மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

பாலியல் புகார்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பாலியல்  புகார்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

2017ல் மீடூ #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாகத் தெரிவித்தனர். இதனால் பல குற்றச்சாட்டுகள், பல தீர்வுகள், பல சர்ச்சைகள் ஏற்பட்டது. பல முக்கிய பிரபலங்கள், குறிப்பாக அமைச்சர் பதவியிலிருந்தவர்களின் முகத்திரையும் இதன்மூலம் கிழிந்தது.

உலகம் முழுக்க மீடூ ஏற்படுத்திய அதிர்வலைகளைப் போன்று தற்போது தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்து பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் எனப் பல ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி 9444772222 என்ற வாட்ஸ் அப் எண்ணைப் பகிர்ந்து, மாணவிகள் தாமாக முன்வந்து, பாலியல் தொந்தரவுகள் தொடர்பாகப் புகார் அளிக்கலாம் என்று அறிவித்ததும், இந்த எண்ணுக்குப் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றிய செபிராஜ், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 5ஆம் தேதி மயிலாடுதுறை தனியார் பள்ளி ஆசிரியர் அண்ணாதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தமிழ் சமுதாயம் காலம் காலமாக போற்றி வணங்கி கொண்டிருக்கும் உயர்ந்த தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். அதற்கு இலக்கணமாக இன்றைக்கும் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுபோன்ற ஒரு சில கருப்பு ஆடுகள் செய்யும் இழி செயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப் பெரிய மன வேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஆசிரியர் மாணவர் உறவு என்பது பெற்றோர் குழந்தைகள் உறவைப் போன்றது. அதற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளதாக அத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

இனிமேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்குத் தனிக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள், ஆகியோர் இடம் பெற வேண்டும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விசாகா கமிட்டி, பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைத்து அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அளவில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அரசு வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 6 ஜுன் 2021