மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடி, சசிகலா: துருப்புச் சீட்டாகும் ஓ.பன்னீர்! -அதிமுகவின் பவர் யுத்தக் களம்!

கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடி, சசிகலா:  துருப்புச் சீட்டாகும்  ஓ.பன்னீர்! -அதிமுகவின் பவர்  யுத்தக் களம்!

சசிகலாவின் ஆடியோ உரையாடலுக்குப் பின் அதிமுகவைப் பற்றிய பரபரப்பான உரையாடல்கள் அக்கட்சித் தொண்டர்களிடையே அதிகம் பேசப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு வெளிப்படையாக நடக்கும் சம்பவங்கள், அதற்கு அடிப்படைக் காரணிகளாக உள்ளுக்குள் நடக்கும் சம்பவங்கள் என்று சங்கிலிக் கோர்வையாகத்தான் அதிமுகவில் நடப்பவற்றை கவனிக்க வேண்டியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ரேஸ்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு அக்கட்சியின் இரட்டைத் தலைமை மீதான நம்பிக்கை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில்தான் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்ற போட்டி ஓருங்கிணைப்பாளரான ஓ.பன்னீருக்கும், முதல்வராக இருந்தவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்டது.

முதல் முறை மே 7 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூடியபோது முடிவெடுக்க முடியாமல் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வெளிப்படையான மோதல்கள் வெடித்தன. அதன் பின் மே 10 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் சுக்கும், இபிஎஸ்சுக்கும் இடையே எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான நேரடி மோதல் வெடித்தது.

இருவரும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் விமர்சித்தனர். ஆனால் முன்னதாகவே வேலுமணி பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களிடம் எடப்பாடியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க ‘பேச வேண்டிய முறையில் பேசி’ கையெழுத்து வாங்கிவிட்டார். அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூவும், மனோஜ் பாண்டியனும்தான். இந்த ‘யுக்தியை’ அறிந்துகொண்ட ஓபிஎஸ் அன்று வேகமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

சேலம் உரையாடல்

அதன் பின் அதிமுகவின் இரட்டைத் தலைமைகள் தேனியிலும், சேலத்திலுமே தங்கி தங்கள் வட்டாரத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டனர். தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் எடப்பாடியையும், பின்னர் ஒபிஎஸ்சையும் நேரில் சந்தித்தனர். ஓபிஎஸ்சை மட்டும், எடப்பாடியை மட்டும் சந்தித்த நிர்வாகிகளும் உண்டு.

சேலத்தின் நெடுஞ்சாலை நகரில் இருந்து மூவ் ஆகி தன்னுடைய சிலுவம்பாளையம் வீட்டுக்கே போய்விட்டார் எடப்பாடி. அங்கே சென்னையை சேர்ந்த நிர்வாகிகள் அவரை சந்தித்தபோது,

‘சில பேரு என்னை ஓவர் கான்ஃபிடன்ஸ்னு சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. தேர்தலுக்கு முன்னாடி கூட எனக்கு சந்தேகம் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல. கட்சியை நாமே அம்மா மாதிரி முழுதா ஒற்றை தலைமையோடு நடத்துவோம். அம்மா 2006 தேர்தல்ல தோத்தபோது 61 தொகுதிதான் ஜெயிச்சாங்க. ஆனா இப்ப நாம அம்மா இல்லாமலயே 66 தொகுதிகள்ல ஜெயிச்சுருக்கோம். அம்மாவை குறைச்சு மதிப்பிடலை. நம்ம மேல நாம நம்பிக்கை வைக்கோணும், இனி நாமதான் கட்சி. எங்க செல்வாக்கு குறைஞ்சுருக்கோ அங்கே எப்படி கட்சிய பலப்படுத்தறதுன்னு நாம திட்டம் போடோணும். கொரோனா ஊரடங்கெல்லாம் முடியட்டும். சீக்கிரமே ஒற்றைத் தலைமையைக் கொண்டாந்து கட்சியை உள்ளாட்சித் தேர்தலுக்கும் எம்பி தேர்தலுக்கும் தயாராக்குவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தா எம்பி தேர்தலோட சட்டமன்றத் தேர்தலும் மறுபடியும் வர வாய்ப்பிருக்கு. அதனால கவலைப்படாதீங்க’என்று எடப்பாடி மிகவும் நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார்.

தேனி உரையாடல்

இதேநேரம் தேனியில் தன்னை சந்திக்க வந்த நிர்வாகிகளிடம் பேசிய ஓபிஎஸ், ‘இந்தத் தேர்தல்ல நாம ஜெயித்திருக்க வேண்டிய தேர்தல். ஆட்சிக்கு எதிரான எந்த அலையும் இல்லை. எம்பி சாரையும், (டிடிவி தினகரன்) சின்னம்மவையும் கட்சிக்குள்ள சேர்த்திருந்தா இந்த நிலைமை இன்னிக்கு நமக்கு வந்திருக்காது. தேர்தலுக்கு முன்னாடியே இதைதான் நான் சொன்னேன். ஆனால் அவரு( எடப்பாடி) கேக்கலை, அதனாலதான் நாம தோத்துப் போயிட்டோம். 43 தொகுதிகள்ல நாம அமமுகவால வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். சேர்ந்து நின்னுருந்தோம்னா அதிமுக, அமமுக தொண்டர்கள் தவிர ஒதுங்கி நின்ன பல பேரும் உழைச்சிருப்பாங்க. நாம நிச்சயமா 120 இடத்துக்கு மேல வந்திருக்க முடியும். ஆனா அத்தனையும் கெடுத்தது அவருதான். நான் எப்பவுமே கட்சியைதான் முன்னிறுத்துவேன். என்னை முன்னிறுத்திக்க மாட்டேன். ஆனா அவரு தன்னை முன்னாடி நிக்கிறதுலதான் இருக்காரு. அதனாலதான் எல்லாம் வீணாப் போச்சு. இனி கட்சியை முன்னிறுத்தணுமா தனிநபரை முன்னிறுத்தணுமானு முடிவு பண்ணுங்க’என்று சொல்லியிருக்கிறார்.

சசிகலாவுக்கு போன சங்கதிகள்

அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதே அக்கட்சிக்குள் நடக்கும் பல விஷயங்கள் சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் துல்லியமாக சென்று கொண்டிருந்தன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கேட்க வேண்டுமா என்ன? சேலத்திலும், தேனியிலும் நடந்த உரையாடல்கள் சசிகலாவுக்கு தெளிவாக சென்றன.

கட்சியை ஒற்றை ஆளாக கைப்பற்ற நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான செயல் திட்டங்களை அவர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரைக் கொண்டுவந்து ஒருங்கிணைந்த அதிமுகவை கட்டமைக்க நினைக்கிறார். இதுதான் சசிகலாவுக்குச் சென்ற சங்கதிகள்.

கொஞ்சம் தாமதித்தாலும் எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றும் வேலைகளில் தீவிரமாகிவிடுவார் என்று தெரிந்துதான் தான் தொண்டர்களிடம் பேசிய உரையாடல்களை டேப் செய்து வெளியிட முடிவெடுத்தார் சசிகலா. அதன் அடிப்படையிலேயே தொடர்ந்து உரையாடல்கள் வந்தன. ‘சீக்கிரம் கட்சியை நான் சரிபண்ணிடறேன் கவலைப் படாதீங்க’என்றெல்லாம் சசிகலா பேசியது அதிமுகவில் உண்மையாகவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த உரையாடலின்போது சசிகலா, ‘ரெண்டு பேரும் அடிச்சுக்கறதை பாத்தா கவலையா இருக்கு’ என்று குறிப்பிட்டிருப்பார். அதுதான் அத்தனை தொண்டர்களின் மனநிலை,

ஆடியோவால் ஆடிப்போன எடப்பாடி

சசிகலாவின் ஆடியோ உரையாடல்களுக்கு கட்சி நிர்வாகிகளிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு எடப்பாடியை ஆடிப்போக வைத்துவிட்டது. அதனால்தான் உடனடியாக சசிகலா எதிர்ப்பில் எக்ஸ்பர்ட் ஆன கே.பி.முனுசாமியைத் தொடர்புகொண்டு பேட்டி கொடுக்கச் சொன்னார். கே.பி.முனுசாமியும் அவசர அவசரமாக வேப்பனஹள்ளியில் இருந்தபடியே அதிமுகவின் முக்கியமான பிரச்சினைக்காக பிரஸ்மீட் கொடுத்தார். “சசிகலாவுக்கு அதிமுகவின் ஒரு தொண்டர் கூட செவிகொடுக்க மாட்டார்”என்று அந்த பிரஸ் மீட்டில் கூறினார் கே.பி.முனுசாமி. ஆனால் ஒரு தொண்டர் கூட செவிமடுக்காத அந்த ஆடியோவை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் செவி மடுத்து அதன் பின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி முனுசாமியும் செவிமடுத்து அதன் பின்னரே அதற்காக பிரஸ்மீட் வைத்தார். சசிகலா ஆடியோ அதிமுகவில் எந்த அளவுக்கு செவிமடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு கே.பி. முனுசாமியின் பத்திரிகையாளர் சந்திப்பே சாட்சியாகிவிட்டது.

ஓபிஎஸ்சை பகைத்துக் கொள்ள முடியாத எடப்பாடி

இந்த நிலையில்தான் சசிகலா,எடப்பாடி ஆகிய இருவருமே இப்போது ஓபிஎஸ்சை மையமாக வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ்சுக்கு நிர்வாகிகள் ஆதரவில்லை, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவில்லை என்று ஒரு பேச்சு அதிமுகவில் இருக்கிறது. ஆனால் அவர் இப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முதன்மையான நாற்காலியில் இருக்கிறார். அதிமுகவை கைப்பற்ற தான் மேற்கொள்ள வேண்டிய முயற்சிக்கு ஓபிஎஸ்சின் ஆதரவு வேண்டும் என்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார். ஒபிஎஸ்சை நிர்பந்தப்படுத்தி அந்த ஆதரவை பெற முடியாது என்பதும் எடப்பாடிக்குத் தெரிந்திருக்கிறது.அதனால்தான் தலைமைக் கழகத்தில் காரசார விவாதம் என்றாலும் அன்று மாலையே ஓ.பன்னீரைத் தேடிச் சென்றார். அதுபோல ஜூன் 4 ஆம் தேதி திடீரென அதிமுக தலைமை நிலையத்தில் கூட்டத்தைப் போட்டுவிட்டு இன்று (ஜூன் 5) ஓபிஎஸ்சை தேடி அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார்.

ஒபிஎஸ் விஷயத்தில் அதிரடி ஆபரேஷன் நடத்த எடப்பாடி விரும்பினாலும் அதிமுகவின் கட்டமைப்பு அதற்கு தோதாக இல்லை. அதனால்தான் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் என்பது போல ஓபிஎஸ்சிடம் மோதல், சமரசம் என்று தொடர் சங்கிலியை பின்னிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்சே நொந்து போய் இந்த சங்கிலியை பிய்த்து எறிந்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார் என்றும் கருதலாம் எடப்பாடி.

ஓபிஎஸ் வியூகத்தில் சசிகலா

அதேநேரம் ஓ.பன்னீர் செல்வமோ இனி அடுத்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறார். எடப்பாடி தலைமையேற்றால் அதிமுகவுக்கு எதிராக அமமுக என்ற ஒரு கட்சி நிரந்தரமாகிவிடும். அது அதிமுகவுக்கு நிரந்தரத் தலைவலியாகி விடும். அதேநேரம் சசிகலா தலைமையேற்றால் அமமுகவும் அதிமுகவோடு கரைந்துவிடும். இப்போது அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் பலரும் அதிமுகவுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். அதிமுக தார்மீக ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பெரும் பலம் என்று நினைக்கிறார். இந்த அடிப்படையில்தான் ஓபிஎஸ் சசிகலாவோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவே தனது ஆபரேஷனுக்கு ஓபிஎஸ் சின் ஆதரவை சசிகலாவும் முக்கியத் தேவையாக கருதுகிறார்.

ஆக ஒற்றையாக அதிமுகவைக் கைப்பற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை கைப்பற்றி ஒருங்கிணைக்க நினைக்கும் சசிகலா இந்த இருவருக்கும் இடையே ‘ஒருங்கிணைப்பாளர்’ என்ற இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் ஓ.பன்னீர்.

இருவருமே பன்னீரை மையமாக வைத்துதான் வியூகம் வகுக்கிறார்கள். ஆனால் பன்னீரின் கடைக்கண் எடப்பாடி பக்கம் திரும்பாமல் சசிகலாவின் பக்கமே இருக்கிறது. இதன் எதிரொலி இன்னும் சில மாதங்களில் அதிமுகவில் பரபரப்புச் சம்பவங்களாக நடக்கும்! அப்போதுதான் பன்னீரின் மௌனத்தின் அர்த்தம் புரியும்!

-ராகவேந்திரா ஆரா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

சனி 5 ஜுன் 2021