மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

இ-பதிவு இணையதளம் முடங்கியது ஏன்?: அமைச்சர் விளக்கம்!

இ-பதிவு இணையதளம் முடங்கியது ஏன்?: அமைச்சர் விளக்கம்!

சுய தொழில் புரிவோர் போக்குவரத்துக்காக ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு செய்ததால், இ-பதிவு இணையதளம் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் ,இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று(ஜூன் 7) காலையுடன் முடிவடைந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலை 7 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. அதுபோன்று வாடகை கார்களில் மூன்று பேரும், ஆட்டோக்களில் இரண்டு பேரும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின்போது இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக அதிகமானோர் விண்ணப்பிக்கத் துவங்கியதால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சுயதொழில் செய்வோர் இ-பதிவு செய்து பயணிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு சேவை மையங்கள் ,அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவை புரிவோர் மற்றும் எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இ-பதிவு உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை முதல் சுயதொழில் செய்வோர் போக்குவரத்திற்காக ஒரே நேரத்தில் அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால், இ-பதிவுக்கான இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் இ-பதிவின்போது செல்போனுக்கு ஓடிபி வருவது தாமதமானது. இணையதளம் முடங்கியதால், மக்கள் இ-பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். முடங்கிய இணையதளத்தை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ” 5 லட்சம் முதல் 6 லட்சம் வரைதான் இ-பதிவுகளை எதிர்பார்த்தோம். ஆனால், ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய முயன்றதால், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

திங்கள் 7 ஜுன் 2021