளிப்பகுதிகளில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி, உரங்களின் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. அதனால் மோசமான ஆறு என்ற நிலையை நோக்கி தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான (Perennial River) பொருநை ஆறு சென்றுகொண்டிருக்கிறது.

இந்திய அரசு பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியோடு இணைந்து தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுத்திடவும், மாநகரக் கழிவுகளை மறுசுழற்சி செய்திடவும் திட்டங்கள் வகுத்துள்ளது. மற்றொரு புறம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற அமைப்புகளும் பொருநை ஆற்றின் சூழலைக் காக்கத் திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளும், சுற்றுச்சூழல் துறையும், தன்னார்வலர்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் நிரந்தரத் தீர்வை எட்டுமளவிற்கு கட்டுப்பாடுகளோ, மக்களிடம் இயற்கையை நேசிக்கும் மனமாற்றங்களோ முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை.

நீரைப் பங்கிட்டு, நீர் நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தும் நீர்ப்பாசனத் துறை, அத்துடன் நீர் நிலைகளின் தன்னியல்பு மாறாமல், இயல்வகைத் தாவரங்கள், மீனினங்கள், உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழலோடு நீராதாரங்களின் வளங்களைப் பாதுகாத்து, மேம்படுத்தவும் வேண்டும்.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து, மக்கள் பங்கேற்புடனான திட்டங்களை செயல்படுத்தும் போது, ஆற்றின் மீதான உரிமைகளும், உணர்வுகளும் உள்ளூர் மக்களால் மீட்டெடுக்கப்படும்.

ஆன்மீக நம்பிக்கை கொண்டோ, அறிவியல்பூர்வ ஆய்வுகள் மூலமோ, வாழும் தலைமுறை தூய நீரை அருந்திட, இயற்கைச் சூழலை மேம்படுத்துவது அவசியம். அவசரமும் கூட. வேளாண் வளங்கள் செழித்திடவும், எதிர்காலத் தலைமுறைக்கு வாழ்வளித்திடவும் பொருநை ஆறு பொலிவு பெற வேண்டும். இயற்கையை நேசிப்போம், இயல்பாக சுவாசிப்போம்.

.

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 8 ஜுன் 2021