மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

பெண் எஸ்.ஐ-க்கு சாபம் விடும் ஆட்டோ ஒட்டுநர்!

பெண் எஸ்.ஐ-க்கு சாபம் விடும் ஆட்டோ ஒட்டுநர்!

கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல் வெளியே வருவது மட்டுமில்லாமல், அதுகுறித்து விசாரிக்கும் போலீஸ்காரர்களை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் சம்பவங்கள் தொடர்கின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒருவார தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், வேலை நிமித்தமாக வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இ-பதிவு பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், சிலர் இந்த விதிமுறைகளை பின்பற்றாமலும், போலியாக இ-பதிவு பெற்றும் வெளியே சுற்றி வருகின்றனர்.

நேற்று(ஜூன் 6) சேத்துபட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ப்ரீத்தி என்பவரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவரிடம் லைசென்ஸ் இல்லாதது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸார் முற்பட்டபோது, ப்ரீத்தி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த தனுஜா காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “ நான் யார் தெரியுமா? நான் ஒரு அட்வகேட், வாயை மூடு, மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன்...... ஜாக்கிரதை.. காரை ஏன் நிறுத்துற” என்று காவல்துறையினரை ஒருமையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து ,போக்குவரத்து தலைமைக் காவலர் ரஞ்சித் குமார் சேத்துப்பட்டு போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, அந்த பெண் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன்பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தனுஜாவுக்கு புதிது இல்லை என்றும், ஏற்கனவே இதுபோன்று இரண்டுமுறை காவல்துறையினருடன் சண்டை போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்து ஒருநாள் முடிவடைவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்று(ஜூன் 7) பிராட்வே பாரதி கல்லூரி சிக்னல் அருகில் முத்தியால்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த அக்‌ஷர் அலி, தான் மாற்றுத்திறனாளி எனவும், மருத்துவக் காரணங்களாக வெளியே செல்வதாகவும் கூறி இ-பதிவு பெற்றுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, முத்தியால்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா, ஆட்டோவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தார்.

ஆட்டோ சாவியை தருமாறு உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்‌ஷர் அலி, ஒரு கட்டத்தில் போலீஸாரை தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்.

ஆத்திரமடைந்த அக்‌ஷர் அலி, ”உனக்கு நல்ல சாவே வராது……அல்லா மீது சத்தியமாக நீ நாசமா போய்டுவ..! பாரு நீ என்ன ஆகப்போற பாரு” என்று சாபம் விட்டதோடு, யாருக்கோ போன் செய்து கொண்டே, அமைச்சர் சேகர் பாபு கிட்ட பேசுறியா…இந்தா பேசு…… இங்க கூட்டிட்டு வரவா..? என்று பேசியுள்ளார்.

என்னுடைய வேலையைத் தான் செய்கிறேன் எனக் கூறிய போலீஸாரிடம், “ஒரு பொண்ணு நீயே இப்படி பேசுறியா”, 40 வருஷமா இந்த ஏரியலா இருக்கேன்” என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து புகாரளித்துள்ள உதவி ஆய்வாளர் கிருத்திகா. ஆட்டோ சாவியை தன்னிடமிருந்து பிடித்து இழுத்து காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அக்‌ஷர் அலி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையில், வெளியே வருபவர்களிடம் இ-பதிவு இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது காவல் துறையினரின் கடமை என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பெருநகரை பொறுத்தவரை 115 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்று வருகிறதா என கண்காணிப்பது காவல் துறையினரின் கடமை. அதை பொதுமக்கள் இடைஞ்சலாக பார்க்கக்கூடாது. காவல் துறையினருக்கு மக்கள் கட்டாயம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-வினிதா

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

திங்கள் 7 ஜுன் 2021