மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமா?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமா?

நா.மணி

2020ஆம் ஆண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடக்கும்போது முதல் அலை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. தடுப்பூசிகள் எப்போது வரும், சகஜ நிலை எப்போது திரும்பும் என்று ஒரு நிச்சயமற்ற, அசாதாரண சூழ்நிலை நிலவியது. கொரோனா பற்றிய பயம் பீதி அச்சம்கூட இப்போது இருப்பதைக் காட்டிலும் கூடுதலாகவே இருந்தது. இதன்காரணமாக, "எங்கள் உயிர் முக்கியம். பாதுகாப்பு முக்கியம். மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. தேர்வை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை. தயவுசெய்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வையுங்கள்" என்று மாணவர்கள், பெற்றோர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

அந்த அவலக் குரலுக்கு மத்திய அரசும் செவி சாய்க்கவில்லை. உச்ச நீதிமன்றமும் செவி சாய்க்கவில்லை. அவ்வளவு அசாதாரண சூழ்நிலையிலும், நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் நடந்தேறியது. மாணவர்கள் கேட்டது தள்ளிவையுங்கள் என்று மட்டுமே. இதன் விளைவாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த 14 விழுக்காடு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லவில்லை. அது மாணவர்களின் விருப்பமின்மை என்றுகூட வாதிடலாம். எப்போதும் அப்படிக் கொஞ்சம் பேர் இருப்பார்கள் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட மாணவர்கள் இதில் ஒரு பகுதியாகவே இருக்க முடியும். 2019ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் 7 விழுக்காட்டினர் தேர்வு எழுதவில்லை. அப்படிப் பார்த்தால்கூட மீதமுள்ள 7 விழுக்காடு, (சுமார் 20,000) மாணவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு அஞ்சியே தேர்வு மையங்களுக்கு வரவில்லை. அதேபோல், ஜேஇஇ அட்வான்ஸ் அதாவது, முதல்நிலை தேர்வு முடிந்து இரண்டாம்நிலைக்குத் தேர்வு பெற்றவர்கள். இவர்களில், 7 விழுக்காட்டினர் கொரோனாவுக்கு அஞ்சி, ஐஐடியில் இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று தேர்வு மையங்களுக்கு வரவில்லை. இவர்களுக்குக்கூட ஒரு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும், ஜேஇஇ முதல் நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் நீட் எழுத முடியாமல்போன 7 விழுக்காடு மாணவர்கள் எதிர்காலம்? அந்த வாய்ப்பு கிடைக்காமையால் மருத்துவக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பே அற்றுப் போயிருக்கலாம்.

சிபிஎஸ்இ தேர்வு ரத்தின் அரசியல்

அப்போதெல்லாம் வாய்திறவாத பிரதமர் இப்போது, "மாணவர்களின் பாதுகாப்பும் உயிரும் முக்கியம். கொரோனா பெருந்தொற்றால் நாட்டில் ஒரு நிலையற்ற சூழல் நிலவுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கவலைகளை கருத்தில்கொண்டு 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது" என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். 10 லட்சம் மாணவர்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு என்றால், 2020ஆம் ஆண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை சுமார் 15 லட்சம். அவரது கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்தும், பிரதமரின் முடிவை ஏற்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்ன செய்யப் போகின்றன? சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து வழியாக விடப்படும் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்று பார்ப்போம்.

சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்ட முயற்சிகள்

இந்தப் பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்தலாம் என உண்மையிலேயே சிபிஎஸ்இ வாரியம் மெனக்கெட்டு சிந்தித்து செயலாற்றியுள்ளது. மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கருத்துக் கோரியுள்ளது. இரண்டு மாற்று வாய்ப்புகளை சிபிஎஸ்இ வாரியம் முன்வைத்து கருத்துரைகளைக் கோரியது. ஒன்று,

தான் தேர்வு நடத்திவரும் 174 பாடங்களில், 20 முக்கியமான தேர்வுகளை மாத்திரம் தேர்வு செய்து தேர்வுகளை நடத்துவது. சிபிஎஸ்இ வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துவது. இப்போதைய தேர்வுகள் வடிவத்திலேயே நடத்துவது. அதற்கு மூன்று மாதக் கால அவகாசம் தேவை என சிபிஎஸ்இ வாரியம் கோரியது.

இரண்டாவது, அதே முக்கியமான 20 பாடங்களில் மட்டும் தேர்வுகள். ஒன்றரை மணி நேரத் தேர்வாக, தேர்வு நடக்கும் கால அளவை பாதியாகக் குறைப்பது. தேர்வுத் தாள்களை மாற்றி அமைத்து, கொள்குறி வகை (Objective Type) மற்றும் குறுகிய வினாக்களை மட்டும் கேட்பது. மாணவர்கள் தங்கள் சொந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். இரண்டு தவணைகளில் மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து நடத்தலாம். இரண்டு வார இடைவெளியில் இரண்டையும் நடத்த வேண்டும்.

இந்த இரண்டு வாய்ப்புகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன் வைத்து, கருத்துக் கோரியது. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளது. அதில் 29 மாநிலங்கள், தேர்வுகளை நடத்தவோ அல்லது மத்திய அரசு என்ன கூறுகிறதோ அதை ஒப்புக்கொள்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின், இத்தகைய சீரிய முயற்ச்சியின் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதைத் தவிர்த்து, மூன்றாவது முடிவை, எங்கும் விவாதிக்காத முடிவை, பிரதமர் தலைமையிலான கூட்டம் எடுக்கிறது. அதற்கு, "மாணவர்களின் பாதுகாப்பு. உடல்நலன் மற்றும் மன நலன் கருதி" என்று பெயர் சூட்டப்படுகிறது. உண்மையில், மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவா இது?

சிபிஎஸ்இ தேர்வுகளை எதிர்கொள்ளும் சுமார் 31,000 பள்ளிகளில், சுமார் 28,000 பள்ளிகள் தனியார் பள்ளிகள். சிபிஎஸ்இ வாரியத்தில், அதிலும் குறிப்பாக, தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள், உயர்கல்வி வாய்ப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளை நம்பி இருப்பவர்களே. 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை நம்பி படிப்பவர்கள் அல்லர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், மேலாண்மை, வேளாண்மை என்ற எல்லாப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை நம்பி இருப்பவர்களே. இதுதவிர இந்தியாவின் அனைத்து புகழ்பெற்ற உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பல படிப்புகளுக்கும், மத்திய பல்கலைக்கழகங்கள் என அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு வழியாகவே உயர் கல்வியை அணுகும் மாணவர்கள் படிக்கும் கல்வி முறை சிபிஎஸ்இ வாரியம்.

சிபிஎஸ்இ வாரியத்தில், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் அல்லது பணக்காரர்கள் செய்யும் செலவுகளைச் செய்யும் சக்தி படைத்தவர்கள். கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெருவாரியான சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு என்னும் மன அழுத்தம், நுழைவுத் தேர்வு என்னும் மன அழுத்தம் என்ற இருவேறு அழுத்தங்களால் இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிக்குண்டு கிடப்பவர்கள். அத்தகைய மன அழுத்தங்களில், அவர்களைப் பொறுத்தமட்டில், 12ஆம் வகுப்பு தேர்வு என்னும் மன அழுத்தம், தேவையற்ற அழுத்தம். அதைப் போக்கி இருக்கிறார் என்று மகிழ்ச்சி அடையலாம்.

அவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், இந்தியா முழுவதும், சுமார் ஒரு கோடி மாணவர்கள் எதிர்கொள்ளும் 12ஆம் வகுப்பு தேர்வு, அதன் மன அழுத்தம் மற்றும் கொரோனா காலப் பாதுகாப்பு இன்மையை, சிபிஎஸ்இ மாணவர்களுக்காக ரத்து செய்யப்பட்டிருக்கும் மன அழுத்தம் மற்றும் பாதுகாப்போடு இணைத்துப் பார்க்கக் கூடாது. அதைவிட முக்கியமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்தில் மிகப் பெரிய அரசியல் பொதிந்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், உயர் கல்வியில் சேர விரும்பும் ஒவ்வொருவரும் நுழைவுத் தேர்வு வழியாகவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைய முடியும். பிரதமர் ரத்து செய்திருக்கும் சிபிஎஸ்இ தேர்வுகள் வழியாக, அனைத்து மாநிலங்களிலும் ஓர் அதிர்வலையை உருவாக்க இயலும். "இன்றுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, சிபிஎஸ்இ வாரியமே தேர்வுகளை ரத்து செய்து விட்டது. மாநிலங்கள் ஏன் ரத்து செய்யக் கூடாது" என்பது போன்ற ஓர் அழுத்தமும் இதில் தரப்பட்டிருக்கிறது. உயர்கல்வி வாய்ப்புக்காக மாற்று வழியின்றி, அனைவரையும் நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதே இந்த அறிவிப்பின் அடிநாதம்.

தமிழ்நாட்டின் தனித்துவமான நிலை

இப்போதைய நிலையில், கல்வி பொதுப் பட்டியலில் இருந்தாலும், ஒரு தனித்துவமான அணுகுமுறையை தமிழ்நாடு கொண்டுள்ளது. எல்லா வகை உயர்கல்வி சேர்க்கைக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நிலைபாட்டில் இருக்கிறது. தேவையெனில் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள், மதிப்பீட்டு உத்திகள் ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதுவே அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு ஏற்ப, சமூகநீதியைக் காக்க பயன்படும் என்று நம்புகிறது. கூட்டாட்சி தத்துவத்தைப் பயன்படுத்தி, மாநிலங்கள் சுயமாக திட்டமிட்டு, கல்வி சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்று நம்புகிறது. அதன்படி பயன்பெற்றும் வருகிறது. அதனால்தான், நீட் எதிர்ப்பு போராட்டம் இங்கு இவ்வளவு தீரத்துடன் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை

தமிழ் நாட்டில் மருத்துவம் தவிர அனைத்து உயர்கல்வி சேர்க்கையும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வேளாண்மை, கால்நடை மருத்துவம், அரசுப் பொறியியல் கல்லூரிகள், மற்றும் சில முக்கியமான தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு ஆகியவை 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அதிமுக்கியமாக தேவைப்படுகிறது. அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர்கள் சேர்க்கைகள் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.

பொதுத் தேர்வு ரத்தானால் எதிர்நோக்கும் விளைவுகள்

சிபிஎஸ்இ வாரியமே தேர்வுகளை ரத்து செய்து விட்டது என்ற அழுத்தத்தில் தமிழ்நாடு அரசும் தேர்வுகளை ரத்து செய்தால் என்ன நடக்கும்? சிபிஎஸ்இ தேர்வு ரத்தில் இந்தச் சிக்கல் இல்லை. சிபிஎஸ்இ வாரியம் பரிந்துரைத்தவாறு அகமதிப்பீட்டு மதிப்பெண், 9,10 மற்றும் 11 மதிப்பெண்ணின் சராசரி அல்லது கூடுதல் மதிப்பெண் வேண்டும் என்று கூறுபவர்கள் பிரிதொரு தேதியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதலாம் என்ற நிலையை தமிழ்நாடு கடைப்பிடித்தால் என்ன நடக்கும்? 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தவிர, வேறு எந்தவொரு தேர்வுக்கும் எந்தப் பள்ளியிலும், தேர்வுகள் நடப்பதும், மதிப்பெண் வழங்குவதும், ஆவணங்களைப் பாதுகாப்பதும் ஒன்றுபோல் இருப்பதில்லை.

அரசுப் பள்ளிகளில் ஒரே மாதிரியான வழிமுறைகள் இருக்கலாம். அங்கும்கூட மாணவர்கள் சாதாரண தேர்வுகளை எழுதிய விதம், அதற்கு கொடுத்த முக்கியத்துவம், ஆசிரியர்களின் மதிப்பீடு எல்லாம் வேறு வேறாகவே இருக்கும். இதில் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மதிப்பெண்ணை உயர்த்திக் காட்டவும் வாய்ப்புகள் அதிகம். அதை எப்படிக் கண்டறிவது? அதற்கு என்ன கால அவகாசம்? பொதுத் தேர்வு மனநிலையில், மற்ற தேர்வுகளை எல்லாம் குறைத்து மதிப்பிட்டதில் பள்ளி மற்றும் மாணவர்களிடம் ஏற்பட்ட குறைகள்... இதை எப்படி சரிக்கட்டுவது? எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ் நாட்டின் மிக அதிக தேவையுள்ள தொழில்கல்வி படிப்புகளுக்கு சிபிஎஸ்இ பரிந்துரை செய்யும் வழிமுறைகளில் மதிப்பெண் கணக்கிடுவது பெரும் மதிப்பை ஏற்படுத்தும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு சாதகமாகவே சென்று முடியும். பெரும் குழப்பம் மற்றும் பாதிப்புகளைத் தரும் நிகழ்வே சென்று முடியும்.

தமிழ்நாடு அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

1) பெருந்தொற்று குறைந்த பிறகு, தக்க பாதுகாப்பு வழிமுறைகளோடு இரண்டு மாதங்கள் கழித்து நடத்தலாம். ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளை நடத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கும். அப்போது நமது மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நெருக்கடி ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகளைக் களைய, சிபிஎஸ்இ தீவிர ஆலோசனை செய்து, பிரதமரால் கைவிடப்பட்ட ஒன்றரை மணி நேரத் தேர்வு. குடியிருப்பு அருகில் தேர்வு மையங்கள், கேள்வித்தாள் முறையில் மாற்றம் போன்றவை பரிசீலனை செய்யலாம். பதினெட்டு வயது நெருங்கி வரும் வயதினர் என்பதால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தடுப்பூசி போட்டு தேர்வு எழுத வைக்க இயலுமா என்ற வாய்ப்பையும் உரிய விதத்தில் பரிசீலனை செய்யலாம்.

2) தற்போது 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து விட்டு, தொழில் கல்வியில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாத்திரம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துதல் என்ற முடிவைக் கூட எடுக்கலாம். 12ஆம் வகுப்புக்கு மாற்று முறையில் வழங்கும் மதிப்பெண்ணை வைத்து இதர உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பாதிப்புகளை ஆராய வேண்டும். அதற்கு விடைகளைத் தேட வேண்டும். பின்னரே 12ஆம் வகுப்பு தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்று யோசிக்க வேண்டும்.

3) சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்துக்குப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் வழி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மலினமாக்கும் முயற்சியும் அடங்கியுள்ளது. இதைத் தமிழ்நாடு அரசு எப்படி அணுகியது?

4) பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். கற்றல் வாய்ப்புகள் முற்றாக அவர்களுக்கு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதிலும் ஏழை எளிய மாணவர்கள், பழங்குடி மாணவர்கள், பட்டியலின மாணவர்கள், பெண் குழந்தைகள் மிக மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் அரசின் முடிவுகள் அமைய வேண்டும். கடைக்கோடி மனிதனுக்கும் நியாயம் வழங்கும்படி முடிவு எடுப்பதுதானே ஒரு மக்கள் நல அரசின் சிறந்த முடிவாக இருக்க முடியும்?

கட்டுரையாளர்

மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம். பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 4 ஜுன் 2021