மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வு : தமிழக அரசு என்ன முடிவெடுக்கும்?

பிளஸ் 2 தேர்வு : தமிழக அரசு என்ன முடிவெடுக்கும்?

பெற்றோர், ஆசிரியர்கள், துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டறிந்தபின் பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசின் முடிவை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, குஜராத், மத்திய பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

இரண்டு நாட்களில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நேற்று அறிவித்தார்.

இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பிளஸ் 2 தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது . தமிழ்நாடு அரசு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சி பொறியில் சிக்காமல் மாணவர் நலனை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் எதிர்கால வளர்ச்சி கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்தால் அது தகுதி திறமை பேசி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணை குத்தும். மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதியுள்ள மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய சட்டப்படி உரிமை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் .

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசின் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவற்றில் மேல்நிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கிறார். ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமாகும். மத்திய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழக கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும். தமிழகத்தில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேல்நிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? நடக்காதா என்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 3 ஜுன் 2021