மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வு: சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு!

பிளஸ் 2 தேர்வு: சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு!

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் தேர்வுகளை ரத்து செய்தன. தமிழகத்தில் பொதுத் தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பாகக் கடந்த இரு நாட்களாக மாணவர்களிடமும், கல்வியாளர்களிடமும், பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்புடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், எத்தனை பேர் கருத்து தெரிவித்தனர். எவ்வளவு பேர் தேர்வு நடத்தலாம் என்று கூறினார்கள். எவ்வளவு பேர் வேண்டாம் என்று கூறினார்கள், தேர்வு நடத்தினால் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்வது, என பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ”பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளிடமும் ஆலோசனைக் கேட்க முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி, நாளை மதியம் 12 முதல் 1 மணி வரை வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. சட்டமன்ற கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடனும், மனநல மருத்துவர்களுடனும் 1 -1.30 மணி வரை ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அனைத்து மாநிலத்தின் முடிவுகளையும் முதல்வர் கவனித்து வருகிறார். எனவே அனைத்து தரப்பினரின் ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் முடிவை அறிவிப்பார்.” என்றார்.

இதனிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

12ஆம் வகுப்புத் தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுகளுக்கும், வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும், வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கும் பிளஸ் 2 மதிப்பெண் அவசியமானதாகிறது.

பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும்.

நோய்த்தொற்றின் வேகம் குறைந்ததும், தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான கால அவகாசம் வழங்கலாம். அதற்கு முன், நடப்புக் கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டனவா என்பதை உறுதி செய்துகொள்வது மிக அவசியம்.

தேர்வு தாமதமாக நடத்தப்பட்டால் தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைவிடத் தேர்வை ரத்து செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதே கவனிக்கப்பட வேண்டியது.

சில மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்தபோதும், முறையான திட்டமிடுதலுடன் பொதுத் தேர்வை நடத்திக் காட்டியிருக்கிறது கேரள அரசு. கேரளத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தத் தயாராக வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மனிதவளத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைத் தீர்க்கமாக விவாதித்துச் சிறந்த முடிவைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், “பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வு நடத்தாமல் ஏதோவொரு முறையில் மதிப்பெண்கள் வழங்கினால் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும். இதனால் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையிலும் குளறுபடி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வு முடிவுகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு அனுப்பிய மனுவில், ’ஜூன் 2 முதல் 4 ஆம் தேதி பிற்பகல் 12 மணி வரையில் நடைபெற்ற ஆய்வில் 5193 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப்படையில், 61.4 சதவிகித பேர், தேர்வு வேண்டாம் என்றும், 38.6 சதவிகித பேர் தேர்வு நடத்த வேண்டும் என்றும் கூறினர். இதில், உயர் கல்வி சேர்க்கைக்காக 80.7 சதவிகித பேரும், வேலை வாய்ப்புக்காக 19.3 சதவிகித பேரும் தேர்வு தேவை என்று கூறினர்.

அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என 69.7 சதவிகித பேரும், இதுவரை நடந்த தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி இருக்க வேண்டும் என 30.3 சதவிகித பேரும் கருத்து தெரிவித்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 4 ஜுன் 2021