மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: கமல்ஹாசன் தரும் அரசியல் படிப்பினை!

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: கமல்ஹாசன் தரும் அரசியல் படிப்பினை!

ராஜன் குறை

தேர்தல் முடிந்து ஒரு மாதம் வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருந்தோம். அது முடிந்து திமுக பதவியேற்றதும் கவனம் முழுவதும் புதிய ஆட்சியின் மீது குவிந்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் பெரும்புயலாக வீசியது. மோடியின் ஒன்றிய அரசாங்கத்தின் அலட்சியத்தால் தடுப்பூசி தயாரிப்பு தாமதமாகி, நாட்டின் பல பகுதிகளில் பிணக்குவியல்களைக் காண நேர்ந்தது. தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்ற திமுக அரசு, அதன் தலைவர்களின், குறிப்பாக மு.க.ஸ்டாலினின் நீண்ட நாள் நிர்வாக அனுபவம் காரணமாக உடனடியாக முழு வேகத்தில் செயல்பட்டு, கொரோனோ பரவலைச் சிறப்பாக எதிர்கொண்டு மக்கள் மனதில் நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னால் திமுகவை விமர்சித்த பலரும் இந்த ஒரு மாதக் காலத்தில் அதன் நல்லாட்சி நடைமுறைகளைப் பாராட்டும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவின் அரசியல் வேர்கள் ஆழமானவை. எதிர்க்கட்சியாக இருந்தபோதே, சென்ற கொரோனா தொற்று காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா!’ என்ற திட்டத்தில் கட்சி அணியினர் நலிந்தோருக்குப் பல உதவிகளைக் களத்தில் செய்ததை நாம் அறிவோம். ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்த உணர்வு முழுமையாகச் செயல்வேகம் பெற்றதில் வியப்பில்லை. இதனாலெல்லாம் தேர்தல் முடிவுகளை விவாதிக்கும் சந்தர்ப்பம் பொதுக்களத்தில் அமையவில்லை எனலாம். அதனால் இந்த வாரம் முதலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை விவாதிப்போம். மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றதுடன் மொத்த வாக்குகளில் மூன்று சதவிகிதம் கூடப் பெறவில்லை.

பொதுவாக, தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகளில் சில சலசலப்புகளும், விலகல்களும் நடப்பது இயல்புதான். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலும் பல முக்கிய நிர்வாகிகள் விலகினார்கள். அவருடைய தலைமைப் பண்பின் மீது குற்றம் சுமத்தினார்கள். கமல்ஹாசன் அதையெல்லாம் புறம்தள்ளினார். கோழைகள்; சந்தர்ப்பவாதிகள் என்றார். தன்னால் முகவரி பெற்றவர்கள் என்றார். தான் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறியுள்ளார். கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொள்கிறாரோ, இல்லையோ... அவர் அனுபவத்திலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஓர் அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கு காரணம் என்ன?

அரசியல் கட்சிகள் ஒன்று, சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை முன்னிறுத்த தொடங்கப்பட வேண்டும். விவசாயிகள் நலன், வர்த்தகர்களின் நலன் என்றோ அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நலன் கருதியோ தொடங்கப்படலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட லட்சியம் அல்லது கொள்கையை முன்னிட்டு தொடங்கப்படலாம். திமுக, திராவிட நாடு என்ற குடியரசைத் தோற்றுவிக்கும் லட்சியத்துடன் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுவுடமை சமூகத்தை உருவாக்கும் லட்சியத்துடன் கம்யூனிஸ்டு கட்சி தொடங்கப்பட்டது. கட்சிகள் பிளவுபடுவதால் புதிய கட்சிகள் தோன்றலாம். திமுகவிலிருந்து பிரிந்து அஇஅதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தோன்றின. சில சமயங்களில் ஓர் அரசியல் வெற்றிடத்தை உணர்ந்தும் கட்சி தொடங்கப்படலாம். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த வலுவான கட்சியும் இல்லாத நிலையில் தெலுங்கு தேசம் என்ற மாநிலக் கட்சியை நடிகர் என்.டி.ராமராவ் தொடங்கினார். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் உட்பூசல்களால் வெறுப்படைந்திருந்த மக்கள், அவருக்கு வாக்களித்தார்கள்.

இதுபோன்ற எந்த காரணமும் கமல்ஹாசனுக்கு இல்லை. திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகவும் வலுவானவையாக இருப்பதை அவர் அறிவார். ஐம்பதாண்டுக் காலமாக இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் மோதி வருகின்றன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும், தளங்களிலும் இரண்டு கட்சிகளும் வேர் பரப்பியுள்ளன. இரண்டு கட்சிகளும் அற்ற மூன்றாவது கட்சி ஒன்று தேவை என மக்கள் நினைக்கவில்லை என்பது விஜயகாந்தின் தேமுதிக கட்சி அனுபவத்திலிருந்து தெளிவாகிவிட்டது. தன்னை மூன்றாவது தேர்வாக, மாற்று அரசியல் சக்தியாக 2006 தேர்தலில் முன்னிறுத்திக் கொண்ட விஜயகாந்த் 8.3 சதவிகித வாக்குகள் பெற்றார். அவர் போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வென்றார். அடுத்த வந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றார். ஆனால் இப்படி மெள்ள மெள்ள வளரும்வரை கட்சி தாக்குப் பிடிக்காது என்பதை உணர்ந்தார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர, கட்சிக்கு வேறு லட்சியமோ, கொள்கையோ கிடையாது, அதனால் 2011 தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்தார். கூட்டணி வெற்றி பெற, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஆனார். அது கொடுத்த மிகை நம்பிக்கையில் 2016ஆம் மீண்டும் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக்கொண்டு மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுடன் நின்றார். அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றார். மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. அத்துடன் விஜயகாந்த்தின் முதல்வர் கனவும் முடிவுக்கு வந்தது எனலாம்.

ஆனால், 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, அடுத்த சில மாதங்களில் மரணமடைந்ததும், கலைஞர் வயோதிகத்தால் குரலை இழந்ததும், பின்னர் அவரும் இயற்கை எய்தியதும் ஒரு மாயாவாதம் உருவாக்கப்பட்டது. அது என்னவென்றால் இந்த இரண்டு தலைவர்கள் இறந்ததால் அரசியல் வெற்றிடம் உருவாகிவிட்டது என்ற அபத்தமான போலியான வாதம்தான் அது. அரசியல் கட்சிகள் என்பது தலைவர்கள் மட்டும்தான் என்ற பிழையான, மிகத்தவறான எண்ணத்தை அது ஏற்படுத்தியது. பல லட்சம் உறுப்பினர்களை, தொண்டர்களை மாநிலத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம் பெற்றுள்ள இரண்டு பெரிய கட்சிகளும் தலைவர்கள் மறைந்தவுடன் காற்றில் கரைந்துவிடும் என்பது போல ஒரு அபத்தமான சித்திரத்தை உருவாக்கினார்கள். குறிப்பாக திமுகவில் தலைவர் கலைஞரால் பல பத்தாண்டுகளாகப் பயிற்றுவிக்கப்பட்ட அவர் மகன் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருப்பதை வேண்டுமென்றே ஊடகங்கள் புறக்கணித்தன.

இந்தச் சூழ்நிலையில் பாரதீய ஜனதா கட்சி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. வெற்றிட மாயாவாதத்தால் தூண்டப்பட்ட அவரும் ‘போர்! போர்!’ என்று வீராவேச முழக்கமிட்டு அரசியலுக்கு வருவதாகச் சொன்னார். இந்த நிலையில்தான் திடீரென கமல்ஹாசனுக்கும் அரசியல் ஆசை வந்தது. ரஜினிக்குப் போட்டியாளனாக திரைத்துறையில் இருந்தது போல அரசியலிலும் ரஜினிக்கு எதிர்முனையில் நின்று இரு துருவ அரசியலைத் தோற்றுவிக்கலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ. புத்திசாலியான ரஜினி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பட்டுக்கொள்ளாமல் நிற்க, கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி உண்மையிலேயே களம் புகுந்தார். மூன்றரை சதவிகித வாக்குகளை பெற்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகும் திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் வாக்கு சேகரிக்கும் ஆற்றல் சிறிதும் குறையாமல் இருப்பதைத் தெளிவாகக் காட்டியது. ஆனாலும் கமல்ஹாசன் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் களத்துக்கு வந்தார். மீண்டும் படுதோல்வியைச் சந்தித்தார். எதனால் 2016 தேர்தலில் விஜய்காந்தின் படுதோல்வியைக் கண்ட பிறகும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தானே படுதோல்வியைச் சந்தித்த பிறகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்பதுதான் கேள்வி.

பிரபலமான மனிதர்கள் தலைவராகிவிட முடியுமா?

விஜய்காந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் ஆசைக்கு காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக இருக்குமோ என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும்கூட திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளும் என்பார்கள். அதுபோலத்தான் எம்.ஜி.ஆரை நினைத்து தாங்களும் தலைவர்கள் ஆகிவிடலாம் என்று நினைப்பது.

எம்ஜிஆர் தானாக தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்திக்கொள்ளவில்லை. அவர் அண்ணாவின் தொண்டனாகத்தான் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தில் எம்ஜிஆர் கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகள் தப்பிச் செல்வார்கள். அப்போது ஒரு சாலைகள் சந்திப்பில் அண்ணா சிலையைப் பார்ப்பார்கள். சிலையில் உள்ள அண்ணாவின் கண்களில் அவர்கள் எம்ஜிஆரின் கண்களைப் பார்ப்பார்கள். அந்தக் கண்களிலிருந்து வரும் ஒளியை தாங்கமுடியாமல் அவர்கள் மனம் திருந்தி, திரும்பிவிடுவார்கள். இப்படியாக தன் கண்களை அண்ணாவின் கண்களாக உருவகப்படுத்தினார் எம்ஜிஆர். அண்ணா பெயரால்தான் கட்சி தொடங்கினார். அண்ணாவின் உருவத்தைக் கொடியில் பொறித்தார். கட்சியின் கொள்கை அண்ணாயிசம் என்றார். அண்ணா நாமம் வாழ்க என்றுதான் தன் பேச்சை முடித்தார். அண்ணாவின் அளப்பரிய மக்கள் செல்வாக்கை கலைஞருடன் பங்கு போட்டுக்கொண்டார். ஜெயலலிதா, எம்ஜிஆரின் வாரிசு என்பதால்தான் தலைவராக முடிந்தது. அண்ணா நாமம் வாழ்க என்பதுடன் புரட்சி தலைவர் நாமம் வாழ்க என்று சேர்த்துக்கொண்டார். இந்த அரசியல் தொடர்ச்சி புரியாமல் எம்ஜிஆரின் திரைப்படச் செல்வாக்கு மட்டுமே அவரை தலைவராக்கிவிட்டது என்ற தவறான எண்ணம்தான் தொடர்ந்து திரைப்பட கதாநாயக நடிகர்கள் அரசியலுக்கு வர நினைப்பதற்கு காரணம். விஜய்காந்த்தும், கமல்ஹாசனும் தங்களையே தலைவர்களாக முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் தலைமையை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதே கேள்வி.

விஜயகாந்த்தும், கமல்ஹாசனும் எந்த மக்கள் பிரச்சினைக்காகவாவது போராடியுள்ளார்களா? தேமுதிக தொண்டர்கள் எந்த உள்ளூர் பிரச்சினைக்காகவும் கொடி பிடித்து நின்று பார்த்துள்ளீர்களா? எந்த மாநில, தேசிய பிரச்சினைக்காகவும் மறியல் செய்துள்ளார்களா? தன் தொண்டர்களுடன் மக்கள் பிரச்சினைக்காகப் போராடாமல் ஒரு தலைவர் உருவாக முடியுமா? திமுக என்ற கட்சி, எதிரிகளின் கல்வீச்சையும், போலீஸாரின் தடியடியையும் உணவாகவும், வழக்குகளையும், சிறைவாசத்தையும் தண்ணீராகவும், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் சுவாசமாகவும் கொண்டு வளர்ந்தது. காங்கிரஸ் கட்சியையும், மாநில, ஒன்றிய காங்கிரஸ் அரசுகளையும் ஓயாமல் கேள்வி கேட்டது. அனுதினமும் தெருமுனை கூட்டங்கள் போட்டது. நாடகங்கள் நடத்தியது. இவற்றின் விளைபொருள்கள் அனைத்தையும் கூடவே இருந்து தன் திரைப்பிம்பத்தால் களவாடிக்கொண்டார் எம்ஜிஆர். அவர் ஒரு திமுக நடிகர் என்பதே அவரது திரையுலக வெற்றிக்கும் காரணம்.

கமல்ஹாசன் தேர்தல் களம்கண்ட 2009 நாடாளுமன்றத் தேர்தலே நரேந்திர மோடியின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக திமுகவும், காங்கிரஸும் இணைந்து களம்கண்ட தேர்தல்தான். கமல்ஹாசனால் தைரியமாக மோடி அரசை விமர்சித்து பேச முடியவில்லை. கெளரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பிரகாஷ் ராஜ் என்ற நடிகர் பெங்களூருவில் தேர்தலில் நின்றார். ஆனால், கமல்ஹாசனால் அரசியல் எதிரிகளைக் கொல்லும் வன்முறைக் கலாச்சாரத்தை கண்டித்து பேச முடியவில்லை. இஸ்லாமியர்களைக் கும்பல் கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை கண்டிக்க முடியவில்லை. பாரதீய ஜனதா கட்சியைக் கண்டித்துப் பேச தைரியமில்லாததால்தான் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். அவரை ‘பாஜக பி-டீம்’ எனப் பலரும் இகழவும் அவரது அச்சமே காரணம். ஓர் இளம் நடிகர் சித்தார்த் துணிந்து பாஜகவைக் கண்டிக்கும் அளவுகூட கமல்ஹாசனால் கண்டிக்க முடியவில்லை. ஒன்று பாஜகவை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் மய்யம் என்றால் அது அரசியல் இல்லை; பம்மாத்து.

எந்த அரசியல் உள்ளீடும் இல்லாமல், நான் தலைவன், என்னை முதல்வராகத் தேர்ந்தெடுங்கள் என்றால் அது எப்படி சாத்தியப்படும் என்பதை கமல்ஹாசன் சிந்திக்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே அரசியல் அக்கறை இருந்தால் தேர்தல் அரசியலை விட்டுவிட்டு, சமூக மாற்றத்துக்கான ஒரு இயக்கமாக மக்கள் நீதி மன்றத்தை நடத்தலாம். அவர் தனக்கு மிகவும் பிடித்ததாகக் கூறும் பெரியாரைப் போல சமூகநீதிக்காக, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடலாம். இந்தச் சமூகத்தில் இன்னும் களைவதற்கு எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. அதை சமூக இயக்கமாக இருந்தே செய்ய முடியும். தேர்தல் பங்கேற்பும் முதல்வர் பதவியும் மட்டும்தான் மக்களுக்காக பணியாற்றும் ஒரே பாதையல்ல. அதற்கான தலைமைப் பண்புகளோ, அரசியல் பயிற்சியோ தன்னிடம் இல்லை என்பதை இந்த ஒரு மாதக் கால ஆட்சியைப் பார்த்தாவது கமல்ஹாசன் உணர வேண்டும்.

.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

திங்கள் 7 ஜுன் 2021