மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

பிளஸ் 2 போன்று நீட் தேர்வையும் ரத்து செய்க: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

பிளஸ் 2  போன்று நீட் தேர்வையும் ரத்து செய்க: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்தது போல நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது தொடர்பாகக் கடந்த மூன்று நாட்களாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சட்டமன்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் பெறப்பட்ட கருத்துகளை முதல்வரிடம் சமர்ப்பித்தார். இதில் அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு முக்கியம் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிளஸ் 2 தேர்வின் அடிப்படையிலேயே உயர்கல்வி வாய்ப்பினை மாணவர்கள் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருந்தாலும் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதுபோன்று, தமிழகத்திலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தொழிற்கல்விகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை நடத்துவது மாணவர்களின் உடல்நலனுக்கு மிகவும் கேடு உண்டாக்குவதாக அமைந்துவிடும்.

எனவே, நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது போன்று நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதோ, அதே காரணத்திற்காக நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறைக் கல்வியிலும் மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 அடிப்படையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும். எனது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து தமிழகத்துக்குச் சாதகமாக முடிவெடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

ஞாயிறு 6 ஜுன் 2021