மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

ஃபேமிலி மேன்: அமேசானுக்கும் அரசுக்கும் சீமான், பாரதிராஜா எச்சரிக்கை!

ஃபேமிலி மேன்:  அமேசானுக்கும் அரசுக்கும்  சீமான், பாரதிராஜா எச்சரிக்கை!

தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அந்தத் தொடர் இணையத்தில் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் பெரு வணிக நிறுவனத்துக்கு எதிரான பரப்புரையை தமிழகத்தில் தீவிரமாக்குவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

“உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள அத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன்.

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தோற்றம் கொள்ளச்செய்து காட்சிப்படுத்தியுள்ள இத்தொடர் மிகுந்த உள்நோக்கம் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச்சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம்.

போர் மரபுகளுக்கு மாறாக ஒற்றை நகர்வையும் முன்வைத்திடாது, அழித்தொழிக்கப்படும் நாள்வரையிலும்கூட சிங்களர்களின் அந்நிய ஆதிக்கத்துக்கெதிராக மட்டுமே போராடி, சிங்கள மக்களைக் குறிவைக்காது, தமிழர்களின் அறத்தையும், மறத்தையும் நிலைநாட்டிய தமிழீழ விடுதலைப்புலிகளையும், வே.பிரபாகரனையும் மிகத்தவறாக உலகத்தினருக்குக் காட்ட முற்படும் இத்தகைய இணையத்தொடர் உடனடியாகத் தடைசெய்யப்பட்டு நீக்கப்பட வேண்டுமென்பதுதான் தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது. இத்தகைய இணையத்தொடருக்கு தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக்கோரி இந்திய ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யத்தவறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து, அமேசான் பிரைம் வீடியோ உட்பட அமேசான் நிறுவனத்தின் எல்லாச் சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்துப் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்”என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரைநிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும்,அவர்களின் வரலாற்றையும் அறியாத ,தகுதியற்ற நபர்களால்,தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

அறமும் வீரமும் தன்னலமற்ற ஈரமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீதுமிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இத் தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ் , முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

திங்கள் 7 ஜுன் 2021