மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

பாரதியாரை விட பெரிய ஆளா மாலன்? நெல்லை கண்ணன் சீற்றம்!

பாரதியாரை விட பெரிய ஆளா மாலன்?  நெல்லை கண்ணன் சீற்றம்!

பத்திரிகையாளரும் தன்னை பாஜக ஆதரவாளராக வெளிப்படுத்திக் கொண்டவருமான மாலன் ஜூன்2 ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு என அழைக்க கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“Govt of Tamilnadu என்பதை தமிழ்நாடு அரசு என்று நம் மாநில அரசு அலுவல் பூர்வமான ஆவணங்களிலும், பொது வழக்கிலும் குறித்து வருகிறது. அதற்கு மாற்றாக தமிழக அரசு என்றும் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்றும் குறிக்குமாறும் அழைக்குமாறும் நாம் கோருவோம்.

அகம் என்ற சொல்லுக்கு மனம், இல்லம், வதிவிடம் எனப் பல இனிய அர்த்தங்கள் உண்டு. தமிழை அகத்தே கொண்ட பகுதி தமிழகம். தமிழகம் என்ற சொல் தமிழின் இல்லம் என்பதைக் குறிக்கும். ஒரு நாட்டில், ஏன் உலகிலேயே தமிழின் இல்லம் தமிழகம் என்ற தமிழ்நாடுதான்.அந்த நிலப்பகுதியை தமிழின் மனம், தமிழர்களின் மனம் என்றும் கொள்ளலாம்.

‘வையக வரைப்பில் தமிழகம்’ கேட்ப என்பது புறநானுற்றில் ஒரு வரி (பாடல் 168 வரி 18) பிட்டன் கொற்றன் என்ற ஒரு சிற்றரசனின் வள்ளல் தனமையை தமிழகம் முழுக்கப் பாடுவேன் என்கிறார் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார். ‘இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க; என்று தமிழகத்திற்கு எல்லை வகுக்கும் பதிற்றுப்பத்தின் வரியை இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய எனத் தமிழ் மொழி வழங்கிய பகுதிகள் அனைத்தையும் குறிக்கப் பயன்படுத்துகிறார்.

ஆனால் தமிழ் நாடு எனச் சொல் பண்டை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நானறியேன். தமிழ் கூறு நல்லுலகம், தமிழ் வரம்பு (வரம்பு=எல்லை) என்ற சொற்கள் உண்டு. தமிழ்நாட்டகம் என்ற ஒரு சொல் பரிபாடலில் உண்டு. ஆனால் அதிலும் அகம் என்பதும் இணைந்தே குறிக்கப்படுகிறது.

இன்று நமக்கு காவிரி கர்நாடகத்திலிருந்து வருகிறது. சென்னைக்கு கிருஷ்ணா ஆந்திரத்திலிருந்து வருகிறது. தடுப்பூசி தெலுங்கானாவிலிருந்தும், மராட்டியத்திலிருந்தும் வருகிறது. ஆக்சிஜன், ஒடிஷாவிலிருந்தும் ஜார்க்கண்டிலிருந்தும் வருகிறது. காய்,கனி, சமையலுக்குப் பயன்படுத்தும் பல பொருட்கள் வெளியிலிருந்து வருகின்றன. பலதுறைகளில் பணியாற்றும் மனித வளத்தை வெளியிலிருந்து பெற்று வருகிறோம்.

எனவே தமிழ் மரபைப் பின்பற்றி நம் மாநிலம் தமிழகம் என அழைக்கப்பட வேண்டும் என்றே அரசைக் கோருவோம். அரசு அவ்விதம் அறிவிக்கும் வரை நாம் தமிழ்நாடு என்ற சொல்லைத் தவிர்த்து தமிழகம் என்றே அழைத்து வருவோம். மாநில அரசை தமிழக அரசு என்றும் மத்திய அரசை இந்திய அரசு என்றும் அழைப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு சமூக தளங்கள் முழுதும் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு தமிழ்நாடு என்று அழைக்கப்பெறுவதற்கான வரலாற்று, அரசியல்,இலக்கியக் காரணங்களை பட்டியலிட்டனர்.

இந்நிலையில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் ஃபேஸ்புக்கில் மாலனுக்கு தக்க பதில் அளித்துள்ளார்.

“மாலன் என்ற ஒரு பையன் சொல்லுதாரு தமிழ்நாடுனு சொல்லக் கூடாதாம். கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்கம்பன்பிறந்த தமிழ்நாடுன்னு பாரதியார் பாடினாரே. அவரையெல்லாம் விட இவன் பெரிய ஆளா? தமிழ்நாடு காங்கிரஸ் என காங்கிரஸ் தலைவர்கள் மாற்றினார்களே அது? விருதுநகரில் தன் இன்னுயிரை நீத்தாரே சங்கரலிங்கனார்? மாலா மூடு வாயை”என்று ஏகவசனத்தில் மாலனை அழைத்து பதில் அளித்துள்ளார் நெல்லை கண்ணன்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 4 ஜுன் 2021