மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

சென்னை - பெங்களூரு ஆறு வழிப்பாதை: ரூ.200 கோடி மோசடி!

சென்னை - பெங்களூரு ஆறு வழிப்பாதை:  ரூ.200 கோடி மோசடி!

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிப்பாதை பணிக்காக நிலம் கையகப்படுத்தும்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரிக்க நில நிர்வாக ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும்போது சாலை விரிவாக்கத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் இத்துடன் நடைபெற்று வந்தது.

நெடுஞ்சாலை திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிப்பாதை பணிக்காக நிலம் கையகப்படுத்தும்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்து 70-க்கும் மேற்பட்டோர் இழப்பீட்டு தொகையாக ரூ.200 கோடி முறைகேடாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நெமிலி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பீமன்தாங்கல் கிராமத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பெரும்பாலும் நிலவரி திட்ட நிலப் பதிவேட்டில் மேய்க்கால் புறம்போக்கு நிலமாக தாக்கலாகி இருந்தது. அதன்பிறகு அரசின் நிலவுடமை மேம்பாட்டு திட்டப் பதிவேட்டில் பெரும்பாலான நிலங்கள் தற்போதுவரை அரசின் பதிவேட்டில் அனாதீனம் நிலம் எனப் பதிவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீமன்தாங்கல் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான அனாதீனம் நிலத்தை முறைகேடாக அதிகாரிகளின் துணையோடு பலரும் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதனால் நில மதிப்புமிக்க அரசு நிலத்தின் அடிப்படையில் ஆவணங்களைச் சரி பார்க்காமல் வேண்டுமென்றே போலி பட்டா வைத்திருந்த 70 பேருக்கு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.200 கோடிக்கு மேல் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியாக பீமன்தாங்கல் கிராமத்தில் 7.5 ஏக்கர் அரசு அனாதீனம் நிலத்தை அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு போலியாக ஆவணம் தயாரித்து அரசு நிலத்தை பட்டா மாற்றம் செய்து சென்னையைச் சேர்ந்த ஆசிஸ் மேத்தா என்பவர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நில எடுப்பு இழப்பீட்டு தொகையாக ரூ.33 கோடி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரால் அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாராக இருந்த ராதாகிருஷ்ணன், நிலவரித் திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட எட்டு பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடு தொடர்பான விரிவான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பிரச்சினை ஒருபுறமிருக்க பீமன்தாங்கல் கிராமத்தில் அரசு பதிவேட்டில் மேய்க்கால் புறம்போக்கு மற்றும் அனாதீனம் என பதிவாகி இருந்த அரசுக்கு சொந்தமான 82 ஏக்கர் நிலத்தை மேலும் பலரும் போலியாக பட்டா மாற்றம் செய்து இருப்பது நில நிர்வாக ஆணையத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து 82 ஏக்கர் போலி பட்டாவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள், பெரிய பெரிய அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் செல்லாக்காசாக மாறி இருக்கிறது. சிறுக சிறுக பணம் சேர்த்து அந்த பகுதியில் வீடு வாங்கிய பொதுமக்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, சொத்துகள் வாங்கும்போது அதில் பிரச்சினை உள்ளதா என்பதை அறிய வில்லங்க சான்றிதழை குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்காவது சரி பார்த்து விட வேண்டும். தாய்ப் பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அதுவரை உள்ள அனைத்துப் பத்திரங்களையும் நாம் சரி பார்த்து கொள்வது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

-ராஜ்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 7 ஜுன் 2021