மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

முதல்வர் வீட்டுப் பாதுகாப்பு: சபரீசன் காட்டும் அக்கறை!

முதல்வர் வீட்டுப் பாதுகாப்பு: சபரீசன் காட்டும் அக்கறை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் பாதுகாப்புக்கு இருந்துவரும் காவலர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.

பொதுவாகவே தமிழகத்தில் முதலமைச்சர்களாக இருந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் குழுவில் பணியாற்றும் காவலர்களுக்கு கலவையான அனுபவங்கள் உள்ளன. அவர்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட சிறு கசப்புணர்வு கூட இப்போதைய முதல்வரின் பாதுகாப்பு குழுவினருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இம்முறை சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர்களுக்கான பாதுகாப்புக்காக கோர் செல் (core cell) என்ற ஒரு பிரிவு கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்த எஸ்.எஸ்.ஜி.என்ற பெரும் எண்ணிக்கையிலான போலீசாரை கொண்ட படையை குறைத்து கோர் செல் என்ற பிரிவு உண்டாக்கப்பட்டது. கோர் செல் என்பது முதல்வரின் பாதுகாப்புக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

கோர்செல் பிரிவு என்பது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு இதில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 ஆய்வாளர்கள் தலைமையில் 3 ஷிப்டுகளும் இயங்கும் வகையிலான பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

கடந்த காலங்களில் முதல்வர்கள் வீடுகளில் பாதுகாப்புகளுக்கு இருந்துவந்த காவலர்கள் என்ன நிலையில் இருந்தார்கள்?

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் தோட்டத்தில், காலை 7 முதல் மதியம் 1, மதியம் 1 முதல் இரவு 9, இரவு 9 - காலை 7 என மூன்று ஷிப்டாக டூட்டி பார்ப்போம், ஒரு ஷிப்டுக்கு 4+1, ஒருவர் சூப்பர்வைசராக இருப்பார். மற்ற நான்கு பேர் ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் துப்பாக்கியேந்தியபடி உட்காராமல் நின்றுகொண்டு டூட்டி பார்ப்போம். மேலும் எஸ்,ஐ, இன்ஸ்பெக்டர், ஏசி இருப்பார்கள். ஓய்வு எடுக்க போயஸ் கார்டன் எதிரில் காலியிடமும் ஒரு கட்டிடமும் இருந்தது. அங்கே பாத்ரூம், டாய்லெட், உறங்க இடம் அனைத்து வசதியும் இருந்தது, சாப்பாடு பொறுத்தவரையில் ஏ ஆர் கம்பெனியிலிருந்து வந்துவிடும், பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர் (பி எஸ் ஒ )இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருவர் இருப்பார்கள். அவர்கள் மட்டும் உள்ளேயே சாப்பிடுவார்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள z+ போலீஸார் அவர்களே சமைத்துக்கொள்ள அனைத்துவிதமான வசதிகளும் செய்துகொடுத்திருந்தார் ஜெயலலிதா,

ஜெயலலிதா வெளியில் சென்றால் கோர்சல் கட்டுப்பாட்டில் பத்துபேர் போவார்கள். போகும் இடங்களில் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்துகொடுப்பார்கள். ஜெயலலிதா வீட்டுக்குள் செல்லும்போது போலீஸ் சாப்பிட்டுட்டாங்களா என்று விசாரிப்பார்.

வீட்டை விட்டு கோட்டைக்கும் அல்லது வெளியில் போகும்போது எந்தெந்த போலீஸ் நிற்கிறார்கள், கட்சிகாரர்கள் தினந்தோறும் ஒரே இடத்தில் நின்றால் ஏன் அவர் தினந்தோறும் நிற்கிறார் என்று அழைத்து விசாரிப்பார், ரெகுலராக டூட்டி பார்க்கும் போலீஸ் அந்த இடத்தில் இல்லை என்றால் அவரை குறிப்பிட்டுக் கேட்பார் ஜெயலலிதா.

2016 இல் ராயப்பேட்டை ஏசி ஒருவர் மெயின் சிக்னலில் நிற்பார். அவரை மவுன்ட்டுக்கு மாற்றிவிட்டார்கள். ஒரு நாள் கோட்டைக்கு போகும்போது, ‘இந்த இடத்தில் பொட்டு வச்சிக்கிட்டு ஒரு ஏ.சி. இருப்பாரே... அவர் இல்லையா’என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா. இதையடுத்து அன்று மாலையே அந்த ஏ.சி.யை மீண்டும் ராயப்பேட்டைக்கு மாற்றி அதே பாயின்ட்டில் நிற்க வைத்திருந்தார் அப்போதிருந்த டிஜிபி.

இதுபோல் ஜெயலலிதா தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரிப்பார், பண்டிகை காலங்களில் புத்தாடைகளும் செலவுக்கு பணமும் கொடுப்பார்” என்று புகழ்ந்துதள்ளினார்கள்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது பாதுகாப்பு அளித்த போலீஸார் எப்படி?

“கலைஞர் முதல்வராக இருந்தபோது கோபாலபுரத்திலும் சிஐடி காலனியிலும் டூட்டி பார்த்த போலீஸாருக்கு போயஸ் கார்டன் போல இட வசதி இல்லை என்பதுதான் ஒரு குறை. இந்தியாவில் இருக்கும் பல மாநில முதல்வர்களிலேயே ‘ஸ்ட்ரீட் ஹவுஸ்’எனப்படும் தெரு வீட்டில் வசித்து வந்தவர் கலைஞர் மட்டும்தான்.. அதனால் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸாருக்கு இட வசதி சற்று குறைவாக இருந்தாலும் உணவு, பாத்ரூம் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அங்கே சமைத்து சாப்பிட முடியவில்லை என்றாலும் கொண்டு வரும் உணவுகளை வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். கலைஞரும் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடமும் பாதுகாப்பு போலீஸாரிடமும் அவ்வப்போது விசாரிப்பார். கலைஞருக்கு தனக்காக இவ்வளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் உடல் வருத்திக்கொண்டு ஈடுபடுகிறார்களே என்ற வருத்தம் இருக்கும். தன்னை ஒரு அதிகாரம் பொருந்திய நபர் போலீஸார் புடை சூழ சென்றால்தான் தனக்கு மரியாதை என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருந்ததில்லை கோபாலபுரம் வீட்டில் பின்னாலும் முன்னாலும் core cell எனப்படும் பாதுகாப்புப் போலீஸார் இருப்பார்கள்”என்கிறார்கள்.

இந்த நிலையில் இப்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வசிக்கும் சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க கிரி, பிரபாகரன் உட்பட மூன்று ஏசி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அட்மின் பார்ப்பார், இருவர் டூர் புரோக்ராம் பார்ப்பார்கள். ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு எஸ்.ஐ, 4+1 ஐந்து போலீஸார் என ஒவ்வொரு டூட்டிக்கும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூன்று ஷிப்ட்டு டூட்டி பார்க்கிறார்கள். அவர்கள் தவிர முதல்வருடன் செல்ல 8 சிஆர்பிஎஃப் போலீஸார் இருக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கும், பாதுகாப்பு போலீஸார் ஓய்வு எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் புதிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன், சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பாதுகாப்புக்கு இருக்கும் காவலர்களை அழைத்திருக்கிறார்,.

“ உங்களுக்கு என்ன தேவையோ என்னிடம் கேளுங்கள். நீங்கள் ஓய்வெடுக்க அறை, பாத் ரூம் உள்ளிட்ட வசதிகள் தயார் செய்து தருகிறோம். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கும் நீங்கள் எந்த மனக்குறையோடும் பணியாற்றக் கூடாது. அதனால் எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள். டூட்டி பார்க்கும்போது கட்சிகாரார்கள் மிரட்டினால் அல்லது கோபமாகப் பேசினால் என்னிடம் சொல்லுங்கள். உங்கள் பாதுகாப்பு பணியில் தளர்வு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார் சபரீசன்.

இதனால் முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் மகிழ்ச்சியாகியிருக்கிறார்கள்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வெள்ளி 4 ஜுன் 2021