மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

முனைவர் ஜெயரஞ்சனுக்கு முக்கியப் பதவி! குவியும் வாழ்த்துகள்!

முனைவர் ஜெயரஞ்சனுக்கு முக்கியப் பதவி! குவியும் வாழ்த்துகள்!

பொருளாதார அறிஞரும் மின்னம்பலம் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவருமான முனைவர் ஜெயரஞ்சன் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக இன்று (ஜூன் 6) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் மாநில திட்டக் குழு கலைஞரால் 1971 மே 25 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. திட்டக் குழு மாநில முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநிலத் திட்டக் குழுவானது கடந்த 23-4-2020 அன்று மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதன் படி பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.

இக்குழுவின் பிற உறுப்பினர்களாக பேராசிரியர் ராம.சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தீனபந்து, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திருமதி மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முனைவர் ஜெயரஞ்சன் மின்னம்பலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். மின்னம்பலம் ஆசிரியர் குழு ஆலோசகராக இருக்கும் ஜெயரஞ்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சமூக, பொருளாதார தளத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளை மின்னம்பலம் நேயர்களோடு தினந்தோறும் வீடியோ வடிவில் உரையாடி வந்தார். பொருளாதாரம் என்றால் அது மேல் தட்டு வர்க்கத்தினரின் சப்ஜெக்ட் என்ற நிலையை மாற்றி தேநீர் கடைகளில் கூட பொருளாதாரம் பற்றி விவாதிக்க வைத்த பெருமை ஜெயரஞ்சனுக்கு உண்டு.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பொருளாதார மாற்றங்கள் குறித்து சுமார் 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டவர். இந்திய, சர்வதேச ஆய்வு நிறுவனங்களாக பல ஆய்வுகளை மேற்கொண்டவர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் அதுவும் குறிப்பாக அடித்தட்டு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து முனைப்பு காட்டி அந்தத் திசையிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் ஜெயரஞ்சன்.

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு ஜெயரஞ்சன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை வரவேற்று சமூக தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. மக்களுக்காக சிந்திக்கும் ஒருவர் உயர் பதவியில் அமரும் போது அரசின் செயல்பாடும் மக்கள் நலம் சார்ந்தே செல்லும் என்ற நம்பிக்கைதான் ஜெயரஞ்சனின் நியமனத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்குக் காரணம்.

முனைவர் ஜெயரஞ்சன் அவர்களுக்கு மின்னம்பலத்தின் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறோம்.

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

ஞாயிறு 6 ஜுன் 2021