எது தேச துரோகம்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு -பத்திரிகையாளர்கள் வரவேற்பு!

politics

அரசின்மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்தியா முழுதும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 3) ) நீதிபதிகள் லலித், வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத் துவா என்ற பத்திரிகையாளர், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் கொரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி யு ட்யூப் வீடியோவில் கருத்து வெளியிட்டார். இதற்காக இமாசல பிரதேச பாஜக பிரமுகரின் புகாரின் பேரில் வினோத் துவா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது அம்மாநில போலீஸ்.

இதை எதிர்த்து வினோத் துவா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். கடந்த அக்டோபர் மாதம் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது.

அதில், “ பிரதமர் மோடி அரசின் செயல்பாடு குறித்து பத்திரிகையாளர் விமர்சிப்பது தேசத்துரோகத்தின் கீழ் ஒரு போதும் வராது. அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பது, உடனடியாக அதற்குத்தக்க பரிகாரம் தேவை; நிலைமைகளைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தானே தவிர, வேறு நோக்கத்தோடு அல்ல. எனவே, அது ஒரு போதும் அரசுக்கு எதிரான தேசத் துரோகக் குற்றம் ஆகாது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1962ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் கேதார்நாத்சிங் என்பவர் வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தேசத் துரோகக் குற்றச்சாட்டுகள் பற்றிய வழக்கில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையிலும், அதையொட்டி வந்த பல தீர்ப்புகளின் அடிப்படையிலும் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் வன்முறையை தூண்டுபவராக அரசுக்கு எதிராக அவர் கருத்து அமைந்தால் மட்டுமே குற்றச்சாற்றாக ஏற்க இயலும்.

அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்க எந்த குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் தெளிவாக விளக்கியிருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் எடுத்து வைக்கும் விமர்சனங்களையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே தேசத் துரோகம் – அரசுக்கு எதிராக 501, 505 போன்ற இ.பி.கோ. பிரிவுகளின்கீழ் வழக்குகள் போடுவது ஏற்புடையதல்ல என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பை தமிழகத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், “ஆளுவோர் – அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும், உள்நோக்கம் இல்லாமல் செய்யப்படும் வரை எந்த விமர்சனங்களையும் அவை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் – குற்றமாக அதைக் கருதக் கூடாது வரவேற்கவே வேண்டும். தங்களது போக்கில், நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால்தான், உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும்.

கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமையாக ஒவ்வொரு குடிமகனுக்கும் – மகளுக்கும் வழங்கியுள்ள அரசியல் சட்டத்தின் மீது ஆட்சிப் பொறுப்பேற்கும் ஆளுவோர் அரசியல் சட்டம்மீது பிரமாணம் எடுப்பதன் தத்துவம் அப்போதுதான் பொருள் உள்ளதாக அமையும். சிறப்பான தீர்ப்பு இது. உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ளது. ஜனநாயக காப்புரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்திய அளவிலான பத்திரிகையாளர் அமைப்புகளும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *