மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

கிறிஸ்துவர்களை நோக்கி...:தோல்விக்குப் பின் மோடியின் வியூகம்!

கிறிஸ்துவர்களை நோக்கி...:தோல்விக்குப் பின் மோடியின் வியூகம்!

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அஸ்ஸாமில் மட்டுமே பாஜக வெற்றி கண்டது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் பாஜக( கூட்டணி) தோல்வி கண்டது. புதுச்சேரி மாநிலத்தில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஜெயித்தாலும் அமைச்சரவை அமைப்பதில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான்... தேர்தல் தோல்வி தொடர்பாகவும் அடுத்த தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் பாஜக முதன் முதலாக தேசிய அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. தற்போதைய கொரோனா காலத்தில் வெறும் தேர்தல் தோல்வி ஆய்வுக் கூட்டமாக மட்டும் நடத்தாமல், கொரோனா காலத்தில் கட்சியின் மக்கள் சேவை நடவடிக்கைகள் குறித்தும் சேர்த்து விவாதிப்பதற்காக கடந்த ஜூன் 5 ஆம் தேதி, கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் கூடினார்கள்.

நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக பொதுச் செயலாளர்கள், கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளர். பி. எல். சந்தோஷ் மற்றும், இளைஞரணி, மகளிரணி, விவசாய அணி, ஓபிசி அணி, எஸ்.சி.எஸ்.டி.அணி, சிறுபான்மை அணிகளின் தேசிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பொறுப்பாளரும் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவருமான சி.டி. ரவியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்துக்குப் பின் ஜே.பி. நட்டா, பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சி பொதுச் செயலாளர்கள் மட்டும் நேற்று (ஜூன் 6) பிரதமரைச் சந்திக்கச் சென்றனர்.

தனது அதிகாரபூர்வ இல்லத்தில் கிட்டத்தட்ட நடந்த ஐந்து மணி நேர கூட்டத்தில், நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் மோடி பல ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது,

“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையான முயற்சிக்குப் பின் மேற்கு வங்காளத்தில் பாஜக 77 இடங்களையே பிடித்தது. புதுச்சேரியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கத் தயாராக உள்ளது, மற்றபடி தமிழகத்தில் நான்கு இடங்கள், கேரளாவில் ஒன்றுமே இல்லை. அஸ்ஸாமில்தான் ஆட்சியைத் தக்க வைத்தோம்.

மோடியின் டேபிளில் ஒவ்வொரு மாநில பாஜவின் பர்ஃபாமென்ஸ் பற்றிய ரிப்போர்ட் இருந்தது. இந்த கூட்டத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டது மேற்கு வங்காளத்தைப் பற்றியும், கேரளாவைப் பற்றியும்தான்.

குறிப்பாக கேரளா குறித்து பேசிய மோடி, ‘மக்களுக்குப் பிடித்தமான கூட்டணியை உருவாக்குவதிலும், இந்து அல்லாத சமூகங்களை பாஜகவின் ஆதரவு தளத்திற்கு கொண்டு வருவதிலும் இனி நாம் அக்கறை காட்ட வேண்டும். கேரளாவில் குறிப்பாக கிறிஸ்துவ சமூகத்தினரை நாம் வென்றெடுக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். கிறிஸ்துவர்களுக்கு பாஜகவுடன் கை கோர்ப்பதில் பெரிய பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லை’என்று அறிவுரை கூறியிருக்கிறார். கேரளாவின் அரசியல் மற்றும் சமூக தளத்தில் கிறிஸ்தவ சமூகம் கொண்டுள்ள நல்லெண்ணத்தையும் செல்வாக்கையும் பாஜக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியதாக தெரிகிறது.

கேரளாவின் இந்த வியூகம் கன்னியாகுமரி, மற்றும் தென் தமிழகத்துக்கும் பொருந்தும் என்றுதான் பாஜக மேல் நிலை வட்டாரங்களில் கூறுகிறார்கள். தமிழகத்தில் கிறிஸ்துவர்களுக்கான அரசியல் இயக்கங்கள் இல்லை. ஆனபோதும் கிறிஸ்துவர்கள் தங்களது சர்ச்சுகளின் உத்தரவின்படி பெரும்பாலும் வாக்களிக்கிறார்களா என்பதும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பாஜகவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கும் களப் பிரச்சினை பாஜகவுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் தமிழ்நாடு அளவில் இல்லை.

ஆனால், குமரியில் பாஜகவுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் மோதல் போக்கும் இறுகல் போக்கும் பல ஆண்டுகளாக இருக்கிறது. மேலும் தென் தமிழ்நாட்டில் இந்து நாடார்களைப் போலவே கிறிஸ்துவ நாடார்களும் கணிசமாக உள்ளார்கள். இந்த அடிப்படையில் கிறிஸ்துவர்களை நோக்கி பாஜக பயணிக்க வேண்டுமென்ற மோடியின் வியூகம் தமிழகத்தில் எந்த அளவுக்கு எடுபடும் என்பதிலும் விவாதிக்கப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. பிரதமரின் அறிவுரைப்படி பார்த்தால் தமிழகத்திலும் பாஜகவின் வியூகம் மாறும் ”என்கிறார்கள்.

மேலும், மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரையில், 2019 மக்களவைத் தேர்தலில் பின்னடைவை எதிர்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் இந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி மாபெரும் வெற்றிபெற்றது, மக்களவைத் தேர்தலில் 18 எம்பிக்களை பெற்ற பாஜக ஏன் சரிந்தது என கேள்விகளால் பிரதமர் துளைத்து எடுத்துவிட்டார். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் முக்கிய சட்டமன்றத் தேர்தல்களுக்கான வியூகம் வகுப்பதிலும் அக்கறை காட்டுமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 7 ஜுன் 2021