மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

ஜூன் 15 முதல் கொரோனா நிதியின் இரண்டாம் தவணை!

ஜூன் 15 முதல் கொரோனா நிதியின் இரண்டாம் தவணை!

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்களை ஜூன் 15ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் வகையில், வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட, பொது விநியோகத் திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க ஆணையிட்டு, அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கவும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும், முதல்வர் ஆணையிட்டு, கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 தேதியன்று இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

இதுமட்டுமன்றி, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இதனால், முதல் மாதக் கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் வரையில் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான வழக்குகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களின் வழக்கமான விநியோகம் ஒரு வாரக் காலம் தாமதமாகத் தொடங்கிட நேரிட்டு, ஜூன் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

எனவே, 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இந்த டோக்கன்களின் அடிப்படையில், 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15ஆம் தேதி முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

குடும்ப அட்டைதாரர்கள் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பினையும், கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும், ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில், மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகை ஒன்றாகவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

முன்னர் வழங்கப்பட்ட நலத் திட்ட உதவிகள் பெறும்போது எழுந்த தனி மனித இடைவெளி சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, 75 முதல் 200 வரையிலான பயனாளிகளுக்குக் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறைகளுக்கு இடமளிக்காமல், இவ்விரு நலத்திட்ட உதவிகளை உரிய முன்னறிவிப்புடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்வித விடுபடுதலுமின்றி, இரண்டாம் தவணைத் தொகை 2,000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்படும் என்பதால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில், தொடர்புடைய நியாய விலைக் கடையிலிருந்து எவ்வித சிரமமுமின்றி பெற்றுச் செல்லலாம்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், குறித்த நாள் மற்றும் நேரத்தில் பெற இயலாதவர்கள், வருகின்ற மாதத்தில் அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நியாய விலைக் கடைகளில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 6 ஜுன் 2021