மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கிராம சபை கோரிக்கை: குளத்தை மீட்ட கனிமொழி

கிராம சபை கோரிக்கை: குளத்தை மீட்ட கனிமொழி

இன்று (ஜூன் 5) உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படும் நிலையில் அதை செயல்வடிவமாகக் கொண்டுவரும் நடவடிக்கைகளை நேற்றே தனது தூத்துக்குடி தொகுதியில் தொடங்கியிருக்கிறார் கனிமொழி எம்பி.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், மாவட்ட நிர்வாகம், என்வயர்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இண்டியா ஆகியவற்றை ஒருங்கிணைத்து.... 417 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆத்தூர் கஸ்பா குளத்தை சீரமைக்கும் பணியை பச்சைக் கொடி காட்டி நேற்று (ஜூன் 4) மாலை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்பி. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேல ஆத்தூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சதீஸ்குமாரிடம் பேசினோம்.

“தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் கஸ்பா கிராமத்துக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்திருந்தார் கனிமொழி எம்.பி. அப்போது மக்கள் திரண்டு அவரிடம் ஒரு முக்கியமான கோரிக்கை வைத்தோம்.

’அம்மா....ஆத்தூர்ல பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 417 ஏக்கர் பரப்புள்ள குளம் இருக்குது. இந்த குளத்தால சுத்தியுள்ள 16 கிராமங்கள் குடிதண்ணீர் பெறுது. இந்த குளத்து தண்ணியால 2000 ஏக்கருக்கும் மேல விவசாயம் நடந்திருக்கு. கடல்லேர்ந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள இந்த ஊர் இருக்கு. அதனால நிலத்தடி நீரெல்லாம் உப்பாகுற அபாயத்துல இருக்கோம். இந்த குளத்தை ரொம்ப வருஷமா தூர் வாருவதே இல்லை.அதனால இப்ப இந்த குளத்தின் ஆழம் குறைஞ்சு பல செடிகொடிகள் புதர்கள் மண்டிக் கெடக்கு. இதெல்லாம் அகற்றி குளத்தை தூர்வாரினா இந்த சுத்து வட்டாரத்துல விவசாயம் செழிக்கும், நிலத்தடி நீரும் உப்பாகாம தடுக்கலாம். இடையில இந்த குளத்துக்காக அரசாங்கம் 50 லட்சம் ஒதுக்குனதா சொன்னாங்க. ஆனா எதுவுமே நடக்கல. அதனால, அம்மா நீங்க கவனம் எடுத்து இந்த ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வார நடவடிக்கை எடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்’என்று கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்தோம்.

அவரும், ‘இது மிக முக்கியமான பிரச்சினைனு சொல்லி கவனம் எடுத்துக்கிட்டார். நிச்சயமா செய்யுறேன்னு வாக்குறுதியளித்தார். அதன் பின் ரெண்டு மாசத்துலயே கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. ஆனபோதும் பொதுப்பணித்துறை வசம் இருக்கும் அந்த குளத்தின் விவரங்களைக் கேட்டறிந்தார் கனிமொழி. இடையே இங்குள்ள வெற்றிலை விவசாய சங்கம் சார்பாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடமும் மனு கொடுத்தோம்.

இதையெல்லாம் தொடர்ந்து கனிமொழி எம்பி மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களிடம் பேசி இன்னிக்கு எங்க முப்பதாண்டு கோரிக்கையை தீர்த்து வைத்திருக்கிறார். இன்று குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது”என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜூன் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்துக்கான இந்த தினத்தின் இலக்கு, ‘சுற்றுச் சூழல் அமைப்புகளை சீரமைத்தல்’என்பதே. அதாவது நீர் நிலைகளை தூர்வாருதல், காடுகளை மீளமைத்தல் உள்ளிட்டவை. அந்த வகையில் உலக சுற்றுச் சூழல் தினத்துக்கான தனது செய்தியை, செயல் வடிவிலேயே தூத்துக்குடியில் நிகழ்த்தியிருக்கிறார் கனிமொழி.

இதில் இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது,

“417 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆத்தூர் கஸ்பா குளத்தை சீரமைக்கும் பணி துவங்கியது. இதனால் இக்குளத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களின் குடிநீர் மற்றும் 2222 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதி மேம்படும். இக்குளத்தை தூர்வாரும் போது எடுக்கப்படும் மண்ணை வெளியேற்றாமல் குளக்கரைகளை பலப்படுத்தப் பயன்படுத்தப்படுவதோடு, பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்காக குளத்தில் சிறு சிறு தீவுகள் ஏற்படுத்தப்படும்”என்று கூறி தன் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல பறவைகள், உயிரினங்களுக்காகவும் புதிய ஏற்பாடுகளை செய்திருக்கிறார் கனிமொழி.

-ஆரா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 5 ஜுன் 2021