மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

ரங்கசாமி செக் : மீண்டும் துணை முதல்வர் கேட்கும் பாஜக!

ரங்கசாமி செக் :  மீண்டும் துணை முதல்வர் கேட்கும் பாஜக!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று கடந்த மே 7ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் ரங்கசாமி. சரியாக ஒரு மாத காலம் ஓடிவிட்ட பிறகும் என்.ஆர். காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான பதவிப் பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கு வராததால் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

மே 7 ஆம் தேதி முதல்வர் பதவியேற்ற கையோடு கொரோனா தொற்றால் சென்னையில் சிகிச்சை பெற்றார் ரங்கசாமி. பத்து நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் அவர் புதுச்சேரி திரும்பினார். இதனிடையே துணை முதல்வர் பதவி வேண்டுமென்று பாஜக விடாப்பிடியாக இருந்தது. அதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்திய பின் துணை முதல்வர் பதவியை விட்டுவிட்டு 2 அமைச்சர்கள் அவர்களுக்கு முக்கியத் துறைகள், சபாநாயகர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது பாஜக.

சபாநாயகர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நிலையில்தான் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சொரோனா விபத்து ஏற்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவியை புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அதன் பின் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி.பாஜக சார்பில் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் நேற்று முன் தினம் (ஜூன் 4) முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். ’உங்கள் சார்பிலான அமைச்சர்கள் பட்டியலைக் கொடுங்கள். ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகியும் அமைச்சரவை அமைக்காமல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை’ என்று ரங்கசாமி ராஜீவ் சந்திரசேகரிடம் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான்... நேற்று (ஜூன் 5) மின்னம்பலத்தில் சபாநாயகர் விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய திருப்பம் பற்றிய செய்தி வெளியானது. உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவை சபாநாயகராக ஆக்குவதற்கு முயற்சி நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக புதுச்சேரி தெற்கு திமுக மாநில செயலாளர் சிவா திமுக தலைவரிடம் பேசியதாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.

இது பாஜக கூடாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே நேற்று பிற்பகல் பாஜக நிர்வாகிகள் கூடி விவாதித்திருக்கிறார்கள்.

“சுயேச்சை எம்.எல்.ஏ.வான நேரு தேர்தலுக்கு முன்பே ரங்கசாமியை சந்தித்து ஆசிபெற்றுத்தான் தேர்தலில் நின்றார். எனவே இதில் நிச்சயம் ரங்கசாமியின் வேலைகள் இருக்கும். அவர் 2011 இல் ஜெயலலிதாவையே ஏமாற்றியவர். இப்போது பாஜகவை ஏமாற்றி திமுக, காங்கிரஸோடு பேசி வைத்துக்கொண்டு ரங்கசாமி காய் நகர்த்துகிறார்”என்று மேலிடத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.

இதையடுத்து நேற்று பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் மீண்டும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார்.

“இதுவரை மேலிடப் பொறுப்பாளர்கள் என்ன சொன்னார்கள் என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இப்போது சொல்கிறோம். எங்களுக்கு சபாநாயகர் வேண்டாம். துணை முதல்வர் உட்பட இரு அமைச்சர்கள் வேண்டும். இதுதான் இறுதியானது. முடிவெடுத்துவிட்டு உடனே சொல்லுங்கள்” என்று ரங்கசாமியிடம் கோபமாக பேசிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் ராஜீவ் சந்திரசேகர்.

இதனால் புதுச்சேரியில் பாஜக-என்.ஆர். கட்சிகளிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு அமைச்சரவை அமைப்பது தாமதமாகிறது.

-வணங்காமுடி

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 6 ஜுன் 2021