மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வு: முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

பிளஸ் 2 தேர்வு: முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில், அதனைத் தொகுத்து முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும் தேர்வை ரத்து செய்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரைக் கடந்த மூன்று நாட்களாகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்கள், சட்டமன்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

குறிப்பாக இன்று பிற்பகல் அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டமன்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் தேர்வை நடத்த வேண்டும் என்று கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தேர்வு மையங்களை அதிகரித்து தேர்வை நடத்தலாம். 100 மாணவர்களுக்கு ஒரு தேர்வு மையம் என்ற வீதத்தில் தேர்வு மையங்களை அதிகரிக்கலாம். மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தேர்வு மையங்களை அமைக்கலாம். மூன்று மணி நேரத் தேர்வை ஒன்றரை மணி நேரமாகக் குறைக்கலாம். விரிவான வினாக்கள் இல்லாமல் எளிமையாக எழுதும் வகையில் வினாத்தாளை மாற்றி அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் பாஜக தரப்பில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு நடத்த வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “முதல்வரின்அறிவுரையின் படி, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்த தொலைபேசி மூலம் சட்டமன்ற அனைத்து கட்சியினருக்கு அழைப்பு விடுத்தோம். இதனை ஏற்று அனைவரும் கலந்து கொண்டு அவர்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து சிஎம்சி இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடந்தது. இதுதொடர்பாக அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்போம். அதனைத் தொடர்ந்து முதல்வர் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா வேண்டாமா என்ற முடிவை அறிவிப்பார்" என்றார்.

தொடர்ந்து அனைத்து தரப்பினரின் கருத்துகளைத் தொகுத்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. விரைவில் பொதுத் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்தாகுமா என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது.

எனவே மாணவர்கள் தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருப்பது போன்று தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற அறிவிப்புக்குக் காத்திருக்கின்றனர்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

சனி 5 ஜுன் 2021