மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

ஹோட்டல் அறையில் எடப்பாடி- பன்னீர் பேசியது என்ன?

ஹோட்டல் அறையில் எடப்பாடி- பன்னீர் பேசியது என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 5) ஆம் தேதி காலை சென்னை எழும்பூர் ரேடிசன் புளூ ஹோட்டலில் தங்கியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப்பேசினார்.

நேற்று காலை முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றிருக்கின்றனர். அப்போது, ‘வாங்க ஒபிஎஸ் அண்ணனை பார்க்க போகலாம்’என்று அவர்களையும் கூட்டிக்கொண்டு ஓபிஎஸ் சை பார்க்க சென்றிருக்கிறார் எடப்பாடி. சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான பாலகங்காவும் அப்போது ஓபிஎஸ்சை பார்க்கச் சென்றிருக்கிறார்.

எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் சுமார் இருபது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். என்ன பேசினார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

உள்ளே சென்றதும் ஓபிஎஸ் சை வணங்கிவிட்டு, அவரது சகோதரர் மறைந்தது பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. கொஞ்ச நேர அமைதியை ஓபிஎஸ் சே உடைத்தார்.

’என்ன நான் இல்லாமலேயே ஆபீஸ்லாம் போறீங்க. மீட்டிங்லாம் நடத்துறீங்க....’என்று சற்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டிருக்கிறார் ஓபிஎஸ்.

அப்போது எடப்பாடி, ‘அதெல்லாம் இல்லைண்ணே... சென்னை வந்தேன் நல்ல நாளா இருக்கேனு ஆபீஸ் பக்கம் போயிட்டு வந்தேன்’ என்று பதில் அளித்திருக்கிறார். அதற்கு ஒரு புன்னகையை வெளியிட்டார் ஓபிஎஸ்.

‘என்னன்ணே பால் காய்ச்சினீங்களே வீட்டுக்குப் போகலையா?” என்று எடப்பாடி கேட்க, “உங்களுக்கு கவர்ன்மென்ட் வீடு இருக்கு. எனக்குதான் வீடே இல்லையே?”என்று சிரித்திருக்கிறார் பன்னீர்.

உடனடியாக அதற்கு பதிலளித்த எடப்பாடி, “என்னண்ணே இப்படி சொல்றீங்க. நீங்க சென்னையில மூணு வீடு வச்சிருக்கீங்க. வேணும்னா சொல்லுங்கண்ணே... இன்னொரு வீடு நானே வாங்கித் தர்றேன்” என்று சொல்ல அந்த இடமே சிரிப்பலையால் நிறைந்தது.

நேற்று மின்னம்பலத்தில் வெளியிட்ட கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடி- சசிகலா: துருப்புச் சீட்டாகும் ஓ.பன்னீர்.- அதிமுகவில் பவர் யுத்தக் களம்

என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “ஒபிஎஸ் விஷயத்தில் அதிரடி ஆபரேஷன் நடத்த எடப்பாடி விரும்பினாலும் அதிமுகவின் கட்டமைப்பு அதற்கு தோதாக இல்லை. அதனால்தான் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் என்பது போல ஓபிஎஸ்சிடம் மோதல், சமரசம் என்று தொடர் சங்கிலியை பின்னிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி”என்று தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில் ஹோட்டல் சந்திப்பு பற்றி சென்னை அதிமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

“அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு, அது என்ன என்பதை கண்டறிந்து அந்த விலையைக் கொடுப்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார். நேற்றைய ஓபிஎஸ் சுடனான சந்திப்பில் நடந்த உரையாடலே இதற்கு சான்று. சசிகலாவும் தான் அம்மாவுடன் இருந்த காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை வைத்திருந்தார். சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடியும் இப்போது அதே அஸ்திரத்தையே தன் அரசியல் நிலை நிறுத்தலுக்குப் பயன்படுத்துகிறார். இந்த விலை நிர்ணயித்த வியூகம் அரசியலில் எல்லா நேரத்திலும் எடுபட்டதில்லை என்பதற்கு சசிகலாவே உதாரணம்” என்கிறார்கள்.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 6 ஜுன் 2021