மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கலைஞருக்கு நல்லதொரு காணிக்கையாக பண்பாட்டுத்தள அசைவுக்கான நடவடிக்கைகள்

கலைஞருக்கு நல்லதொரு காணிக்கையாக பண்பாட்டுத்தள அசைவுக்கான நடவடிக்கைகள்

அ. குமரேசன்

மக்களை அடக்கியாள விரும்புகிற சர்வாதிகாரிகளும் இனவெறியர்களும் ஆதிக்கவாதிகளும் எப்போதும் முதலில் கைவைப்பது நூலகங்களின் மீதுதான். புவிப்பரப்பெங்கும் நிகழ்ந்து வந்துள்ள இந்த வரலாற்றை அறிந்திருப்பவர்களுக்கு, மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.70 கோடி நிதியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட இருப்பதன் வரலாற்று முக்கியத்துவம் புரியும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழாவே இந்த அறிவிப்புதான் எனலாம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஜூன் 3 அன்று வெளியிட்ட ஐந்து அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. இயல் இசை நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அது போல, இலக்கியப் பணியாற்றி வருவோரில் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் ‘இலக்கிய மாமணி’ விருது, ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் பணமுடிப்புடன் வழங்கப்பட இருக்கிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் உலகளாவிய அளவிலும் விருதுகள் பெறும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கிற அல்லது விரும்புகிற மாவட்டத்தில் ‘கனவு இல்லம்’ வழங்கப்பட உள்ளது.

இலக்கிய உலகம் கொண்டாடி வரவேற்கிற இந்த அறிவிப்புகளோடு, மாறுபாலினத்தவர்களும் மாற்றுத்திறனாளிகளும் நகர்ப்புற அரசுப் பேருந்துகளில் செல்ல இலவசமாகப் பயணம் அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர். மேலும், திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழைவெள்ள பாதிப்பினால் சேதமடைவதைத் தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

கலைஞர் பிறந்தநாளில் அவருக்கு மிகச் சிறந்த காணிக்கை என்று இந்த அறிவிப்புகளைக் கூறலாம். தமிழ்நாட்டுப் பண்பாடு, சமூகவெளி, வேளாண் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த தாக்கங்களையும் முற்போக்கான மாற்றங்களையும் ஏற்படுத்தப் போகிற நடவடிக்கைகள் இவை.

நூலகம் என்ன செய்யும்?

இப்படிச் சொல்கிற அளவுக்கு ஒரு நூலகம் என்ன செய்துவிடும்? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முன் மாதிரியாகக் கொணடு மதுரையில் நவீனத் தகவல் தொடர்பு வசதிகளுடன் எழவுள்ள நூலகம், பொதுவாகப் புத்தகக் காதலர்களுக்கான பூங்காவாக மட்டுமல்லாமல், ஆய்வாளர்களுக்கான இருக்கையாகத் திகழும். வரலாறு, மொழி, அறிவியல், அரசியல், பொறியியல், மருத்துவம், சமூகம் என அனைத்துத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளக்கூடியவர்கள் தங்களுடைய பங்களிப்புகளால் தமிழ்நாட்டின் பண்பாட்டுத்தளம் மேலும் மேலும் வளர்ச்சி பெறப் பங்களிப்பார்கள். அவர்கள் தங்கள் ஆய்வுக் கருத்துகளை முன்வைப்பதற்கான உரையரங்குகளும் அந்தப் பங்களிப்பில் இணைந்துகொள்ளும். இப்படிப்பட்ட முன்மாதிரியான அண்ணா நூலகத்தின் கம்பீரத்தைக் குலைக்க என்னவெல்லாம் செய்யப்பட்டது, உயர்நீதிமன்றம் தலையிட்டுதானே அதை மீட்க முடிந்தது என்ற செய்திகளையும் இங்கே நினைவுகூரலாம்.

பள்ளி/கல்லூரி வளாகங்களைத் தாண்டி மாணவர்களுக்கான கல்விச்சாலையாக இது விளங்கும். ஏன், குழந்தைகளையும் அவர்களது கனவுலக உறவினர்களான புத்தகங்களும் இங்கே வரவேற்பார்கள். சென்னையின் அண்ணா நூலகம் இப்படியெல்லாம் இருப்பதை அங்கே சென்று வருகிறவர்கள் அறிவார்கள். அங்கிருப்பது போன்று, உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்படுகிற லட்சக்கணக்கான புத்தகங்களோடு, பத்திரிகைகளும் கணினி ஏற்பாடுகளும் சேர்ந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

சரி, இந்த நூலகமாவது ஒரு தோட்டமாக அங்கே வருவோருக்குப் புத்தகக் கனிகளை அளிக்கும். ஆனால், எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது அளிப்பதால் மக்களுக்கு என்ன பயன்? விருதுகள் அறிவிக்கப்படுகிறபோது அந்த எழுத்தாளர்கள் யார், அவர்களுடைய படைப்புகள் என்ன என்று ஒரு பகுதி மக்கள் விசாரிப்பார்கள். அவர்களிலும் ஒரு பகுதியினர் அந்தப் படைப்புகளைத் தேடிப் படிப்பார்கள். கதை, கவிதை மட்டுமல்லாமல் அறிவியல், வரலாறு எனப் பல தளங்களில் அந்த மாமணிகள் வழங்கியுள்ள புத்தகங்கள் மக்களைச் சென்றடையும். வாசிக்கிற சமூகம்தான் நம்பிக்கையோடு முன்னேற்றத்தை நோக்கி நகரும். ஆகவேதான் உலகின் முன்னேறிய நாடுகளும், பெருமளவுக்கு சமத்துவ நிலைகளை ஏற்படுத்தியுள்ள சமுதாயங்களும் புத்தகங்களுக்கும் அவற்றைப் பிறப்பிக்கிறவர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன.

இதே போன்றதுதான், விருது பெற்ற எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம். அற்புதமான படைப்புகளை வழங்கியுள்ள பல எழுத்தாளர்கள் இப்போதும் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை வீட்டு வாடகையாகத்தான் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே அயர்ந்துபோய் பேனாவை மூடிவிடுகிறவர்களும் உண்டு. விருது பெறும்போது ஓரளவுக்காவது ஊடகங்களின் கவனத்தைப் பெறுகிறவர்களில் பலர் பின்னர் அந்த விருதுகளைப் பராமரிக்கக்கூட இயலாதவர்களாக நலிந்துபோன வாழ்க்கையை எதிர்கொள்கிற நிலைமையை எங்கும் காணலாம். வயது முதிர்ந்த பல இலக்கியப் படைப்பாளிகள் தங்களை இந்தச் சமூகம் கவனிக்குமா என்று ஏங்குவது பற்றியும், சமூகம் அவர்களைத் தெரிந்துகொள்ளாமல் கூட இருப்பது பற்றியும் எப்போதாவது அவர்களைச் சந்தித்து உரையாடுகிற எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, இப்படிப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் மரியாதை அளிக்க வேண்டும் என்ற கனவுதான் இப்படியொரு இல்லமாகத் திறக்கப்பட உள்ளது.

மாறுபாலினத்தவர்களைக் குறிப்பிட இதே சமூகத்தில் எப்படிப்பட்ட அடைமொழிகளெல்லாம் இருந்திருக்கின்றன! அந்த அடைமொழிகளில் எத்தனை இளக்காரமும், அவமானப்படுத்துகிற வக்கிரமும் இருந்திருக்கின்றன! திருநங்கை என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் கலைஞர்தான். அவர்களுக்கான நலவாரியத்தையும் அவர்தான் ஏற்படுத்தினார். அதே போன்று, ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் என்று கொண்டுவந்தார். அவருடைய பிறந்தநாளில் மாறுபாலினத்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற அறிவிப்பு வந்திருப்பது எவ்வளவு பொருத்தம்! மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் ஐந்து ஆணைகளில் ஒன்று பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணத்திற்கான அனுமதி. அப்போது மாறுபாலினத்தவர்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் தங்களுக்கும் இந்த உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்போது அது ஏற்கப்பட்டு அறிவிப்பாக வந்துவிட்டது.

சமூக அசைவை நோக்கி

இந்த நடவடிக்கைகள் பெண்களும், மாறுபாலினத்தவர்களும், மாற்றுத்திறனாளிகளும் கையிருப்புப் பணம் பற்றிய கவலையின்றி வெளியே நடமாடுவதற்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அது மட்டுமல்ல, அவர்களையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டின் அடுத்தகட்ட நகர்வுக்குக் கைப்பிடித்துச் செல்லும் சமூக அசைவுக்கான வெளி இப்போது விசாலமடைகிறது. சமூக அசைவு என்பதன் பொருள் புரிந்தோருக்கே அதற்கான வெளி விசாலமடைகிறது என்பதன் பொருளும் புரியும். வெறும் கட்சி சார்ந்த அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த அரசியல் காழ்ப்புடன் கண்களை மூடிக்கொள்கிறவர்களால் அந்த விசால வெளியைக் காண முடியாது.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய நெல்கிடங்குகள் கட்டப்படுவதும் அந்த வட்டாரத்து வேளாண் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, சமூக வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் துணையாக இருக்கும். பொருளாதார பலமும் சமூக மேம்பாடும் பிரிக்க முடியாதவை.

இவ்வாறு மனந்திறந்து பாராட்டுகிறபோது, நூலகத்திற்கான புத்தகத் தேர்வு முதல், விருதுகளுக்கும் வீடுகளுக்குமான பயனாளிகள் தேர்வு வரையில் எவ்வகையிலும் குறைகூறுவதற்குச் சந்துபொந்துகள் கிடைத்துவிடாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற உரிமையையும் எடுத்துக்கொள்ளலாம். இப்போதே, இத்திட்டங்களை வரவேற்கிற சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பின்னூட்டமாக, இதெல்லாம் விளம்பர ஏற்பாடுகள் என்றும், வேண்டியவர்களுக்குச் சலுகைகள் கிடைக்கச் செய்கிற உத்திகள் என்றும் சிலர் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். எச்சரிக்கையுடன் கையாள வலியுறுத்துவது வேறு, வயிற்றெரிச்சலுடன் கரித்துக்கொட்டுவது வேறு என்பதைத் தமிழ் மக்கள் உணர்வார்கள்.

இந்த அறிவிப்புகளை வரவேற்கிற எனது முகநூல் பதிவைப் படித்த ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “என்ன ஒரேயடியாக ஸ்டாலின் அரசைப் பாராட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? நாளைக்கே கடுமையாக விமர்சிக்கிற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்,” என்று அவர் கேட்டார். “ஏன், அப்படி நிலைமை வந்தால் கடுமையாக விமர்சித்துவிட்டுப் போகிறேன். அதற்காக இன்றைக்குப் பாராட்டக்கூடாது என்பது என்ன மாதிரியான அரசியல்,” என்று நான் கேட்டேன். இப்படிக் கரித்துக்கொட்டுவோருடனும் உட்கார்ந்து உரையாடலாம். எங்கே? கலைஞர் நூலக வளாகத்தில்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 5 ஜுன் 2021