மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக: முடிவுக்கு வந்த இழுபறி!

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக: முடிவுக்கு வந்த இழுபறி!

புதுச்சேரியில் அமைச்சர் பதவிகளைப் பகிர்வதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டதால், விரைவில் அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ஆம் தேதி முடிவு வந்தது. இதில் என்.ஆர். காங்கிரஸ் , பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சர்கள் பதவி ஏற்பதில் இழுபறி நீடித்தது.

துணை முதல்வர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுக்க, இதற்கு முதல்வர் ரங்கசாமி சிறிதும் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, உள்துறை, நிதி, சுகாதாரம், பொதுப்பணித் துறை என பாஜக அமைச்சர்களுக்குச் சரிபாதியாக முக்கியத் துறைகளைக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தது பாஜக.

இந்தநிலையில், பாஜகவுக்கு சபாநாயகர், இரண்டு அமைச்சர்கள் பதவி அளிக்க ஒப்புக்கொண்டார் முதல்வர் ரங்கசாமி. ரங்கசாமிக்கும் பாஜகவினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.

தொடர்ந்து, நேற்று (ஜூன் 2) பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக எம்.எல்.ஏ நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

இதன்பிறகு சாமிநாதன் கூறுகையில், “என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அமைச்சரவையில், பாஜகவுக்குச் சபாநாயகர் பதவியும், அமைச்சர்கள் பதவியும் கொடுக்க உடன்பாடு ஏற்பட்டது. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அமைச்சர்களுக்கு என்ன பதவி, எத்தனை அமைச்சர்கள், சபாநாயகர் யார் என்ற விவரங்களைக் கட்சி மேலிடம் அறிவிக்கும்” என்று தெரிவித்தார். என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே சுமூக உறவு உள்ளது. இதில் எந்த குழப்பத்துக்கும் இடம் கிடையாது. விரைவில் அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியைச் சந்தித்து, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த, புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், நமச்சிவாயம், உள்ளிட்டோர் திடீரென பெங்களூரு சென்றுள்ளனர்.

கடந்த 25 நாட்களாக என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், வரும் 14ஆம் தேதி அமைச்சரவை பொறுப்பேற்கும் என்று புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 3 ஜுன் 2021