மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

முதல்வர் வர வேண்டும்: டெல்டா விவசாயிகளின் சென்டிமென்ட்!

முதல்வர் வர வேண்டும்: டெல்டா விவசாயிகளின் சென்டிமென்ட்!

மேட்டூர் அணை, கல்லணை திறப்புக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என டெல்டா விவசாயிகள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு சில சென்டிமென்டான காரணங்களை விவசாயிகள் சொல்லியுள்ளனர்.

காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, டெல்டா விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 3ஆம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டிஎம்சி ஆகவும் உள்ளது. இந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்படும்.

இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கடைமடை பகுதிக்கும் முழுமையாகச் சென்று சேரும் வகையில், விவசாயிகளைக் கலந்துபேசி தூர்வாரும் பணிகள் இந்த ஆண்டு முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடியில் 547 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீரைக் கொண்டு சேர்க்க இயலும். இந்த ஆண்டு விவசாயப் பணிகளுக்கு தேவையான விதைநெல், உரங்கள், பூச்சி மருந்து, இதரவேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் மேட்டூர் அணை திறப்பதற்கு மட்டுமல்லாமல், கல்லணை திறப்புக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என டெல்டா விவசாயிகள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், “டெல்டா குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் போதிய அளவு நீர் இருப்பு இல்லாத ஆண்டுகளில், மேட்டூர் அணை திறப்பு பல வாரங்கள் தள்ளிப்போன வரலாறும் உண்டு. இதனால் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டு, வாழ்வாதாரம் இழந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். நல்லவேளையாக இந்த ஆண்டு அதுபோன்ற ஒரு நெருக்கடியான நிலை ஏற்படவில்லை. தற்போது தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கான சாதகமான சூழல் இயல்பாகவே அமைந்திருப்பது, நெகிழ்ச்சிக்குரியது” என்கிறார்கள்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வந்து கல்லணையைத் திறக்க வேண்டுமென அழைப்பு விடுப்பதற்கு சில சென்டிமென்டான காரணங்களை இவர்கள் முன்வைக்கிறார்கள். இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ள தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “காவிரி சமவெளி பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இரண்டாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காவிரி சமவெளியில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழனால் கட்டப்பட்ட மிகவும் பழைமையான நீர் ஒழுங்கியாக கல்லணை விளங்குகிறது. மண்ணின் மைந்தரான மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவரே நேரடியாக வந்து கல்லணையை திறப்பதுதான் மிகவும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும். போதிய சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கல்லணை திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 6 ஜுன் 2021