மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ஓபிஎஸ் இல்லாமல் தனி கூட்டம் ஏன்?- எடப்பாடி பதில்!

ஓபிஎஸ் இல்லாமல்  தனி கூட்டம் ஏன்?- எடப்பாடி பதில்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான இடைவெளி, அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (ஜூன் 4) ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் கலந்துகொள்ளாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனியாக சென்னை அதிமுகவின் முக்கிய புள்ளிகளோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

ஓபிஎஸ் தேனியிலும், எடப்பாடி சேலத்திலும் இருந்தபடியே தனித்தனி அறிக்கை, பிரதமருக்கு கடிதம் என்று அரசியல் செய்து வந்த நிலையில் ஜூன் 2 ஆம் தேதி ஓபிஎஸ் சென்னைக்கு வந்தார். ஜூன் 3 ஆம் தேதி எடப்பாடியும் சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தார்.

பத்து வருடங்களாக தான் இருந்த அரசு பங்களா இப்போது தனக்கு இல்லாத நிலையில் சென்னை. தி.நகரில் புதிதாக ஒரு வீடு பார்த்து இன்று குடியேறினார் ஓபிஎஸ். இதற்கிடையில் நேற்று மாலை சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சென்னை மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு ஜூன் 4 ஆம் தேதி பகலில் அதிமுக தலைமைக் கழகத்துக்கு வர சொல்லியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் கலந்துகொள்ளவில்லை. அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் மாசெக்கள் ராஜேஷ், பாலகங்கா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயக்குமார் கலந்துகொண்டனர். கோகுல இந்திரா கலந்துகொள்ளவில்லை.

சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் இன்று இந்த கூட்டத்தை கூட்டி அதுகுறித்து ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாம் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக அமைதியாக இருப்பது போல ஒரு தோற்றம் இருக்கிறது. இதை நாம் நீடிக்க விடக் கூடாது. மாநில அளவில் மட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் அதிமுக எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். சசிகலாவிடம் யாரும் போக மாட்டார்கள். அதிமுக இனி சசிகலா இல்லாமலேயே நீடிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

சுமார் ஒருமணி நேரத்துக்குள் இந்த ஆலோசனை முடிந்துவிட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

“இன்று இந்த கூட்டத்தைக் கூட்டியதில் எந்த திட்டமும் இல்லை. இன்றைக்கு நல்ல நாள் என்பதால் தலைமை அலுவலகத்துக்கு முதன் முதலில் வந்தேன். அப்படியே சில நிர்வாகிகளையும் வரச் சொல்லியிருந்தேன். வேறு ஒன்றுமில்லை. ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் இன்றைக்கு புது வீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்கிறார் என்பதால் அவரால் வர முடியவில்லை. பல முக்கிய நிர்வாகிகள் எல்லாம் இன்றைக்கு வரவில்லை” என்று கூறியவர், சசிகலா பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“அந்த அம்மையார் அதிமுக கட்சியில் இல்லை. நடைபெற்ற சட்டன்றத் தேர்தலின்போதே அந்த அம்மையார் நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். இப்போது அவர் பேசியதாக சொல்வதெல்லாம் அதிமுக தொண்டர்களோடு அல்ல. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களோடு பேசியுள்ளார். அதிமுகவினரிடம் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது, சொல்லுங்கள்? அதிமுக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதை குழப்ப சிலர் முயற்சிக்கிறார்கள்” என்று கே.பி. முனுசாமி அளித்த பதிலையே அளித்தார் எடப்பாடி.

உங்களுக்கும் ஓ.பன்னீருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு சிரித்த எடப்பாடி பழனிசாமி,

“அவர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் நான் எதிர்க்கட்சித் தலைவர். ஏற்கனவே முதல்வராக இருந்தபோது எங்கள் அரசை அவர்கள் விமர்சித்தார்கள். இப்போது நான் அரசை விமர்சிக்கிறேன், மற்ற முக்கிய பிரச்சினைகளை அவர் (ஓபிஎஸ்) எழுப்புகிறார். அம்மா இருக்கின்றபோதே பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பெயரில் அறிக்கைகள் வந்திருக்கின்றன. இது புதிது கிடையாது. ஊடகங்கள்தான் பெரிதாக்குகிறீர்கள். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் கிடையாது”என்றும் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 4 ஜுன் 2021